யார் யாரோ வந்து
எதை எதையோ
எழுதிவிட்டுப்
போகிறார்கள்.
யார் யாரோ வந்து
அவற்றை
அழித்துவிட்டுப்
போகிறார்கள்.
என்னென்னவோ
எழுதப்படுகின்றன.
ஏதேதோ மொழிகளில்.
ஏதேதோ வடிவங்களில்.
ஏதேதோ வார்த்தைகளில்.
யார் யாருக்காகவோ...
அவை எல்லாமே
அடுத்தவர்களால்
அழிக்கப்படுகின்றன.
மேலோட்டமாக
சில சமயம்.
சுவடுகளின்றி
பல சமயம்.
அவை யாவும்
என் மீது
எழுதப்படுகின்றன.
ஆனால்
எனக்காக அல்ல.
இன்றும்
யாரோ வந்து
என்னில் எதையோ
எழுதிவிட்டுப்
போய்வி்ட்டார்.
நான்
காத்திருக்கிறேன்.
வழமையாக.
மெளனமாக.
நாளைப்
பொழுதிற்காக.
வேறு யாரோ வந்து
பழசையெல்லாம்
அழிப்பதற்காக.
புதிதாக
எதையாவது
கிறுக்குவதற்காகவும்தான்.
No comments:
Post a Comment