Thursday, 30 May 2019

நீ, நான், மழை, நிலா...

வாகனம் முன்னோக்கியும்
நினைவுகள் பின்னோக்கியும்
விரையும் பொழுதுகளில்
தனிமைக்குத் துணையாய்
கூடவே வருவாய்.

துயில் இழந்த இரவுகளில்
மனம் குளிர
மர நிழலாய் சாலையில்
கோலம் இடுவாய்.

மழைத்தாரைகள்
மண்ணில் ஓடுகையில்
அதனூடே மிதந்து நகர்ந்து
மனதை நனைத்துச் செல்வாய்.

அவளும் நானும்
சந்திக்கும் போது
அழையா ஒற்றனாய்
தூரத்தில் காத்திருப்பாய்.

உன் ஒளியில் நனைந்தபடி
கைகோர்த்து நடை போட்ட
தருணங்களில்
மரங்களிலும் மலைகளிலும்
ஒளிந்தும் மறைந்தும்
மகிழ்விப்பாய்.

ஆனால்
நேற்றிரவில்
விழிகளில் நீர் சிந்தி
தளர்நடையாய்
அவள் அகன்று
சென்ற போது மட்டும்
நீ ஏன்
முகில் கொண்டு
மறைந்து கொண்டாய்?