Sunday, 16 October 2016

சாயும் காலம்

அந்தி மாலை
இயற்கை
களை கட்டும்.

எட்டிப்பிடிக்கத்
தூண்டும் மரங்கள்
யாருக்கோ
சாமரம் வீசும்.

எட்டாத தொலைவில்
விண்மீன்கள்
யாருக்கோ
கண் சிமிட்டும்.

பகலவனோடு
ஊடல் கொண்ட
முகில் பொதிகள்
விலகியோடும்.

முகிலோடு
கோபம் கொண்ட
ஆதவன்
மண்மகளிடம்
தஞ்சமடைந்து
மடிசாயும்.

அவசரமாக
மஞ்சள் வானம்
தன் சரிகை
உடை மாற்றும்.

மேகத்தலைப்பை
விலக்கித் தலைகாட்டி
நிலவென்னும்
நல்லாள்
நாணும்.

தயங்கித் தயங்கி
செயற்கை ஒளி
மினுக்கத்
துவங்கும்.

கால்நடைகள்
அசை போட்டபடி
சோர்ந்து
பூனை நடைபோடும்.

பரவசப் பறவைகள்
இலவச
இளையராஜாக்கள்
ஆகிவிடும்.

அட மானிடா,
பார்த்ததில்லையா?

சரி, போகட்டும்.
இன்றாவது
உனது
அகக் கண்ணையும்
திற.

இயற்கையின்
மொழிபெயர்ப்பாளர்கள்
பறவைகள்
என்ற ரகசியம்
இன்று உனக்குப்
புலப்படும்.

காதலியின் வாசம் போல
காற்றின் வாசம்
உன் சுவாசத்தைச்
செப்பனிடும்.

புறத்தில்
இருள் கவிந்து
அகத்தில்
ஒளி வரும்.

அப்போது
சில்லென்ற காற்றாய்
முகம் அறைந்து
இவ்வுலகம் கேட்கும்.

'சொர்க்கம் என்ன
விண்ணிலா
உள்ளது?'

Monday, 10 October 2016

மற

நினைக்கத் தெரிந்த
மனங்கள்
மறக்கவும்
மறுக்கவும்
பழகிக்கொள்கின்றன.

ராத்திரியில்
பெய்யும் மழைக்கு
ஏது
வானவில்?

விளி

தனியாய்க் கிடந்தேன்.

என்ன இது மெளனம்
என்றபடி
தனிமையும்
சேர்ந்து கொண்டது.

உன்னுடன் தானே
இருக்கிறேன் தனியாக,
நீ வந்தால் தான்
தெளிவு என்றேன்.

அய்யோ, நான்
தங்கிவிட்டால்
அழிவு என்றது தனிமை.

பேசினோம்.
சிரித்தோம்.
ரசித்தோம்.
நிறைய.

அழுதோம்
என்று கூட ஞாபகம்.

ஆனால் என்ன,
எல்லாமே
மெளனமாக.

'ஹோ' என்ற இரைச்சலோடு
காற்றைக் கிழித்துக் கொண்டு தனிமை விடைபெற்றது,
மெளனத்தை
விட்டு விட்டு.

சிரித்துக்கொண்டேன்
நான்,
மெளனத்தின்
கரம் பற்றியவனாய்.

என்ன அங்கே சத்தம்
என்று உள்ளிருந்து
இன்னொரு சத்தம் கேட்டது.
ஏதோ முனகியிருப்பேன்
போலும்.

ஒன்றுமில்லை என்று
சொல்லிவிட்டு
பழையபடி
மெளனமானேன்.

Sunday, 2 October 2016

துறவு

என்ன சொல்லியிருப்பாய்
சித்தார்த்தா?
உன் துறவு
அவளையும்
சேர்த்தே என்றா?