அந்த அவன்
நெடுஞ்சாலையின்
நடுவே கொளுத்தும் வெயிலில்
அமர்ந்திருக்கிறான்.
ஈக்களற்று காய்ந்து
நசுங்கிக் கிடக்கிறது
பிச்சையில்லாத
தட்டு.
ஒட்டிப் போன கூட்டின்மேல்
சதைப் போர்வை
சுருங்கியிருக்க
குருதி வடிந்திருந்தது.
குறுக்கிலும் நெடுகிலும்
விரைந்தன
சட்டைசெய்யாத
வாகனங்கள்.
முகத்தை சுளித்தன பலர்.
அவனின் அரை நிர்வாணம்
பார்த்துவிடக்
கூடாததாகக் கருதப்பட்டு
குழந்தைகளின் முகங்கள்
திசை திருப்பப்பட்டன.
யாருக்கும் விலகியறியாத
பெரும்புள்ளி வாகனங்கள்
அப்போது
விலகிச் சென்றன.
என்னப்பா செய்யறான்?
என்ற கேள்விகளை
நன்கு உண்டு விட்ட
எல்லோரும் புறக்கணித்தனர்.
செத்துப் போயிட்டானோ?
எடுத்துப் போட மாட்டாரோ?
என மாநகராட்சியை
வசை பாடிய யாரும்
அவன் உயிரோடு இருப்பதை
விரும்பவில்லை.
நாயும் சீந்தாத அவனை
காவல் துறை
நல்லவேளை
ஒரு எதிரியாகக்
கருதவில்லை.
சிக்னலில் காத்திருந்த பொழுதில்
அவன் வீடெங்கே?
அவனுக்கான சோறெங்கே?
என்று பின்னிருக்கையிலிருந்து
கேட்ட மகளிடம்
யாருமில்லை போல,
நம்ம வீட்டுக்கு கூட்டிட்டுப்
போலாமா? என்று
யாரோ ஒரு
அப்பன் சொன்னான்.
அய்யய்யோ என்றாள் அவள்.
எல்லோரும்
எதையோ எங்கேயோ
தொலைத்து விட்டு
அதைத் தேடி
விரைவது போலே
சென்றார்கள்.
அவனைக்கடந்து சென்ற
அந்த மூன்று வினாடி காலத்தில்
அவனின் முகத்தில்
தெரிந்த அந்த
அரை இஞ்ச் பரிகாசம்
யாரைப்பற்றியது?