Tuesday, 10 October 2017

திதி

உயிரோடு இருந்தேன். 
கேட்க நாதியில்லை. 
செத்துத் தொலைந்தேன். 
இந்த ஜடத்திற்கு 
பிடித்ததெல்லாம் படையலானது.

சுடுகாட்டு மண்ணில் 
என் சாம்பலின் 
சூடு ஆறும் முன்பே 
என் மனைவி 
யாரிடம் இருக்கலாம் என்றொரு 
பாகப்பிரிவினை நடந்தது.

பேத்தி வாங்கிய 
பரிசுக் கோப்பையை 
அடுக்கிவைக்க இடமில்லாததால்
என் மூக்குக் கண்ணாடி அலமாரியிலிருந்து 
முச்சந்திக்கு போனது.

உறைந்த சிரிப்புடன் 
நான் இருக்கும்
புகைப் படத்தில் இருந்த
அந்தச் சந்தன மாலையும் பின்னொரு நாளில்
என் மனைவியின்
படத்துக்கு இடம் மாறியது.

ஒரு சுபயோக
சுப தினத்தில்
கீழே விழுந்து
உடைந்து போன
அந்தப் புகைப்படமும்
பரணுக்கு
வழியனுப்பப்பட்டது.

சிம்லா-மணாலி
குடும்பச் சுற்றுலா
குறுக்கிட்டதால்
என் வருஷ திவசமும்
தேதி குறிப்பிடாமல்
ஒத்தி வைக்கப்பட்டது.

அமாவாசையன்று
பக்கத்து வீட்டு ராவுத்தர் பெண்டாட்டி
மிச்சமென்று விட்டெறிந்த
சிக்கன் பிரியாணியைக் 
கொத்தித் தின்றுவிட்டு 
இவ்வீட்டு திதிக்கான 
சோற்று
உருண்டையைப் 
பதம் பார்க்கக் காத்திருக்கும் 
அந்தக்
காக்கை அறியுமோ 
இக்கதையை?

No comments:

Post a Comment