அம்மாவின் வாழ்க்கையை வார்த்தைகளால் வடித்துச் சுருங்கச் சொல்வது என்பது கடினம்.
அவளுக்கென்ற தனித்துவமான சிறப்பியல்புகளில் சிலவற்றை மட்டும் பிரித்தெடுத்து எழுதுவதும் அத்தனை எளிதல்ல.
ஆற்றங்கரையின் ஒரு கரையின் ஓரத்தில் நின்று கொண்டு பிரம்மாண்ட அந்த நதி தீரத்தின் தண்ணீரை முழுவதுமாக அள்ளிப் பருகி விடும் ஓரு குட்டி யானையின் ஆசையை ஒத்தது அந்த முயற்சி.
இருந்தாலும் விரட்டித் துரத்தும் நினைவேட்டின் ஆழமான இடுக்குகளிலிருந்து சிலவற்றைத் திறந்து பார்க்கிறேன்...
முதலாவதாக, அம்மாவிடம் நான் கண்டு இன்று வரை வியந்து நிற்பது அவளது மட்டற்ற அன்பின் வீச்சு.
பாசத்தின் ஊற்று அன்பு.
அன்பின் நீட்சி கருணை.
கருணையின் உச்சம் அருள்.
இந்த மூன்றின் கலவையால் வார்த்த உருவம் அம்மா.
எல்லோரும் வட்டமாகத் தரையில் அமர்ந்திருக்க, மொத்தமாகச் சாதம் பிசைந்து அவள் கையில் உருட்டிக் கொடுக்க, நீ, நான் என்று அனைவரும் போட்டி போட்டுக் கொண்டு கூட்டாகச் சிரித்துக் களித்தபடிச் சாப்பிட்ட அந்த நாட்களின் ஞாபகம் இன்னும் மனதில் ஆழமாக நிலைத்து நிற்கின்றன...
கிட்டத்தட்ட தான் அறிந்திருந்த, தெரிந்து வைத்திருந்த, பழகியிருந்த எல்லோரது மனதிலும் தனது அன்பின் விஸ்வரூப வடிவாய் அம்மா இன்றும் உயர்ந்து நிற்கிறாள்.
உறவினர்களில் அம்மாவை நேசத்தோடு நினையாதார் யாருமில்லை.
அடுத்ததாக அவள் எங்களிடம் காட்டிய கண்டிப்பு. அவளது அன்பு எந்த அளவிற்கு மட்டற்றதோ அதே அளவிற்கு அவளது கண்டிப்பும் இருந்தது. அதனால்தான் நாங்கள்
இன்றும் சமூகத்தால் ஓரளவு அங்கீகரிக்கப்பட்டு பெருமையோடு வாழ்ந்து வருகிறோம். அந்த விழுமியங்கள் அவளால் கட்டமைக்கப்பட்டவை.
அடுத்ததாக அவளது மன உறுதி.
அது அபாரமானது. எந்த ஒரு
சூழ்நிலையிலும் நிலைகுலைந்து,
தளர்ந்து போகாமல் தான் சந்தித்த
சவால்களைத் திறம்படச்
சமாளிப்பதில் அவளுக்கிருந்த
மனத்திட்பம் அசாத்தியமானது.
அது மரணப்படுக்கை வரையிலும்
அவளோடு நீடித்தது.
தனிப்பட்ட முறையில் ஏதாவது ஒன்றை என்னால் அம்மாவோடு பொருத்திப் பார்த்து, அதை அவ்வப்போது நினைவு கூர்ந்து சொல்ல முடியுமா என்றால் எனக்குத் தோன்றுவது எல்லாம் ஒன்று.
அது அம்மாவின் "வாசனை".
ஏதோ ஒரு வகையில்
ஏதோ ஒரு வாசனையோடு அம்மாவை என்னால் பொருத்தியும் நினைத்தும் பார்க்க முடிகிறது.
ஆசையோடு அவள் பயன்படுத்தி வந்த மைசூர் சாண்டல் சோப்- பின் வாசனை....
அளவோடு அவள் பயன்படுத்திய "பாண்ட்'ஸ் ட்ரிம்ஃப்ளவர் டால்கம் பவ்டர்"-ன் வாசனை...
