பல்லாண்டு பல்லாண்டு...
---------------
ஸ்ரீனிவாச ராகவன்
சில மாதங்களுக்கு முன்பு
ஷீரடி நாதன் கோவில் வளாகத்தில் மாலை நேர ஆரத்திக்காக வரிசையில் அமர்ந்திருந்தேன். என்னோடு அவன் அருளை நாடி வந்திருந்தோரும் அந்தப் பரவசத் தருணத்திற்காக பாபாவின் நாமாவளியை ஜபித்தபடி அமைதியாகக் காத்திருந்தோம்.
அருகே ஒரு தமிழ்க் குடும்பம் இன்பமே சூழ்ந்தவராக தமக்குள் பேசிக் கொண்டு இருந்தனர். அவர்களில் ஒருவர் திடீரென ஒரு கேள்வியைக் கேட்டு யோசிக்க வைத்தார். கேட்ட அந்த நொடியில் அவர்களிடையே நிலவியிருந்த கலகலப்பு நழுவிச் சென்று அடர்ந்த அமைதி வேண்டா விருந்தாளியாய் உட்புகுந்தது.
'திடீரென கடவுள் உன் முன் நேரில் தோன்றினால் நீ அவரிடம் என்ன கேட்பாய்?'
இது தான் அவர் கேட்ட அந்தக் கேள்வி.
அக்கேள்வி ஒன்றும் புதியதோ அல்லது கடினமானதோ அல்ல. ஆனாலும் அவர்கள் என்ன சொல்லப்
போகிறார்கள் என்று கேட்கும் ஆவலில் நான் எனது செவிகளை தீட்டிக் கொண்டேன். அவர்கள்
ஆளாளுக்கு ஒவ்வொரு பதில் சொன்னார்கள். எல்லாரும் அவரவர் தேவைகளையும், கோரிக்கைகளையும், எதிர்பார்ப்புகளையும் தொடுத்தபடி இருந்தனர். 'இவ்வளவு சுயநலம் மிக்கவர்களா மனிதர்கள்?" என்று வியந்தபடி நான் அவர்களைக் கவனித்து வந்த போது அவர்களில் ஒருவர் அதே கேள்வியை என்னிடமும் கேட்டார். உண்மையில் என்னிடம் ஏற்கனவே அந்தக் ஒரு பதில் இருந்தது.
'என் மரணம் என்றைக்கு நேர்ந்தாலும் அது இயற்கையானதாகவும் உன் அருளுடனும் நேர வேண்டும் என்று அவனிடம் நான் கேட்பேன்' என்ற என்னை அவர் வெறுப்புடன் பார்த்தார். "ஆண்டவன் கொடுத்த அழகான இந்த வாழ்க்கையைப் பற்றிக் கேட்காமல் அபசகுனம் மாதிரி சாவைப் பற்றி பேசலாமா?" என்று என்னைக் கடிந்தும் கொண்டார். நான் எனக்குள் சிரித்தபடி அமைதியானேன். என் கோரிக்கையும் ஒரு வகையில் சுயநலம் தான். ஆயினும் அந்த ஒரு செயல் அவன் கையில் மட்டும் இருக்கும் போது அதை அவனிடம் தானே கேட்கவேண்டும் என்று நினைத்தபடி தொடர்ந்து அவர்களை கவனிக்கத் தொடங்கினேன்.
அப்போது அந்தக் குடும்பத்தில் இருந்த சுமார் ஆறு அல்லது ஏழு வயதுள்ள ஒரு சிறுமி சட்டென ஒரு பதிலைச் சொன்னாள். அதைக் கேட்டு அப்படியே திகைத்துப் போனது அந்தக் குடும்பம்.
நானும் அவள் சொன்னதைக் கேட்டு அப்படியே உறைந்து போயிருந்தேன்.
உலகமறியாத வயதில் அந்தப் பிஞ்சு சொன்ன பதில் என் சிந்தனையைப் புரட்டி உலுக்கி எடுத்தது.
