Tuesday, 31 December 2019

பயணி....

பயணம் இனிது.
அதன் பாடங்கள் 
இனியன.

முகத்தில் காற்று 
அறைய அறையப்
பயணப்படு.
அது மனதைச்
சலவை செய்யும்.

சொட்டச் சொட்ட
மழையில் நனைந்து
பயணம் செய்.
மனதின்
ரணத்துக்கு அதுவே
களிம்பு.

காலாற கைவீசி 
நடந்து பார்.
உள்ளே ஒரு வசந்தம் 
குடிபுகும்.

குடையை மற.
மண் நனைத்த
மழைத்துளி 
உடல் தழுவி உன்
சிந்தையைச் செப்பனிடும்.

அலுவலைச் 
சற்றே தள்ளி வை.
குடும்பம் பெரிதாய்
உணர்வாய்.
நீ தானே அவர்கள்?

எத்தனை பெரிய
வானம்?
இத்தனை நாள்
யார் மறைத்தது!

பூமிக்கு எத்தனை
யௌவனம்?
யார் பூசினார்
அரிதாரம்?

யார் கண்டார்?
விடை பெற முடியாக்
கேள்விகளின்
விடைகள் உன்
பயணத்தின் பாதையில் 
பதிந்திருக்கலாம்.

பயணித்துப்பார்.
வழியெல்லாம்
போதி மரம்
அணி வகுக்கும்.

உன்னை உணர்ந்து
உன்னைப் புரிந்து
உன்னை உயிர்ப்பிக்க....
பயணி.

பூட்டாத பூட்டு


மனம் ஒரு 
வினோத
வினைத்தொகை.

ஓயாத இரைச்சல்
கொண்ட
மெளன அரங்கம்.

விடுதலையே 
அறியாத
சிறைச்சாலை.

எண்ணங்கள் 
உடனுக்குடன்
ஏற்றுமதியாகும்
ஆலை.

உள்ளே இருப்பது
எதுவென்றே 
தெரியாத
எண்ணக்கிடங்கு.

வெட்ட வெட்டத் 
தீராத
மர்மச் சுரங்கம்.

இதயத்தின்
அறிவுரையைத்
திசை திருப்பும் 
கள்ள மாலுமி.

சிந்தனையை
வடிகட்டி
உணர்ச்சிகளை 
வெளியனுப்பும்
சல்லடை.

சில சமயம்
உணர்ச்சிகளை
கொட்டிவிட்டு 
எண்ணங்களை 
ஏற்றுக்கொள்ளும்
முறம்.

பேரன்பும் பேரழிவும்
ஒரு சேர
சூல்கொள்ளும்
அகப்பை.

மனம் ஒரு
வாயிற்கதவு.
ஆயினும்
அதைப் பூட்டுவதும்
திறப்பதும்
உள்ளிருப்பவனே.

Sunday, 29 December 2019

மனக்கேணி

எவரோ வந்து
எறிந்துவிட்டுப் போனார்.

ஆழத்தில் 
அமிழ்ந்து போனது 
கல்.

அலைகளாகப் 
பரவி அடங்கியது 
தண்ணீர்.

அதிர்ந்து ஆடிப்போனது
கிணற்றுக்குள் விழுந்த 
நிலா.


உயர்திணை


காற்றே,
மேனிக்கு உள்ளே
நீ 
புகும் போது
சுவாசம்.

மேனியின் உள்ளே
நீ
இருக்கும் வரை
மூச்சு.

மேனியின்
துளைகளின் வழி
நீ
வெளியேறி விட்டால்
மரணம்.

ஆயின்,
மூச்சற்றுப் போன
பிறகும்
துளைகளின் வழியே
காற்றை 
இசையாக
மொழி பெயர்க்கும்
அந்த மூங்கில் 
அல்லவா
உண்மையில்
மெய்?