ஜூபிடர் கோள்.
பாரதக் கோட்பாட்டின் படி அது
வியாழன்.
வீனஸ் கோள்.
பாரதிய வான சாஸ்திரத்தில் அது வெள்ளி.
இவ்விரு கோள்களையும் இரவிலும், விடியும் முன்னும் தொலைநோக்கி இன்றி வெறும் கண்களால் பூமியிலிருந்து நம்மால் பார்க்க முடியும்.
இன்றைக்கு 1300 வருடங்களுக்கு முன்பே தமிழச்சி ஒருத்தி அதைப் பார்த்தாள். அற்றைத் திங்கள் பின்னிரவில் விண்ணில் விளைந்த அந்த வினோத நிகழ்வைப் பார்த்து வியந்ததோடு நில்லாமல் அதைப் பைந்தமிழில் பாடியும் இருக்கிறாள்.
அவள் யார்?
அவள் 'கோதையாகிய, நாச்சியாரென்ற நம் ஆண்டாள்'!
அவள் தன் பக்தியால் பரமனை ஆண்டாள்.
தனது பாசுரங்களால் தமிழை ஆண்டாள்.
இவ்விரண்டாலும் நம் உள்ளங்களை எல்லாம் ஆண்டாள்.
ஆண்டாள் சொல்லியுள்ள அந்த விண்வெளி மாற்றத்தை இன்றைய திருப்பாவைப் பாசுரத்தில் பாருங்கள்.
அறிவியலில் ஆர்வம் கொண்டார் கூட தற்காலத்தில் அத்தகைய அரிய நிகழ்வுகளைக் கண்டு கொள்ளாமல், 'சின்னத்திரையிலும்', 'குட்டித்திரையிலும்' தம்மைப் புதைத்துக் கொண்டு 'சன்ரைஸ்' என்பதை காபிக் கோப்பையில் மட்டுமே காணும் நாள் இது.
ஆனால் கடந்த நூற்றாண்டில் ஏற்பட்ட அத்தகைய ஓர் அரிய விண்வெளி நிகழ்வை நாச்சியார் தன் திறன் கொண்டு கண்டுணர்ந்து தன் பாசுரத்தில் தக்கதொரு தருணத்தில் 'நச்' என்று ஒற்றை வரியில் பாடியிருக்கிறாள்....
அதை வைத்து அவள் வாழ்ந்த காலத்தைத் நம்மால் துல்லியமாகக் கணிக்க முடிகிறது.
வானவியல் படி 'வியாழன்' ஒளி இழந்து மங்கிய போது 'வெள்ளி' முளைப்பது என்பது மிகவும் அரிதான நிகழ்வு.
அதை அவதானித்து ஆண்டாள்
இப்பாசுரத்தை எழுதிய நாள் என்பது கி. பி. 716ம் வருடம், டிசம்பர் மாதம், 18ம் தேதி என்றும், அன்றைய தினம் முழு நிலவு தினம்/பௌர்ணமி என்றும் ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.
இதோ இன்றைய தினத்திற்கான அப்பாடல்:
-------------------------
"புள்ளின்வாய் கீண்டானைப் பொல்லா அரக்கனைக்
கிள்ளிக்களைந்தானைக் கீர்த்திமைப் பாடிப் போய்
பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம் புக்கார்!
'வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று'!
புள்ளும் சிலம்பின காண்!
போதரிக் கண்ணினாய்!
குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே
பள்ளிக்கிடத்தியோ?
பாவாய் நீ நன்னாளால்.
கள்ளம் தவிர்ந்து கலந்தேலோர் எம்பாவாய்!"
பொருள்;
பறவை உருக்கொண்டு வந்த பகாசுரனின் வாயைப் பிளந்து கொன்ற கண்ணன் மற்றும், இராவணனுடைய பத்துத் தலைகளையும் கிள்ளியெறிந்து அவனை வதம் செய்த ராமனுடைய கீர்த்திகளையும் பாடி, ஊரிலுள்ள அனைத்துப் பெண்களும் நோன்பு நூற்க குறித்த இடத்தில் வந்து சேர்ந்துவிட்டனர்.
(சுக்கிரன்) வெள்ளிக் கிரகம் உச்சிக்கு வந்து, வியாழன் (பிரஹஸ்பதி) மறைந்துவிட்டது.
மேலும் காலைப்பறவைகள் ஒலித்துப் பறந்து செல்லும் சப்தம் உனக்கு காதில் கேட்கவில்லையா? சிவந்த தாமரைப் போன்ற கண்களையுடையவளே! இந்நன்னாளில் தூங்குவதுபோல கண்களை மூடிக்கொண்டு பாவனை செய்வதை விட்டுவிட்டு, எங்களுடன் குளிர்ந்த நீரில் அமிழ்ந்து முழுகாமல், படுக்கையில் உறங்குகிறாயே பாவைப்பெண்ணே! எழுந்து வா."
----------------------------
இன்னொரு பாசுரத்தில் கடல் நீர் ஆவியாகி மேலெழும்பி மேகத்தில் நீர்த்திவலையாகத் தஞ்சமடைந்து பின் குளிர் மழையாக பூமிக்கு வீழ்வதை ஆண்டாள் அழகுறப் பாடியிருப்பாள்.
அக்காலப் பெண்களின் தீந்தமிழ் புலமையைப் பற்றி நாம் அறிவோம்.
ஆனால் கல்வியறிவு என்பது நிறுவனப்படுத்தப்படாத அந்தக் காலகட்டத்தில் பதின்ம வயதில் ஆண்டாளுக்கிருந்த அத்தகைய அறிவும் உலகளாவிய பார்வையும் அக்காலத்தில் தமிழ்ப் பெண்டிர் பெற்றிருந்த பேரறிவைப் பறைசாற்றுகிறது அல்லவா?