Wednesday, 21 February 2018

வலி சூழ் நேசம்

உயிரினும் மேலாக
நாம்
காதலித்தோம்.
உண்மைதான்.

ஆனாலும் எனக்கு
உன்னை விட
என் உயிர்தான்
முக்கியம்.

பின் என்ன,
உயிரோடு இல்லாமல்
உன்னை நான்
எப்படி நேசிக்க முடியும்?
-
மருண்ட உன் விழிகள்
அழகு தான்;
ஆனாலும் அவற்றை விட
என் விழிகளின்
மீது தான் எனக்கு
கொள்ளைப் பிரியம்.

பின் என்ன,
என் விழிகளன்றி
உன் விழிகளை
நான் எப்படிப்
பார்க்க முடியும்?
-
என்னை மறந்துவிடு
என்று நீ கேட்ட போது
சரி
என்று தான்
சொன்னேன்.

பின் என்ன,
இவ்வுலகில்
ஏதோ ஒரு மூலையில்
நீ  யாருடனாவது
மகிழ்ச்சியாய்
வாழ்ந்தாலே
என் அன்பு
ஜெயிக்கும் அல்லவா?
-
என் மகளுக்கு
உன் பெயரைச்
சூட்டவே மாட்டேன்.

பின் என்ன,
கனவிலும் கூட
அவளை என்னால்
கடிந்து கொள்ள
முடியாது அல்லவா?
-

Miss. தமிழ்த்தாயே, நமஸ்காரம்..

வேதாசலம் @ மறைமலை அடிகள், திருமாவளவன்,  கவிஞர்
மகுடேசுவரன்,  கவிஞர் வைரமுத்து ஆகியோர்களின் 'தமிழில் மட்டுமே பெயர் சூட்டுக' என்ற கோரிக்கை இந்து மதத்தினருக்கு மட்டும் தானா?

இல்லை அது ஒரு சர்வ மதக் கோரிக்கையா?

------

இன்று உலகத் தாய்மொழி தினம்.

-------

போன வாரம் தமிழ் இந்துவில் வெளியான மறைமலை அடிகளைப் பற்றி வைரமுத்து எழுதிய கட்டுரையைப் படித்தீர்களா?

------

கடந்த வருடம் விகடன் ' தடம்' இதழில் கவிஞர் மகுடேசுவரன் அவர்கள் எழுதிய ' பெயர் வைக்கும் பேறு' கட்டுரையைப் படித்தவுடன் நினைவிடுக்கின் ஆழத்திலிருந்து இச் சம்பவம் முகிழ்த்தது.

தற்போது வைரமுத்துவின் கட்டுரையால் மறுபடியும் கிளைக்கிறது.

----

1999. அக்டோபர் மாதம். 21ம் தேதி.

எங்களுக்கு மகள் பிறந்தாள்.

என்ன பெயர் வைக்கலாம்? என்ற தேடல் படலம் துவங்கியது.

எனக்கு அவளுக்கு தூய தமிழில் பெயர் வைக்கவேண்டும் என்ற விருப்பம் இருந்தது.

'பூங்குழலி' அல்லது 'சுடர்க்கொடி' என்பவை என் விருப்பமாக இருந்தன.

என் மனைவி உட்பட மற்றவர்களுக்கு அதில் உடன்பாடில்லை.

அத்தனை பேரையும் பகைத்துக் கொண்டு பெயர் சூட்ட வேண்டிய சூழ்நிலையில் இருந்தேன்.

சில உறவினர்களின் பரிந்துரை கிடைத்தன.  என்னென்னவோ புத்தகங்களைப் பார்த்தோம்.
மனேகா காந்தி எழுதியது உட்பட.

ஒன்றும் படியவில்லை.

ஏற்கெனவே ஜாதகப் பெயராக என் தாயாரின் பெயர் என் மகளின் முதல் பெயராகத் தெரிவாகிவிட்டது.

என் மகளை 'அலங்காரவல்லி' என்று யார் விளித்தாலும் அது  என் அம்மாவையே பெயர் சொல்லி அழைப்பது போலாகும் என்பதால் 'அழைப்பதற்கு' என இன்னொரு பெயர் சூட்ட வேண்டும்.

அதில் தான் இழுபறி.

என் பெயரில் முதல் எழுத்தான 'சீ' மற்றும் என் மனைவியின் பெயரில் கடைசி எழுத்தான 'தா' இரண்டையும் சேர்த்து 'சீதா' என்ற நாமகரணம் செய்யலாம்  என்றார் ஒருவர். இப்படிப் பல பெயர்கள் அணிவகுத்தன.

செளமிய நாரயணப் பெருமாள் நினைவாக செளமியா என்றார் என் அம்மா.  சஹானா என்றார் என் மனைவியின் சகோதரி.

உடன்பாடில்லை.

பெயர் மிக நவீனமாக இருக்க வேண்டுமாம். அதே கருத்தில் என் பெயரின் ஆங்கில வடிவத்தின் முதல் எழுத்தான 'S' மற்றும் என் மனைவியின் பெயரின் ஆங்கில வடிவத்தின் கடைசி எழுத்தான 'dha'  ஆகிய இரண்டையும் சேர்த்து நடுவில் இருவர் எனப் பொருள் படும் வகையில்  ' we ' யைச் சேர்த்து 'Swedha' என்ற ஒரு காரணப் பெயரை உருவாக்கிச் சொன்னவுடன் துள்ளிக் குதிக்காத குறைதான்.

சில மாற்றங்களுடன் என் மனைவியின் பெயரின் முதல் எழுத்தையும் சேர்த்து
R.(adha) S.(rinivasa raghavan) Shwetha  என முடிவானது. 

அவரது பெயர் அப்படியே பிறப்புச் சான்றிதழிலும் பதியப்பட்டது.

தூய தமிழ்ப் பெயர் சூட்ட வேண்டும் என்ற என் எண்ணம் நிறைவேறவில்லை என்ற வருத்தம் இன்றும் என்னில் உறைந்தே கிடக்கிறது.

------

ஒரு  flashbackம் சொல்ல வேண்டும்.

என்னை மாதிரியே தன் குழந்தைக்கு சுத்தத் தமிழில் பெயர் வைக்க வேண்டும் என்று என் நண்பனுக்கும் அவா.

அவருக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தவுடன் பார்க்கப் போயிருந்தேன்.

அப்பேச்சும் எழுந்தது.

தமிழ்ப் பெயரை முடிவு செய்துவிட்டு அவன் மனைவி மற்றும் உறவினரின் சம்மதம் பெறுவதற்காக உள்ளே போனவன் தொங்கிய முகத்தோடு வெளியே வந்தான்.

என்னவென்று வினவினேன்.

சொன்னான்:
'உருதுப் பெயர் தவிர வேறு எந்தப் பெயரும் சூட்டக் கூடாது என்று சொல்லிவிட்டார்கள்' என்றான்.

'சரிதானே' என்று சொல்லிவிட்டு விடைபெற்றேன்.

-------

இப்போது இந்தக் கதை எதற்கு என்கிறீர்களா?

-------

இஸ்லாமியர்களும் மற்றும் கிறித்தவர்களும் தங்கள் மதம் சார்ந்த மற்றும் தங்களின் மதம் எந்த மொழியைப் பின்பற்றுகிறதோ அந்த மொழியில் மட்டும் தங்கள் குழந்தைகளுக்கு பெயர் சூட்டும் போது இந்துக்களும் தாங்கள் விரும்பும் வடமொழி அல்லது வேற்று மொழிப் பெயர்களைச் சூட்டுவதும் ஏற்புடையது தானே!

-------

அது சரி, தமிழ் தேய்வதை பின்பு எப்படித் தடுப்பதாம்?

தசாவதாரம் படத்தில் வரும் வசனம் போல வேறு மொழி பேசுபவன் தமிழை வளர்த்து விட்டுப் போவானோ?

-------

என் கேள்விக்கு என்றைக்காவது கவிஞர் மகுடேசுவரன் அல்லது வைரமுத்து ஆகியோர்களைச் சந்தித்தால் விடை கிடைக்கலாம்.

--------

சுஜாதா சொன்னது போல நம் தமிழ் மொழி இப்படித்தானா?

-மிஸ். தமிழ்த்தாயே, நமஸ்காரம்!-

-----

Tuesday, 20 February 2018

Messy Home

There were days when my home used to be filled with laughter, arguments, fights, jokes and loads of mischief.

