சொந்தமாக வாங்கியோ, பரிசாக அடைந்தோ, இரவலாகப் பெற்றோ அல்லது நூலகம் மூலமாக வாங்கியோ-
பிடித்தோ பிடிக்காமலோ-
ஒரே மூச்சிலோ அல்லது வசதியான தவணைகளிலோ, அச்சு வடிவான
புத்தகமாகவோ அல்லது மின்நூலாகவோ,
நாம் எத்தனையோ புத்தகங்களைப் வாசிக்கிறோம்.
எல்லா புத்தகங்களும் நம்மை கவர்வதில்லை. ஈர்ப்பதில்லை.
சில எழுத்தாளர்கள் எதை எழுதினாலும் படிக்கிறோம். மற்றவர்களின் படைப்புக்களையோ யாரும் பரிந்துரைத்தால் மட்டுமே படிக்கிறோம். மற்றும் சில நூல்களை பயணம், காத்திருத்தல் போன்ற தருணங்களில் மட்டுமே புரட்டுகிறோம்.
சில புத்தகங்கள் நம்மை அப்படியே புரட்டிப்போட்டுவிடுகின்றன. சில நூல்கள் மயிலிறகாய் நம் மனதை வருடுகின்றன. சில புத்தகங்கள் நம்மைச் செம்மைப் படுத்துகின்றன. சில நூல்கள் நமக்கு வழிகாட்டியாகின்றன.
நான் புத்தகங்கள் நிறையப் படித்தவன்தான். குறு நூலகம் ஒன்று எங்கள் இல்லத்தில் நிரந்தர கொலு வீற்றிருக்கிறது. ஆனால் தற்போது எனக்குள்ள வாசிப்பு ஆர்வம் பார்க்கும் புத்தகத்தின் கருப்பொருளைப் பொருத்தே அமைகிறது.
சமீபத்தில் நான் படித்த இரண்டு புத்தகங்கள் என்னை மிகவும் கவர்ந்தவை என்பேன்.
1. The Zahir - Paulo Coelho எழுதியது.
அது ஒரு புதினம். அதன் வாசிப்பு அனுபவம் அலாதியானது. அதை மற்றொரு தருணத்தில் பகிர்கிறேன்.
2. Wise and Other Wise. Sudha Murthy எழுதியது.
மூத்த வழக்குரைஞர் திரு. A. ஆறுமுகம் அவர்கள் என் மகளுக்காகப் பரிந்துரைத்துக் கொடுத்த புத்தகம். என்னையும் படிக்கச் சொன்னார். செய்தேன்.
நெகிழ்ந்து போய் நிற்கிறேன். அது ஒரு நெடுங்கதையோ, கவிதையோ அல்லது காவியமோ அல்ல. நாளிதழ்களில் அவர் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு.
புத்தகத்தின் முதற் சிறப்பு அதன் எளிமையான நடைதான். தான் சந்தித்த மனிதர்களிடமிருந்தும் தனக்கேற்பட்ட அனுபவங்களிலிருந்தும் தன்னைப் பாதித்த நிகழ்வுகளிலிருந்தும் பல விஷயங்களை அவர் எளிமையாகவம் அதே சமயம் தெளிவாகவும் பதிவு செய்துள்ள பாங்கு சிறப்பானது.
இந்தியாவில் கன்னித் தாய்களின் அவல நிலை குறித்த கருத்தாகட்டும், தன்னம்பிக்கையின் அருமை குறித்த கட்டுரையாகட்டும், ஸ்காண்டிநேவிய நாடுகளில் பெண்களுக்குரிய சம உரிமை பற்றிய பார்வையாகட்டும், சமூகத்தில் ஆசிரியர்கள் முன்மாதிரியாகத் திகழ வேண்டியதைக் குறித்த கருத்தாகட்டும், விலைமாதுக்களின் மறுவாழ்வுக்கான வழியாகட்டும், நோபல் பரிசு பற்றிய எழுத்தாகட்டும், மிண்ணணுக்கருவிகளில் இளைய சமுதாயம் முடங்கியுள்ளதைப் பற்றிய கருத்தாகட்டும், மழையில் ஆடிக்களித்த பிச்சைக்காரனிடம் வாழ்க்கைப்பாடம் கற்ற ஒரு பெண்ணின் கதையாகட்டும், ஜான்சி ராணி பற்றி ஏதுமறியா இளைய தலைமுறையைப் பற்றிய கட்டுரையாகட்டும், தொழு நோயாளிகளைப் பற்றிய கரிசனமாகட்டும், அடுத்த தலைமுறையின் தன்னம்பிக்கை பற்றிய பெருமிதமாகட்டும், சுதா மூர்த்தி அவர்களின் பார்வையும் தெளிவும் புதிது.
வயது வித்தியாசம் பாராமல் படிக்கவேண்டிய மற்றும் பரிசளிக்கத்தக்க புத்தகம். வாசிக்க வேண்டியது அவசியம் என்பேன்.
A deserving salute to life. Her life too.