கருப்புக்கு ஆசைப்பட்டாய்.
பின்னர் காக்கியைத் தேர்ந்தாய்.
தற்போது வெள்ளைக்கு
மாறிவிட்டாய்.
நீ உடன் இல்லாத
இல்லத்தில் நான்
சில நேரம் அலையாகவும்
சில நேரம் கரையாகவும்
மாறிக் கொள்கிறேன்...
தொலைபேசித் தொலைவே
என்றாலும்
நீ
எதிரில் இல்லாத போது
காலத்தை என் மனது
சபிக்கிறது.
சல்லடையைப் போல
பிரிவைத் தள்ளிவிட்டு
புன்னகையைப்
புறங்காட்டி
நான் நடக்கிறேன்.
உன் அம்மாவோ
ஒரு முறம் போல
பெருமிதத்தை
உள் ஒளித்து
கவலையை
மறைக்கத் தெரியாமல்
தவிக்கிறாள்...
அம்புகளைப் போலவாம்
மகள்கள்.
வில்லுக்கு
அவை சொந்தமல்லவாம்...
வேங்குழலிருந்து பிறக்கும் நாதம் யாருக்குச் சொந்தம்?
ஒருவழியாக
ஒரு
முடிவெடுத்துவிட்டேன்..
கெஞ்சியோ, கொஞ்சியோ,
எப்படியோ,
வருங்காலத்தில்
வீட்டோடு மாமனாராக
எனக்கு முழுச்
சம்மதம்.