Books used to be strewn all over. The Pens, shoes and books all over,  and clothes messing the rooms, thrown on the beds.

I used to shout at her to tidy up their mess.

In the morning:

She will wake up and say :

Appa, I can't find a certain book.
And will say : I can't find my clips,
And will also say : Dada where's my specs?
And also : Pa, I forgot to complete my homework.

Everyone in my home used to ask about the lost possessions.

And I will say, but take care of your stuff, be responsible, you have to grow up.

And today I stand at the doorway of the room. The beds are empty.  All the cupboards have only a few pieces of clothes in them. And what remains is the smell of perfume that lingers in the air.

Everyone had a special smell. So I take in the smell of her perfume for maybe it will fill the empty ache in my heart.

All I have now is the memory of her laughs and her mischief and her warm hugs.

Today my house is clean and organized and everything is in its place, and it is calm and peaceful. But it is like a desert with no life in it.
-----
My dear friends,

Do not become angry with your kids about the mess.

Every time they come to visit and they spend time with us, when they are ready to leave. They pull their bags and it is as if they tug my heart along with it.

They close the door behind them and then I stand still and think of the many times I shouted them to close the doors.

Here I am today, closing my own doors. Nobody opens it besides me.

Each one gone to a different city or a different country. 

All left to find their own path in life.

They have grown up and I wished that they could stay with me forever.

Oh! God, take care of them & all other children wherever they may be, for you are their guide and their protector and always keep them happy.

If your children are still in the stage that you need to talk and talk before they could get things done in the house, please, cherish and endure it with joy, don't nag, they will soon leave your home for you, remember they were not there at the beginning of your marriage.

Now that they are around, make them happy.

Thursday, 8 February 2018

பாசுரம் பரவசம் - 11

சில சமயங்களில் நமது புலன்கள் ஏதோ ஒன்றை உணர்ந்து அதை உய்த்துக் கொண்டிருக்கும் போது நமது சிந்தனையில் அது தொடர்பான மற்ற விஷயங்கள் ஊர்வலம் போகும்.

தங்களுக்கும் அது போல நேர்ந்திருக்கும்.

-----

பல வருடங்கள் முன்பு அரியக்குடி பெருமாள் கோவிலுக்குள் நாங்கள் நுழைகையில் பிரதான சந்நதியின் வாயிற்படியை மிதிக்காமல் அதைத் தொட்டு வணங்கிவிட்டு தாண்டிச் சென்றார் என் மனைவி. சைகையில் என்னையும் தாண்டச் சொன்னார். செய்தேன்.  சிறுமியாகிய என் மகளால் அந்தப் படியை மிதிக்காமல் தாண்டுவதில் சிரமம் இருந்தது. நான் அவளைத் தூக்கி படியைத் தாண்ட உதவிய போது ' ஏம்மா, படியை மிதிக்கக் கூடாது? ' என்று அவர் கேட்டார்.

என் மனைவி சொன்னார்: ' அது ஆழ்வாரின் அம்சம், அதனால் அப்படி.'

------

இரண்டு நாட்கள் முன்பு என் மகள் படிக்கும் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் உள்ள தன்வந்திரி கோவிலில் தரிசனம் செய்து கொண்டிருந்தோம். அப்போது அங்கே வந்த ஒரு இளைஞனிடம் உடன் வந்த பெண் இதையே சொன்னார். மேற்கொண்டு அது 'குலசேகரன் படி' என்றாள்.

அவன் முகத்தில் ஆச்சரியம் கலந்த கேள்விக்குறியைப் பார்க்க முடிந்தது.

-------

கடந்த வாரம் நான் மருதமலையில் வழிபாடு முடிந்து திரும்பிக் கொண்டிருக்கும் போது அங்கிருந்த கடைகளில் ஒன்றிலிருந்து ஒரு பாடல் காற்றில் மிதந்து வந்து என் செவிகளை நிரப்பியது.

அது சிறு வயதில் என்னை ஈர்த்த இனிமையான ஒரு பக்திப்பாடல்.

டி.எம்.எஸ். தன் இனிமையான குரலில் உணர்ச்சி பொங்கப் பாடியிருந்த பாடல்...

' மண்ணாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்; ஒரு மரமானாலும் பழமுதிர்ச்சோலையில் மரமாவேன்; கருங்கல்லானாலும் தணிகை மலையில் கல்லாவேன்.....' என்று கற்பனைத் திறத்தில் விரியும் பாடல்  அது.

