Tuesday, 10 October 2017

பாட்டியின் திவசம்

மடியாக
மனையில் அமர்ந்து,
அவசரமாக
எல்லாம் முடித்து,
ஆயாசமாக
கிளம்புகிற சமயம்.

செல்போனில்
ஒரு காதோடு
தன் மனசையும்
வைத்திருந்த
அந்த வாத்தியார்
'பெருமாள  நினைச்சுக்கோ,
பாட்டிய நினைச்சுக்கோ'
என்றபடி எழ,
அறையில்
சுழன்ற புகையில்
பாட்டியின் முகம்
மெல்லக் கரைந்து
நழுவிப் போனது.

எப்போதோ
நான் எழுதிய கவிதை
ஒன்று
என் நினைவை இடற,
கழிவிரக்கத்தின்
உந்துதலில் வழிந்த
கண்ணீரை
சுண்டு விரலால்
துடைக்கும் போது
யாரோ சொன்னார்:
' புகை 
ஜாஸ்தியோன்னோ,
கண்ணாடியை
ஏன் கழட்டினீர்?'

இனி
இதெல்லாம்
நடப்பதற்கு
அடுத்த வருடம்வரை
காத்திருக்க வேண்டும்.

1 comment: