Monday, 14 November 2016

நித்ரா

எந்நாளும் இழந்ததாய்
கிஞ்சித்தும் நினைவில்லை.
விழி மூடி மறுகணம்
மனம் உறங்கச் சென்றவன்தான்.
கனவேதும் கண்டதாய்
நினைவேதும் இருந்ததில்லை.

பசியோடு படுத்தாலும்
பழியோடு படுத்தாலும்
விழிமூட மறந்தேனில்லை.
கருக்கலில் விழித்தேனில்லை.

எப்பேதை ஏதுரைத்த போதிலும்
எப்போதை வழிமறித்த போதிலும்
நப்பாசை கொண்டதில்லை.
ஒப்பாரி வைத்ததில்லை.

கொண்டோர் ஒதுக்கியதும்
கண்டோர் தாங்கியதும்
மண்டையைத் துளைத்தறியேன்.
மனமது களைத்தறியேன்.

கண் கண்ட விபத்து நூறு.
செவி விழுங்கிய அமிலம் ஆறு.
ஆனாலும் ஒருநாளும்
ஏழுமணி உறக்கம் மறுத்தறியேன்.

உவகைக்கு குறைவில்லை.
வசதியும் பொருட்டில்லை.
உறக்கம் மட்டும் கண்கட்டி
கண்ணாமூச்சி ஆனதின்று.

கட்டியணைத்து உச்சிமுகரும்
நித்திராதேவியவள்
என்னை மட்டும் விட்டு
மாற்று மனம் தேடுவதேன்.

யானறிந்து தீங்கேதும்
யாருக்கேதும் இழைத்ததாக
எவரேனும் சாட்டுரைத்தால்
பற்றி அழுவேனோ,
சடலக்கூறு செய்வேனோ.

உலகெங்கும் உறங்கிவிடும்
நள்ளிரவின் உச்சத்தில்
எள்ளி நகைக்கும்
மனதுக்கு ஒன்று மட்டும்
புரிகிறது.

தனியனாய் இன்றி
தனிமையாய் இருத்தல்
சென்று வர இனிது.
தங்கிவிடல் கொடிது.