புத்தகத் திருவிழா என்று சின்னதாக ஞாபகிக்கிறேன். பேச்சரங்கத்தில் சற்று நேரம் கழிக்க நேர்ந்தது. மிக வேதனையோடு வெளியேவந்தேன். வருத்தம் தாளாமல். காரணம், பேச்சுக்கலையின் நிலைமை.
தமிழ் மொழி பல தளங்களில் சிங்காதனத்தில் அமர்ந்திருக்கிறது. அய்யமில்லை. ஆனால் தமிழ்ப் பேச்சுக்கலையின் நிலை தற்போது மெச்சிக்கொள்ளும் அளவிற்கு இல்லை என்பதே நிதர்சனம். முப்பது ஆண்டுகளுக்குள் இத்தனை வீழ்ச்சியா?
என் முதல் முதல் வருத்தம் பேச்சாளர்களின் தமிழ் உச்சரிப்புதான். தமிழ் என்ற வார்த்தையை 'தமில்' என்று உச்சரிப்பவர்களுக்கு மரண தண்டனை கூடத் தகும். ல, ள மற்றும் ழ ஆகிய எழுத்துக்களை சரியாக உச்சரிக்காத தமிழர்களை (தமிழ்)நாடு கடத்துவது நன்று.
சொந்தக் கருத்துக்களையே காணோம். எங்கு பார்த்தாலும் கூகுள் ஆண்டவர் புண்ணியத்தில் வெட்டுதலும் ஒட்டுதலும் ஏராளமாகவும் தாராளமாகவும் அரங்கேறி இரவல் வாங்கியதால் இன்னும் விடியாமல் சந்தி சிரிக்கிறது. சொந்த சிந்தனைக்கா இங்கே பஞ்சம்?
தமிழ் இலக்கிய உலகின் ஏற்றமும் எழுச்சியும் எழுத்தோடும் இசையோடும் கலையோடும் நின்று விட்ட நிலைமை தமிழ் கூறும் நல்லுலகிற்கு மிகப் பெரிய இழப்பு.
சரி, இலக்கியவாதிகள் தான் இப்படி, அரசியல் பேச்சாளர்கள் எப்படி என்றால் அது அதைவிட மலிவு. இரட்டை அர்த்தப் பேச்சும், ஆபாசமும், தனிமனிதத் தாக்குதல்களும் மட்டுமே பெரும்பாலும் அங்கே விஞ்சி நிற்கிறது. நயமான மற்றும் செறிவான பேச்சுக்கு தற்போதைய அரசியலில் இடமில்லை.
தீந்தமிழ்ப் பேச்சால் தமிழை சீராட்டி வளர்த்த சொல்லின் செல்வர்கள் இறந்த காலம் தமிழ் மேடைப்பேச்சின் நிகழ்காலமாக உறைந்து விட்டதோ?
அண்ணாவும், மா. பொ. சியும்,
திரு. வி. க.வும், சத்தியமூர்த்தியும், கருணாநிதியும் , கி.வா.ஜவும்,
ரா. பி. சேதுப்பிள்ளையும், குமரி அனந்தனும், அவ்வை நடராசனும், அறிவொளியும், வலம்புரி ஜானும் பேணி வளர்த்த பேச்சுத்திறன் எங்கே?
பக்தி சொற்பொழிவுகளும் அதே போலத்தான் இருக்கின்றன. கிரிதாரி பிரசாத், புலவர் கீரன், வாரியார் சுவாமிகள் ஆகியோர்களுக்கு வழித்தோன்றலே இல்லாமல் போனது தமிழுலகின் வேதனையேயன்றி வேறென்ன?
பட்டிமன்றங்கள் தான் தமிழில் மிகப்பெரிய வீழ்ச்சியைச் சந்தித்திருக்கின்றன என்பேன். ஒரே கூக்குரலே மிஞ்சி நிற்கிறது. பட்டி தொட்டி எங்கிலும் தமிழ் மணக்கச் செய்ய பட்டிமன்றங்களைப் பாங்காய்ப் பயன்படுத்திய குன்றக்குடி அடிகளார் இன்று இருந்தால் பட்டிமன்றங்களின் இன்றையை நிலையைப் பார்த்தால் மனம் வெம்பியிருப்பார்.
பாரதி பாஸ்கர், சாலமன் பாப்பையா போன்ற தமிழ் பேச்சுக்கலையை அறிந்தவர்களும் இப்படி துணுக்குத் தோரணங்களாக மட்டும் சொல்லாடுவது காலத்தின் கோலம் போலும்.
இலக்கிய நயம் சொட்டச் சொட்ட இனி அரங்கத்தில் தமிழ் கேட்கவே முடியாதா என்று அயற்சி ஏற்படுகிறது. உணர்ச்சி வசப்படுதலே தமிழனின் பலவீனம் என்று தோன்றுகிறது.
சில ஆறுதல்களும் இருக்கத்தான் செய்கிறது.
ஆன்மிகப் பேச்சில் வேளுக்குடி கிருஷ்ணன் சுவாமிகளின் தெள்ளு தமிழ்ப்பேச்சு, சுய முன்னேற்றம் பற்றிய ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணனின் கருத்துள்ள பேச்சு, இலக்கியத்தில் பழ. கருப்பையா, நெல்லை கண்ணன், கே. சுமதி, மற்றும் நீதியரசர் வி. இராமசுப்பிரமணியத்தின் அருமையான பேச்சு, அரசியலில் வைகோவின் ஆழமான பேச்சு, திரையுலகில் பார்த்திபனின் பேச்சு, வைரமுத்துவின் கவிநயம் மிக்க பேச்சு, சுகிசிவத்தின் ஆழமான இலக்கிய மற்றும் ஆன்மிகப் பேச்சு என சில வித்தகர்களின் நயமான பேச்சு மட்டுமே ஆறுதல்.
இப்படிச் சிலரோடு தமிழ்ப்பேச்சுக்கலை முடிந்துவிடுமோ என்ற அய்யம் இன்னும் கவலை சேர்க்கிறது.
நிகழ்கால மாணவர்களே, தீவிர சிகிச்சைப் பிரிவில் மரணப்படுக்கையில் இருக்கும் தமிழ்ப் பேச்சுக்கலைக்கு புத்துயிரும் பிராண வாயுவும் தரவேண்டிய கட்டாயத்தை உணர்ந்து தமிழை முறையே பயின்று தெளிவாகப் பேசி பேச்சுக்கலையை இனிதே வளர்ப்பீராக!