Saturday, 29 July 2017

தமிழ் வாழ்க...

'மம்மி..............' என்றழைத்து
குழந்தை
கழுத்தைக் கட்டிக்கொண்ட
வேளையில்
'அம்மா..................'
என்றழைத்தது ஒரு குரல்.
வாசலில்
பிச்சை.
பக்கத்து வீட்டில்
மாடு.

Monday, 3 July 2017

அபிமானம்

ஞாயிறு அதிகாலை தனித்து இன்னிசை  மழையில் நனைவது என் நீண்ட நாள் வழக்கம்.  அந்த தருணத்தில் அந்தப் பாடல் அல்லது இசையோடு தொடர்பான நிகழ்வுகள் முகிழ்த்தால் சுகமாக அசை போடுவதும் நடக்கும்.

இன்று இந்த fusion ரகப் பாடலை ரசித்துக் கொண்டிருந்த போது என் நினைவில் வந்தவர் என் தாய்வழிப்பாட்டியான அமரர் செங்கமலம்.

படித்தது ஆறாவது வரைதான். பால்ய விவாகம். சுதந்திரம் தரப்படாத சூழ்நிலை. நாற்பதில் விதவை.

அவரது பன்கலைத் திறமைகள் அபாரமானவை. நல்லதையும் அன்பையும் தவிர வேறு ஏதும் அறியாதவர். கவிஞர். ராகமும் தாளமும் இயைந்து அவர் சொந்த மாக இயற்றிய பக்திக் கீர்த்தனைகள் எண்ணற்றவை. சிறுகதைகள் எழுதினார். கர்நாடக இசையில் விற்பன்னர். கோலம் வரையும் கலையில் ஜாம்பவான்.

குழந்தைகளுக்கு அவரைப் போலச் சுவையாகக் கதைகள் சொல்வதில் நிகரற்றவர். சிந்தனைகளில் பத்தாம்பசலித்தனத்தை உதறியவர்.

ஒரு நாள். ஒரு சத்திய நாரயணா பூஜையன்று என்று நினைவு. இந்தப் பாடலைப் பாடினார். குடத்திலிட்ட விளக்கைப்போல. அதிராத மெல்லிய இனிமையான குரலில்.

இப் பாடல் மருகேலரா ஓ ராகவா எனத் துவங்கும் தியாகய்யரின் கீர்த்தனை. என் தாத்தா பெயர் ராகவன் ஆயிற்றே. கணவனின் பெயரை மனைவி உச்சரிக்கத் தயங்கும் காலம்.

மருகேலரா ஓ ராமா என்று பாடினார்.

ஏன் பாட்டி, மாற்றிப் பாடினாய் என்று கேட்டேன்.

சற்றே வெட்கம் கலந்த மில்லி மீட்டரில் ஒரு மெல்லிய புன்னகையைப் பதிலாய்த் தந்தார். என் கன்னத்தைத் தட்டிக் கொடுத்தார்.

'அபிமானத்தை எப்படியும் காட்டலாம் சுந்தர், உனக்கு பின்னாடி புரியும்' என்றார்.

போன வாரம் தொடர்யிரத நிலையத்தில் ஒரு ஜோடியைப் பார்த்தேன். அன்னியோன்னியமான ஜோடி. கணவனை அவர் வார்த்தைக்கு வார்த்தை 'டா' போட்டு அவர் பேசியதே ஒரு தனி அழகு.

என் பாட்டி 1975ல் சென்னதற்கான அர்த்தம் எனக்கு அப்போது தான் புரிந்தது.

அன்பிற்கும் உண்டோ.......?