அந்த பலூன்
வியாபாரி
நடைபாதையில்
செத்துக்கிடந்தான்.
சற்று நேரம்
முன்பு அவனிடம்
பேரம் பேசி
வாங்கியிருந்த
ஐந்து ரூபாய் பலூன்
என் குழந்தையின்
கைகளில் தவழ்ந்து
கொண்டிருந்தது.
கொஞ்ச நேரம்
முன்புவரை
தன் மூச்சுக் காற்றை
ஊதி ஊதி
அவன் நிரப்பியிருந்த
பலூன்கள் எல்லாம்
பிடி தளர்ந்து
உயரே
பறந்து போயின.
சேதி கேட்ட
அவனின் மனைவி
பதறியடித்து
ஓடி வந்தாள்.
இவள் கையிலிருந்த
பலூன் சட்டென
வெடித்து உடைந்தது.
மூச்சு விட மறந்த
கணவனைப் பார்த்து
அவளும்
உடைந்து போன
பலூனைப் பார்த்து
இவளும்
கதறி அழுவதை
எல்லோரும்
வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தோம்,
அந்த பலூன்களில் இருந்தது அவனது
மூச்சா? அல்லது உயிரா?
என்பது புரியாமல்.