எழுதியவர் யார் என்று தெரியவில்லை. ஆனால் அந்தக் கற்பனை எனக்கு மிகவும் பிடித்திருந்தது.  இறைவனின் திருத்தலங்களில் தான் ஒரு அஃறிணையாகவேனும் கிடக்க வேண்டும் என்ற எண்ணம் எத்துணை பெரிது என்ற எண்ணமே எனக்கு உள்ளுக்குள் ஓடிக்கொண்டிருந்தது.

-------

நேற்று வேறு ஒரு காரணத்திற்காக ஆழ்வார்களைப் பற்றிப் படித்துக் கொண்டிருந்த போது குலசேகர ஆழ்வாரின் குறிப்பட்ட பத்து பாசுரங்களைப் படித்தேன்.  மன்னனாக இருந்து அதைத் துறந்து இறைப்பணிக்கு தன்னை அர்ப்பணித்தவர் அவர்.

'ஊனேறு செல்வத்து உடற்பிறவி யான் வேண்டேன்
ஆனே(று) ஏழ் வென்றான் அடிமைத் திறம் அல்லால்
கூனேறு சங்கம் இடத்தான் தன் வேங்கடத்து
கோனேரி வாழும் குருகாய்ப் பிறப்பேனே'

என்று துவங்கும் பாசுரம் முதல்

' செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே
நெடியோனே வேங்கடவா நின் கோவிலின் வாசல்
அடியாரும் வானவரும் அரம்பையரும் கிடந்தியங்கும்
படியாய்க் கிடந்து உன் பவள வாய்க் காண்பேனோ'

என்று முடியும் பத்துப் பாசுரங்களிலும் அவர்  தாம் திருமாலின் திருப்பதியில் ஆறாகவோ, செடியாகவோ, கொக்காகவோ, மீனாகவோ, வழியாகவோ என்றென்றும் கிடக்க வேண்டும் என்று வேண்டுகிறார்.

------

'மண்ணாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்...' பாடல் வரிகளின் தாக்கம் குலசேகர ஆழ்வாரின் மேற்சொன்ன பத்து பாசுரங்களிலிருந்து பிறந்தது என்பது புரிந்தது.

-------

' படியாய்க் கிடந்து உன் பவள வாய்க் காண்பேனோ' என்று கசிந்துருகியதன் மூலம் எல்லோரும் ஏறி மிதித்தாலும் சரி, தான் திருமாலின் சந்ததியில் ஒரு நிலைப்படியாகவேனும் இருக்க வேண்டும் என்று ஆழ்வார் உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளதாக எண்ணியதன் காரணமாகவே பெருமாள் கோவில்களில் அவன் சந்நதியின் நிலைப்படி இன்றும்  'குலசேகரன் படி'  என்று அழைக்கப் படுகிறது.

நாமும் அதை ஆழ்வாரின் அம்சமானதால் மிதிக்காமல் வணங்கிச் செல்கிறோம்.

------

வைணவத்தில் இறைவனுக்கு இணையான இடம் ஆழ்வார்களுக்கும் ஆச்சாரியன்களுக்கும் தரப்படுவதில் வியப்பென்ன!

------

உயிரின் சிறகுகள்....

அந்தக் குருவி

வாழப் பிறந்தது.

வாழக் கற்றது.

வாழ்கிறது.


பேசத் தெரியாமல்.

எழுதத் தெரியாமல்.

வாசிக்கத் தெரியாமல்.


அதன் போக்கிற்கு 

அது இன்னும் 

வாழ்வாங்கு வாழும்.


ஏன் என்றால்,

அது வாழக் கற்றுக்

கொண்டிருக்கிறது.


எனக்கு 

இப்போதே அதன் 

சிறகுகளாக ஆக வேண்டும்.


ஆனால், அதன் பின்பும்

என்னால் 

மனிதனாகவே

இருக்க முடியுமோ?


அதனிடமே கேட்டேன்.

'கீகீ' என்று 

கத்திக் கொண்டு 

அது பறந்து  போனது,

ஒரு

நம்பிக்கையில்லாத்

தீர்மானத்தை

எச்சமிட்டபடி.