சாப்பிட்டு முடித்துவிட்டு அவள் தரிக்கும் தாம்பூலத்தில் சேர்த்த சாமுண்டி பாக்குத் தூளின் வாசனை....
குளித்த பின் சிகைக்கு அவள் சேர்த்த சாம்பிராணிப் புகையின் வாசனை.....
திட்டத்தோடு அளவாக எதைச் சமைத்தாலும் அவள் சமைத்த உணவில் மணக்கும் அவளது கைவண்ணத்தின் வாசனை....
அலமாரியில் துணிகளுக்கு அடியில் அவள் இட்டு வைத்த நாஃப்தலீன் உருண்டைகளின் வாசனை....
பூஜையின் போது அவள் பொருத்தி வைத்த "நந்தி ப்ராண்ட்" ஊதுவத்திகளின் வாசனை.....
அவளது விரல்களின் லாவகமான நடனத்தினூடே தொடுக்கப்பட்ட பவழமல்லிப் பூக்களின் சுகமான வாசனை.....
கிடைக்கும்போதெல்லாம் எல்லோருக்கும் வைத்துவிட்டு தானும் ஒரு சிறுமியைப்போல குதூகலித்துக் கொண்டு குப்பி வைத்து அவள் இட்டுக் கொண்ட மருதாணியின் வாசனை...
"கூடாரை வெல்லும் கோவிந்தா" என்றபடி மார்கழியிலும், திருவாதிரை அன்றும் அவள் படைக்கும் அக்கார அடிசிலும்/ களியும் பரப்பும் அந்த நெய்கலந்த இனிப்பின் வாசனை...
மாலை நேரம் அவள் கூந்தலில் ஏறியதால் சுற்றிலும் மணம் பரப்பிய அந்த குண்டு மல்லிகையின் வாசனை...
கோகுலாஷ்டமி என்ற ஸ்ரீஜெயந்தியன்று கண்ணனை ஆராதித்து அவள் செய்து பரப்பி வைக்கும் எண்ணற்ற பட்சணங்களின் ரம்யமான வாசனை...
கையெட்டும் தூரத்தில் வைத்துக் கொண்டு அவள் அவ்வப்போது அப்பிக் கொண்ட 'அமிர்தாஞ்சன்' மருந்தின் வாசனை....
கடைசியில் மரணப் படுக்கையில் அவளுக்குச் செலுத்தப்பட்ட வகை வகையான மருந்துகளால் அவள் மீது வீசிய 'ஆஸ்பத்திரி' வாசனை...
கடைசியில் தீக்கிரையாகி பொய்யாய்ப் போன பிறகும் அவளின் 'மெய்' கிளப்பிய அந்தப் புகை வாசனை....
இப்படியாக அவளின் அலாதியான வாசனையைப் போலவே அவளும் ஆகிவிட்டாள்...
உருவமற்ற அவளது அந்த வாசனைகளில் ஏதோ ஒன்று அங்கிங்கெனாதபடி பரவிப் படர்ந்து ஏதோ ஒரு பொருளின் வடிவில் ஏதோ ஒரு வாசனையாக என்னைச் சுற்றிச் சுழன்றபடி அவளை என் நினைவில் நிறுத்திக் கொண்டே இருக்கிறது...
அவள் வாழ்ந்து காட்டி சொல்லிக் கொடுத்த அந்த விழுமியங்களை நாங்களும் பின்பற்றுவோம் என்றும், அவற்றை எங்களது குழந்தைகளுக்கும் கற்றுக் கொடுப்போம் என்றும் எங்களது உறுதிமொழிகளை அந்த வாசனையின் வழியே நாங்கள் அவளுக்குத் திருப்பி அனுப்பியிருக்கின்றோம்.
அது தான் அவளுக்கான சரியான அஞ்சலியாக இருக்க முடியும்.
பாதை தவறிப்போன ஒரு வழிப்போக்கனைப் போல நான் இப்போது திசையறியாது நின்று கொண்டிருக்கிறேன்..
முன்பொரு காலத்தில் அவ்வப்போது அவள் உயர்த்திக் காட்டிய அந்த அபயக் கரங்களின் குளிர் நிழல் மீண்டும் நீண்டு என்னை என்றாவது தொட்டுத் தழுவக் காத்தபடி...