உலகம் விழித்தது.
பறவைகள்
கரைந்தன.
பூக்கள் சிரித்தன.
சில மனிதர்கள்
மட்டும் நடந்தனர்.
நாய்களில் சில
சினமுற்றன.
சூரியனைப் பார்த்துக்
குரைத்துத் தீர்த்தன.
சூரியன் நகர்ந்தது.
உலகம் உருண்டது.
உச்சிக்குப் போனது
சூரியன்.
நாய்கள் அடங்கிய
பாடில்லை.
நாவுகள் வறண்டு
களைத்துப் போயின
சில
நண்பகல் நாய்கள்.
சாயுங்காலம் வந்தது.
வானம் வண்ணம்
தரித்தது.
சூரியன் விலகிச்
சென்றது.
நாய்களுக்கோ
கோபம் ஆறவில்லை.
கத்திய நாய்களை
யாருமே சீந்தாத
கோபம் வேறு சேர
மீண்டும் மீண்டும்
குரைத்து களைத்தன.
இருள் வந்ததும்
நாய்களுக்கு
வந்த மகிழ்ச்சியோ
நிலா வந்ததும்
தொலைந்து போனது.
திரும்பவும் உரத்துக்
குரைக்கத் தொடங்கின அந்த
நடு நிசி நாய்கள்.
கதவுகளைச்
சார்த்திக் கொண்டு
கூடுகளுக்குள்ளும்
வீடுகளுக்குள்ளும்
அடைந்து கொண்டது
உலகம்.
சூரியனையே
நினைத்தபடி
அந்த சில நாய்கள்
இன்னும்
குரைத்துக்கொண்டே
இருக்கின்றன.
சிலர் சில
கதவுகளில் தொங்க
விடப்பட்டிருந்த
வாசகங்களைப்
பார்த்துவிட்டு
சிரித்துக் கொண்டார்கள்.
இப்படியாக
ஒரு சூரியனும்
சில நாய்களுமாக
எல்லாம் கடந்து
போய்க்
கொண்டிருக்க
மீண்டும்
சூரியன் உதித்தது....