அப்படி என்னதான் சொல்லிவிட்டாள் அச் சிறுமி?
"நான் அந்த உம்மாச்சியைப் பார்த்து எல்லாரையும் நல்லா வச்சிண்டிருக்கிற நீ முதல்ல உன்னை நல்லாப் பார்த்துக்கோன்னு சொல்லுவேனே!" என்றாள் அக்குழந்தை.
எப்பேர்ப்பட்ட உயரிய சிந்தனையும் ஆண்டவனிடத்தே அதீத அன்பும் இருந்திருந்தால் அக்குழந்தை அந்த ஆண்டவனுக்கே 'நல்லா இரு' என்று ஆசி வழங்கும்?
அந்தக் குழந்தைக்கு இருந்த அதே பக்திப் பரவசம் தோய்ந்த மனநிலை பல நூறாண்டுகளுக்கு முன்பு திருவில்லிப் புத்தூரைச் சேர்ந்த விஷ்ணுச் சித்தன் என்பவருக்கும் இருந்தது.
அதனால் தான் பட்டர் பிரானாகப் பாண்டிய அரசனால் பட்டம் சூட்டப்பட்ட அந்த அருளாளரால் பன்னிரு ஆழ்வார்களிலேயே தலையாய
' பெரியாழ்வார்' ஆக முடிந்தது.
அவரை ஏன் ஆழ்வார்களில் முதலிடத்தில் வைத்தார்கள்?
அவர் பனிரெண்டு ஆழ்வார்களில் அனைவருக்கும் மூத்தவரா?
இல்லை.
அவர் இயற்றிய பாசுரங்களின் எண்ணிக்கை மிக அதிகமா?
இல்லை.
தனக்குப் பின்னாள் தன் மகள் கோதை என்ற ஆண்டாளை பெண் ஆழ்வாராக உலகிற்கு தந்ததாலா?
இல்லை.
எல்லாம் வல்ல அந்த இறைவனுக்கே தன் மகளை மணமுடித்து அவனுக்கே மாமனார் ஆனதாலா?
இல்லவே இல்லை.
பின் எதற்காக அவரை பெரியாழ்வார் என்கிறோம்?
மதுரையை ஆண்டு வந்த வல்லபத்தேவன் என்ற மன்னனுக்கு ஒரு ஐயம் ஏற்பட்டது. மறுமைக்கு வேண்டியதை இம்மையில் தேட எது சிறந்த வழி என்ற ஐயம்.
அரசவை சொன்ன ஆலோசனைப்படி ஒரு சத்சங்கத்திற்கு அழைப்பு விடுத்தான். எல்லா இடங்களிலிருந்தும் சமய அறிஞர்கள் ஒன்று கூடி ஆராய்ந்து, விவாதித்து முடிக்கும்போது விஷ்ணுச்சித்தன் உரைத்த மால்நெறி தத்துவமே வென்றது.
திருமால் ஒருவனே உய்ய ஒரே வழி என்ற அவரது கருத்துக்கு இசைந்த பொற்கிழி கட்டிய கம்பம் தானே வளைந்து கொடுக்க விவாதத்தில் அவர் வென்றார்.
மன்னனின் ஐயம் தீர்ந்ததால் அவன் அவருக்கு பட்டர் பிரான் என்ற பட்டம் சூட்டி, பரிசளித்து, அவரை யானைமேல் அமர்த்தி நகர்வலம் வரச் செய்த போது திடீரென அந்த அற்புதம் நிகழ்ந்தது.
பக்தனின் மேன்மையில் மகிழ்ந்த பரந்தாமன் கருடவாகனத்தில் தாயாரோடு அப்போது வானில் நேரில் அவருக்கு காட்சி தந்தான்.
இந்நிகழ்வை நாம் சற்று கவனமாக அவதானிக்க வேண்டும்.
சற்று நேரம் முன்பு ஷீரடியில் சிறுமி ஒருத்தி சொன்ன வார்த்தைகள் தங்கள் நினைவிற்கு வருகிறதா?
