சில சமயங்களில் நமது புலன்கள் ஏதோ ஒன்றை உணர்ந்து அதை உய்த்துக் கொண்டிருக்கும் போது நமது சிந்தனையில் அது தொடர்பான மற்ற விஷயங்கள் ஊர்வலம் போகும்.
தங்களுக்கும் அது போல நேர்ந்திருக்கும்.
-----
பல வருடங்கள் முன்பு அரியக்குடி பெருமாள் கோவிலுக்குள் நாங்கள் நுழைகையில் பிரதான சந்நதியின் வாயிற்படியை மிதிக்காமல் அதைத் தொட்டு வணங்கிவிட்டு தாண்டிச் சென்றார் என் மனைவி. சைகையில் என்னையும் தாண்டச் சொன்னார். செய்தேன். சிறுமியாகிய என் மகளால் அந்தப் படியை மிதிக்காமல் தாண்டுவதில் சிரமம் இருந்தது. நான் அவளைத் தூக்கி படியைத் தாண்ட உதவிய போது ' ஏம்மா, படியை மிதிக்கக் கூடாது? ' என்று அவர் கேட்டார்.
என் மனைவி சொன்னார்: ' அது ஆழ்வாரின் அம்சம், அதனால் அப்படி.'
------
இரண்டு நாட்கள் முன்பு என் மகள் படிக்கும் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் உள்ள தன்வந்திரி கோவிலில் தரிசனம் செய்து கொண்டிருந்தோம். அப்போது அங்கே வந்த ஒரு இளைஞனிடம் உடன் வந்த பெண் இதையே சொன்னார். மேற்கொண்டு அது 'குலசேகரன் படி' என்றாள்.
அவன் முகத்தில் ஆச்சரியம் கலந்த கேள்விக்குறியைப் பார்க்க முடிந்தது.
-------
கடந்த வாரம் நான் மருதமலையில் வழிபாடு முடிந்து திரும்பிக் கொண்டிருக்கும் போது அங்கிருந்த கடைகளில் ஒன்றிலிருந்து ஒரு பாடல் காற்றில் மிதந்து வந்து என் செவிகளை நிரப்பியது.
அது சிறு வயதில் என்னை ஈர்த்த இனிமையான ஒரு பக்திப்பாடல்.
டி.எம்.எஸ். தன் இனிமையான குரலில் உணர்ச்சி பொங்கப் பாடியிருந்த பாடல்...
' மண்ணாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்; ஒரு மரமானாலும் பழமுதிர்ச்சோலையில் மரமாவேன்; கருங்கல்லானாலும் தணிகை மலையில் கல்லாவேன்.....' என்று கற்பனைத் திறத்தில் விரியும் பாடல் அது.
எழுதியவர் யார் என்று தெரியவில்லை. ஆனால் அந்தக் கற்பனை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இறைவனின் திருத்தலங்களில் தான் ஒரு அஃறிணையாகவேனும் கிடக்க வேண்டும் என்ற எண்ணம் எத்துணை பெரிது என்ற எண்ணமே எனக்கு உள்ளுக்குள் ஓடிக்கொண்டிருந்தது.
-------
நேற்று வேறு ஒரு காரணத்திற்காக ஆழ்வார்களைப் பற்றிப் படித்துக் கொண்டிருந்த போது குலசேகர ஆழ்வாரின் குறிப்பட்ட பத்து பாசுரங்களைப் படித்தேன். மன்னனாக இருந்து அதைத் துறந்து இறைப்பணிக்கு தன்னை அர்ப்பணித்தவர் அவர்.
'ஊனேறு செல்வத்து உடற்பிறவி யான் வேண்டேன்
ஆனே(று) ஏழ் வென்றான் அடிமைத் திறம் அல்லால்
கூனேறு சங்கம் இடத்தான் தன் வேங்கடத்து
கோனேரி வாழும் குருகாய்ப் பிறப்பேனே'
என்று துவங்கும் பாசுரம் முதல்
' செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே
நெடியோனே வேங்கடவா நின் கோவிலின் வாசல்
அடியாரும் வானவரும் அரம்பையரும் கிடந்தியங்கும்
படியாய்க் கிடந்து உன் பவள வாய்க் காண்பேனோ'
என்று முடியும் பத்துப் பாசுரங்களிலும் அவர் தாம் திருமாலின் திருப்பதியில் ஆறாகவோ, செடியாகவோ, கொக்காகவோ, மீனாகவோ, வழியாகவோ என்றென்றும் கிடக்க வேண்டும் என்று வேண்டுகிறார்.
------
'மண்ணாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்...' பாடல் வரிகளின் தாக்கம் குலசேகர ஆழ்வாரின் மேற்சொன்ன பத்து பாசுரங்களிலிருந்து பிறந்தது என்பது புரிந்தது.
-------
' படியாய்க் கிடந்து உன் பவள வாய்க் காண்பேனோ' என்று கசிந்துருகியதன் மூலம் எல்லோரும் ஏறி மிதித்தாலும் சரி, தான் திருமாலின் சந்ததியில் ஒரு நிலைப்படியாகவேனும் இருக்க வேண்டும் என்று ஆழ்வார் உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளதாக எண்ணியதன் காரணமாகவே பெருமாள் கோவில்களில் அவன் சந்நதியின் நிலைப்படி இன்றும் 'குலசேகரன் படி' என்று அழைக்கப் படுகிறது.
நாமும் அதை ஆழ்வாரின் அம்சமானதால் மிதிக்காமல் வணங்கிச் செல்கிறோம்.
------
வைணவத்தில் இறைவனுக்கு இணையான இடம் ஆழ்வார்களுக்கும் ஆச்சாரியன்களுக்கும் தரப்படுவதில் வியப்பென்ன!
------
No comments:
Post a Comment