நான் எழுதிய ஒரு கட்டுரையை இங்கே பதிவிடுவற்கு முன் அதிலிருந்த சில பிழைகளைத் திருத்திக் கொண்டிருந்தேன். அப்போது என் மகளும் உடனிருந்தார்.
'வாழ்த்துகள்' என்பது சரியா? அல்லது 'வாழ்த்துக்களா?' என்று கேட்டார்.
வாழ்த்துக்கு பன்மையில் வலி மிகாது, வாழ்த்துகள் என்பதே சரி என்ற பதில் எனக்கு முன்பே தெரிந்திருந்தது என்பதால் சொன்னேன்.
'ஒரு' என்ற சொல் எப்போது வரும்?
ஏன் அந்த இடத்தில் 'ஓர்' என்ற சொல்லைப் பயன்படுத்தினீர்கள்? என்ற கேள்விகளைக் கேட்டார்.
சொன்னேன்.
உயிர் எழுத்துக்களைக் கொண்டு தொடங்கும் சொற்களுக்கு முன்னால்
"ஓர்" மட்டுமே வரும். உயிர்மெய் எழுத்துக்களைக் கொண்டு தொடங்கும் சொற்களுக்கு முன்னால் மட்டுமே 'ஒரு' பயன்படுத்த வேண்டும்.
ஆங்கிலத்தில் "an" என்ற 'article' a,e,i,o,u ஆகியவற்றுக்கு முன்னால் மட்டும் வருவது போல என்பது எனக்குத் தெரிந்திருந்ததால் சொன்னேன்.
அடுத்ததாக 'அல்ல' மற்றும் 'அன்று' ஆகிய சொற்கள் எவ்வாறு பயன்
படுத்தப்பட வேண்டும் என்ற ஐயம் எழுந்தது.
சொன்னேன்.
'அன்று' என்பது ஒருமைக்கும் 'அல்ல' என்பது பன்மைக்கும் பொருந்தும் என்பது எனக்குத் தெரிந்திருந்த காரணத்தினால் சொன்னேன்.
நண்பர் ஒருவரின் பதிவொன்றைப் படித்தபோது அதில் ஒர் இடத்தில் ஏற்பட்டிருந்த சந்திப் பிழையைச் சொல்லி தமிழில் தற்காலத்தில் எல்லோராலும் பரவலாகச் செய்யப்படும் பிழையென அதைச் சொன்னேன்.
'அதை எங்ஙனம் களைவது?' என்ற அவரின் கேள்விக்கு என்னிடம் பதில் இல்லை.
இன்னும் தமிழில் உள்ள பல ஐயங்களுக்கு என்னிடம் பதில் இல்லை. அப்படியென்றால் நான் எழுதும் தமிழ் பிழையானதா என்றால் ஆம் என்பதே உண்மை.
வெட்கத்துக்குரிய உண்மை.
பல ஐயங்களுக்கு பதில் தெரியாமலேயே நாம் தமிழைப் பேசியும் எழுதியும் வருவது முறையா?
'வலி மிகும்' இடங்களும் 'வலி மிகா' இடங்களும் "கள்வரே கள்வரே" திரையிசைப் பாடலில் வைரமுத்து எழுதிய பிறகு தான் பலருக்கு தெரிந்திருக்கிறது.
மிக்க குற்றவுணர்வுடன் எங்கள் இல்லத்தில் உள்ள குறு நூலகத்தை நாடினேன். தேடினேன்.
இந்த இரண்டு புத்தகங்களும் கிடைத்தன. இத்துணை நாட்களும் அந்தப் புத்தகங்களைத் தொடக்கூட இல்லையே என வருந்தினேன்.
"தமிழ் இலக்கணம்- ஒரு எளிய அறிமுகம்" என்ற புத்தகம் திரு. கோ. குமரன் அவர்கள் எழுதியது.
சந்தியா பதிப்பகத்தின் வெளியீடு.
தமிழ் இலக்கணத்தை எளிமைப் படுத்தி அந்தச் சிறிய நூலை எழுதியிருக்கிறார்.
'ஜாலியா தமிழ் இலக்கணம்' என்ற கிழக்கு பதிப்பகத்தின் புத்தகம் இலவசக் கொத்தனாரால் எழுதப்பட்டது. நூலின் பெயருக்கேற்ப 'தங்கிலீஷ்' கலந்த நடையில் உரையாடலாக எழுதப்பட்ட இப்புத்தகம் இளைஞர்களுக்கு ஏற்றபடி உள்ளது. அங்கங்கே குறும்பு கூத்தாடும் நடை அதன் வாசிப்பை சுவாரசியமானதாக ஆக்கியுள்ளது.
இரண்டு புத்தகங்களும் அளவில் சிறியவை. படைப்பில் எளியவை. படிக்கச் சிறந்தவை.
குற்றியலுகரம், சார்பெழுத்து, மூவகைப் போலிகள், வேற்றுமை உருபுகள், ஆய்தக் குறுக்கம், மாத்திரை, யாப்பு இலக்கணம், வஞ்சப் புகழ்ச்சி அணி, ஆசிரியப்பா, ஆகுபெயர், வினைத்தொகை, சந்திப்பிழை, மரபுத் தொடர்கள், வியங்கோள் வினைமுற்று, இரட்டைக்கிளவி என நாம் பள்ளியில் கற்றதெல்லாம் மனத்திரையில் ஓடுவது உத்தரவாதம்.
ஒன்று சத்தியம், தமிழின் பெருமை அதைப் பிழைகளற்றுப் பேசுவதிலும் எழுதுவதிலும் தான் இருக்கிறது.
வெறும் வாய்ச்சொல்லில் வீரனாக இருப்பதில் இல்லை.
இல்லையென்றால் 'வாத்தியார்' சுஜாதா சொன்னதைப் போல ' மிஸ் தமிழ்த் தாயே நமஸ்காரம்' தான் மிஞ்சும்.
தமிழன்னைக்கு வணக்கம்!