அதே மனநிலையில் தான் பட்டர் பிரான் அன்று இருந்தார்.
மாலனைப் பார்த்தவுடன் அவர் என்ன கேட்டிருப்பார் என்று நினைக்கிறீர்கள்?
தனக்கு நன்மைகள் எல்லாம் வேண்டினாரா?
தமக்கு இருந்த அல்லல்களை தீர்க்கும் படி கேட்டாரா?
தனக்கு இம்மையில் வீடுபேறு வேண்டினாரா?
கிடையாது.
வேறு என்ன தான் கேட்டார்?
நாரணனிடம் எதையும் தனக்காக அவர் கேட்கவில்லை.
மாறாக அவர் அவனியைக் காக்கும் அந்தப் பெருமாள் நன்றாக இருக்க
வேண்டும் என்று மட்டுமே வேண்டினார்.
அதற்காக 'பல்லாண்டு' என்ற இலக்கிய வகைமையைச்( genre) சேர்ந்த காப்பு செய்யும் பாசுரங்களையும் அவர் அப்போது பரவசமாகப் பாடினார்.
'பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு, பலகோடி நூறாயிரம், மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா, உன் சேவடி செவ்வித் திருக்காப்பு' என்று தொடங்கி மொத்தம் பனிரெண்டு பாசுரங்களைப் பாடி கடவுளுக்கே நன்மை வேண்டிய பெருந்தகை அவர்.
வைணவ சம்பிரதாயத்தில் மங்களாசாசனம் என்பது சிறப்பான ஒரு அம்சம்.
அது என்ன மங்களாசாசனம்?
மங்களம் என்றால் நன்மை.
ஆசாசனம் என்பது வேண்டுதல்.
ஆக நன்மைகளை வேண்டிப் பாடுவதே மங்களாசாசனம் எனப்படும்.
ஆண்டவனுக்கே நன்மை வேண்டி பக்தன் ஒருவன் மங்களாசாசனம் செய்விப்பது என்பது வேறு யாரும் கனவிலும் நினைத்திராத கைங்கரியம் அல்லவா!
அதனால் விளைந்த சிறப்புக்கள் இரண்டு.
வரிசையில் எட்டாவது ஆழ்வாரான
பட்டர் பிரான் என்ற விஷ்ணுச்சித்தன்
"பெரியாழ்வார்" எனச் அழைக்கப்பட்டது அதனால் தான் என்பது முதலாவது சிறப்பு.
மொத்தம் பனிரெண்டு பாசுரங்கள் மட்டுமே கொண்ட அந்தத் 'திருப்பல்லாண்டுப் பாசுரங்கள்' தான் பின்னாளில்
நாதமுனியால் ஆழ்வார்கள் உருகிப் பாடிய பாடல்கள் 'நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம்' என்ற தமிழ் மறையாகத் தொகுக்கப்பட்ட போது எல்லாவற்றுக்கும் மேலாக முதல் பாசுரமாகவும் இடம்பெற்றது.
அது இரண்டாவது சிறப்பு.
திருமாலின் மேல் பெரியாழ்வார் வைத்திருந்த அன்பு அளவு கடந்தது.
ஞானமும் கடந்தது. அந்நிலையில் அவருக்கு தான் ஒரு பக்தன் மட்டுமே என்பதும் தான் தரிசிப்பது தன்னை மட்டுமல்ல, அகில உலகத்தையே ரட்சிக்கும் பரந்தாமன் என்பதும் மறந்து போனது. அது ப்ரக்ஞை அற்ற ஒரு தவ நிலை.
'மங்களா சாசனத்தில் மற்றுள்ள ஆழ்வார்கள் தங்கள் ஆர்வத்தளவு தானன்றிப் - பொங்கும் பரிவாலே வில்லிப் புத்தூர்ப் பட்டர் பிரான் பெற்றான் பெரியாழ்வார் என்னும் பெயர் ' என்று மணவாள மாமுனிகள் சும்மாவா சொன்னார்!