Saturday, 21 May 2016

பயணம்

பயணம் இனிது.
அதன்
பாடங்கள்
இனியன.

முகத்தில் காற்று
அறைய அறையப்
பயணப்படு.
அது மனதை
சலவை செய்யும்.

சொட்ட சொட்ட
மழையில் நனைந்து
பயணம் செய்.
ரணத்துக்கு அது
களிம்பு.

காலாற கைவீசி
நடந்து பார்.
உள்ளே ஒரு
வசந்தம் குடி
புகும்.

குடையை மற.
மண் நனைத்த
மழைத்துளி
உடல் தழுவி
சிந்தையைச்
செப்பனிடும்.

அலுவலைச்
சற்றே தள்ளி வை.
குடும்பம் பெரிதாய்
உணர்வாய்.
நீ தானே
அவர்கள்?

எத்தனை பெரிய
வானம்?
இத்தனை நாள்
யார் மறைத்தது!

பூமிக்கு எத்தனை
யௌவனம்?
யார் பூசினார்
அரிதாரம்?

விடை பெற
முடியாக்
கேள்விகளின்
விடைகள்
பயணத்தின்
பாதையில்
பதிந்திருக்கலாம்.

பயணித்துப்பார்.
வழியெல்லாம்
போதி மரம்
அணி வகுக்கும்.

உன்னை உணர்ந்து
உன்னைப் புரிந்து
உன்னை உயிர்ப்பிக்க....
பயணி.

Friday, 6 May 2016

வானமிழ்து

நீலமும் சிவப்பும்
மஞ்சளும்
மாற்றி மாற்றி
ஆடை சூடும்
வானமகள்
திடீரென
சாம்பல் நிற
ஆடை கொண்டாள்.

புவிக்கு ஒரு
வெள்ளிக்
கற்றையை
அனுப்பிவைத்தாள்.
அதிர்வேட்டுச்
சிரிப்போடுதான்
அது பூமி
வந்து சேர்ந்தது.

தாய் அழுது
சேய் வந்தது
போல்
முகில் அழுதாள்.
மழை வந்தது.
சேய் அழுது
தாய் சிரிப்பது
போன்று
அப்போது
புவி சிரித்தது.

பச்சைப்பட்டாடை
உடுத்தி
பூ சுமக்கும்
சாமரங்கள்
அன்று
தலை குளித்து
ஈரம் காய
கதிரைத் தேடின.

பளிச்சென்று
ஆனது
மனமும்
தரையும்.

புல்லின் நுனியில்
திரண்டு நின்ற பனித்துளிகள்
ராமன் பாதம்
தேடிய அகலிகை
மாதிரி
கதிரோனுக்காக
காக்கத் துவங்கின.

துளைகளின்
வழியே
காற்றை
இசைபெயர்த்தன
மூங்கில்கள்.

ஈரக்காற்றில்
இன்னிசை
நடம்பயின்றது.
வசந்தத்தை
சுமந்து சென்றது.
குளித்தறியா
உயிர்களும்
திருமஞ்சனம்
கண்டன.

மண் நனைந்து
மணம் வீச
பூமிக்கு இல்லாத
அச்சம்
மனிதனுக்கு
எங்கிருந்து
வந்தது?
மழையைக் கண்டு
அவன் ஒதுங்குதல்
தகுமோ?

வருண அமிழ்தே,
ஒரு விண்ணப்பம்.
தருணத்தில் பெய்து
பூமித்தாயை
சூல்கொள்ளச் செய்.
காலம் தாழ்த்தி
அவளது
கர்ப்பத்தைக்
கலைத்து விடாதே.

எப்படி வரினும்
இனிது இனிது.
மழை மாமணி
என்றும் இனிதே.

Thursday, 5 May 2016

அத்தனையும் ரசிப்போம் வா...

மழை நனைத்த
நள்ளிரவில்
மரத்தடியில்
கோலமிடும்
நிலா.

காலையில்
கோபத்தில்
வெளிநடந்து
மாலையில்
புன்னகைப்பூக்களோடு
இல்லம் திரும்பும்
கணவன் போல
வெப்பம் தணிந்த
அந்திமாலை.

நேர்கோட்டில்
ஒரு
வானவில்லென
மின்கம்பி மீது
பல வண்ணங்களில்
பறவைக்கூட்டம்.

பூமிப்பெண்ணுக்கு
மழை வரனை
தாரை வார்த்துக்
கொடுக்கும்
மேகத்தாய்.

இயற்கைப்பள்ளியில்
வெள்ளைச்சீருடை
மட்டுமே
அனுதினமும்
அணியும்
கொக்குகள்.

கடல் அலையில்
கால் நனையாது
முகம் பார்த்து
விடைபெறும்
கதிரவன்.

எங்கேயோ
எதையோ
தொலைத்துவிட்டு
அதை
எப்போதும்
அங்கங்கே
தேடித்திரியும்
மனிதனே,
கண்ணெதிரே
அரங்கேறும்
அழகின்
அணிவகுப்பை
ரசித்தறியாது
என்ன மாதிரி
வாழ்க்கையை
வரித்திருக்கிறாய்?

வாராது வரும்
மாமழையைக்
கூடவா
குடைஎன்னும்
கருப்புக்கொடி
காட்டி வெறுப்பது?

யாரிடம் இல்லை
வருத்தம்?
யாருக்கு இல்லை
குறைகள்?

சூரியனா
மறைகிறது?
பூமியல்லவா
மறைக்கிறது!

வா,
இனியேனும்
இயற்கையின்
மடி தவழ்ந்து,
கதிரவனின்
கரம் கோர்த்து,
நிலவொளியில்
நடைபயின்று,
குக்கூ மொழிபேசி,
உயிர்களிடத்தில்
அன்பொழுகி
புவியின்
புன்னகையில்
அத்தனையும்
மறப்போம்
வா.