Monday, 22 February 2021

தீரா மோனம்

மழைத்துளி
சொட்டுச் சொட்டாய்
விழும் சத்தம்
எதிலிருந்து வந்தது
என்பதறியாது
குளிர் ஏந்திய காற்று 
பரிதவித்து வீசிய
நொடிப்பொழுதில்
படபடத்துப் பறந்த
வண்ணத்துப் பூச்சியின்
சிறகுகளின் வண்ணம் 
ஈரத்திலும்
சாயமிழக்காத
விசித்திரத்தை
ரசிக்காது போன நிலா
ஏனோ தன்னால்
நிறப்பிரிகை
நேராத சோகத்தில்
மனம் வெதும்பிய
தருணத்தில்
புற்றுக்குள் இருந்த
எறும்புகளை
மழை நீர் பெருகி
மிதக்கழிக்க,
அத்தனை
மோனம்
பூமியிடம்.

Saturday, 30 January 2021

படித்ததில் பிடித்தது

ஒரு சின்ன கற்பனை.

ஒரு போட்டியில் உங்களுக்கு ஒரு பரிசு கிடைத்திருக்கிற
து.
பரிசு என்னவென்றால் - 

ஒவ்வொரு நாள் காலையிலும்
உங்கள் வங்கிக் கணக்கில் 86,400 ரூபாய் உங்கள் சொந்த
செலவுக்காக வரவு வைக்கப்படும்.
ஆனால் இந்தப் பரிசுக்கு சில கண்டிஷன்கள் உண்டு.
அவை -

1) அந்த நாளில் நீங்கள் செலவு செய்யாத பணம் உங்கள்
கணக்கிலிருந்து எடுக்கப்பட்டுவிடும்.
2) உங்கள் பணத்தை நீங்கள் வேறு அக்கவுண்டிற்கு மாற்ற
முடியாது.
3) அதை செலவு செய்ய
மட்டுமே உங்களுக்கு உரிமை உண்டு
4) ஒவ்வொரு நாளும் விடியும்போது உங்கள் வங்கிக்
கணக்கில் அந்த நாளின் செலவிற்காக 86400 ரூபாய்
வரவு வைக்கப்படும்
5) எப்போது வேண்டுமானாலும் வங்கி இந்த
ஆட்டத்தை முன்னறிவிப்பு இல்லாமல் நிறுத்திக்கொள்ள
லாம்.
6) வங்கி - "முடிந்தது கணக்கு" என்று சொன்னால்
அவ்வளவுதான். வங்கிக் கணக்கு மூடப்படும்,
மேற்கொண்டு பணம் வரவு வைக்கப்படமாட்டாது.

இப்படி இருக்கும் பட்சத்தில் நீங்கள் என்ன செய்வீர்கள்?
உங்களுக்கு பிடித்த எல்லாம் வாங்குவீர்கள் இல்லையா?
உங்களுக்கு மட்டுமல்லாமல் உங்கள்
மனதுக்கு பிடித்தவர்களுக்கும் வாங்கித்தருவீர்கள்
இல்லையா? உங்களுக்கு முன்பின் அறிமுகம்
இல்லாதவர்களுக்காகவும­் செலவு செய்வீர்கள். ஏனென்றால்
அவ்வளவு பணத்தையும் உங்களுக்காக
மட்டுமே செலவு செய்வது சாத்தியமில்லை என்பதால் -
அப்படித்தானே? முடிந்தவரை ஒவ்வொரு ரூபாயையும்
எப்படியாவது செலவு செய்து உபயோகிப்பீர்கள்தானே?

உண்மையில் இது ஆட்டமில்லை 

- நிதர்சனமான உண்மை

ஆம்

நம் ஒவ்வொருவருக்கும் இப்படியான ஒரு வங்கிக்
கணக்கு இருக்கிறது. நாம் தான் அதை கவனிக்கவில்லை.
அந்த ஆச்சரிய வங்கிக்கணக்கின் பெயர் - காலம்.

ஒவ்வொரு நாள் காலையும் நாம் எழுந்திருக்கும்
போது வாழ்க்கையின் அதியுன்னத பரிசாக
86400வினாடிகள் நமக்கு வழங்கப்படுகிறது.
இரவு தூங்கப் போகும் போது நாம் மிச்சம் வைக்கும் நேரம்
நமக்காக சேமித்து வைக்கப் படுவதில்லை.
அன்றைய பொழுது நாம் வாழாத வினாடிகள்
தொலைந்தது தொலைந்தது தான்.
நேற்றைய பொழுது போனது போனது தான்.
ஒவ்வொரு நாள் காலையிலும் புத்தம் புதிதாக நம்
கணக்கில்
86400நொடிகள்.
எச்சரிக்கையே இல்லாமல் எப்போது வேண்டுமானாலும்
வங்கி உங்கள் கணக்கை முடக்க முடியும்.

அப்படியிருக்கும் பட்சத்தில் நீங்கள் என்ன செய்வீர்கள்?
உண்மையில் 86400வினாடிகள் என்பது அதற்கு சமமான
அல்லது அதற்கும் மேலான பணத்தை விடவும்
மதிப்பு வாய்ந்தது அல்லவா?

இதை ஞாபகம் வைத்துக்கொண்டால் வாழ்க்கையின்
ஒவ்வொரு நொடியையும் நாம் கொண்டாடிக் கழிக்க
மாட்டோமா? 

காலம் நாம் நினைப்பதை விட வேகமாக
ஓடிவிடும்.

எனவே உங்களைப் பொன் போல பேணுங்கள் - சந்தோஷமாக
இருங்கள் - 
சுற்றியுள்ளவர்களை ஆழமாக நேசியுங்கள் -
வாழ்க்கையைக் கொண்டாடுங்கள்...

Friday, 29 January 2021

பெண்கள் தினம்.

பெண்கள் தினம் என்பது பிறந்த நாள் போலவோ அல்லது நீத்தார் நினைவு நாள் போலவோ வருடத்தில் ஒரு நாள் மட்டும் அனுஷ்டிக்கப்படும் நாள் அல்ல. 

வருடம் முழுவதும், ஏன் தன் வாழ்நாள் முழுவதும், ஒவ்வொரு ஆணும் பெண்களுக்கான மரியாதையையும், அவளது உரிமைகளையும், அவளது கண்ணியத்தையும் மதித்தும், காத்தும், ஆராதிக்கக் கடமைப்பட்டவன் என்பதை 
ஆண்கள் மறந்து விடாமல் இருக்கவும் இந்த நாள் தேவைப்படுகிறது.

சக பெண்ணை மதித்து அவள் முன்னேறக் கைகொடுத்து 
தம்மைப் போல மற்ற பெண்களும் முன்னேற வழிகாட்ட வேண்டிய தார்மீகக் கடமை ஒவ்வொரு பெண்ணுக்கும் உள்ளது என்பதை பெண்களுக்கு வலியுறுத்தவும் இந்த நாள் தேவைப்படுகிறது.

என் கருத்தில் woman's lib (பெண் விடுதலை, பெண் உரிமை) ஆகியவற்றை விட women empowerment என்ற சொல்லே நனிசிறந்தது என்பேன்.

அதன் பொருள்  என்ன?

முண்டாசுக் கவிஞனை விட women empowerment என்பதை வேறு யாரும் தெளிவாகச் வரையறுத்துவிட முடியாது.

பாரதி சொன்னான்;

'பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்
பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்.
எட்டும் அறிவினில் ஆணுக்கு பெண்ணிங்கே 
இளைப்பில்லை, காண் என்று கும்மியடி'

இந்தக் கருத்தை வலியுறுத்தவும் அதை சாதித்துக் காட்டவும் சக மனிதர்களுக்கு இன்னும் நாம் நினைவூட்ட வேண்டியிருக்கிறது என்பதும் ஒரு சமூக அவலமே.

அதைக் களையவே இந்த நாள்.

If we must celebrate a day for women, let us celebrate freedom from stereotypes, from expectations, from idolisation, from sacrifice.

Stop congratulating women for being the secret behind a successful man... 
Start saluting them for being successful.  

Stop saying the mother is sacred for all the sacrifices she makes...
Try to reduce those sacrifices. 

Stop justifying her necessity to multi task. Give her a chance not to. 

Stop making her look at herself through a conveniently male viewpoint. 

Stop praising her roles as mother, wife, daughter, sister.

Celebrate her as an individual, a person, independent of relationships. 

Celebrate the essence of womanhood, each day, every day!

பாரதி கண்ட சக்தியாக
வாழ்ந்து காட்டுங்கள் தோழியரே!

ஆண்களின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கட்டும்!

வாழ்த்துகள்.

Saturday, 16 January 2021

எங்கேயோ எப்படியோ....

அங்கேயே அப்படியே
இருக்கவும் முடியவில்லை.

இங்கேயே இப்படியே
கிடக்கவும் மனமில்லை.

அப்படியே அங்கேயே
இருந்தபோது விலகின.

இப்படியே இங்கேயே
இருந்தபோது சேர்ந்தன.

அங்கேயே அப்படியே
இருக்குங்கால்
இறகாக உணர்கிறேன்.

இப்படியே இங்கேயே
இருக்குங்கால்
விறகாக உணர்கிறேன்.

அங்கேயே அப்படியே
நீங்கியவற்றால் மிதந்தேனா?

இங்கேயே இப்படியே
சேர்ந்தவனற்றால் கனத்தேனா?

அப்படியே இங்கேயும்
இப்படியே அங்கேயும்
நிலைக்காத பொழுதுகளால்
எங்கேயோ எப்படியோ
நான்
எதுவானால் தான்
என்ன?

Wednesday, 13 January 2021

எனக்காகவா நான்?

சாய்ந்திருந்த
தோள்கள்
தளர்ந்து விட,
பற்றியிருந்த
கரங்கள்
விலகிக் கொள்ள,
உறங்கிய
மடியும்
துவண்டு விட,
ரசித்து வந்த
தாலாட்டும்
நின்று போய் விட,
துளியேனும் 
வதை இல்லை
தற்காலம்.

எதையெல்லாம் இழந்தேனோ,
அவையாகவே
நான்
மாறிக் கொண்டிருக்கிறபடியால்....