Wednesday, 31 January 2018

அஹம் ப்ரம்மாஸ்மி

அந்த
மருத்துவமனையில்
ரத்த தானப் பிரிவில்
நான்
கடவுளைச் சந்தித்தேன்.

தன்னைக் காப்பாற்றியதற்காக
அந்தக் கடவுளிடம்
ஒரு பெண்
நன்றி சொல்லிக்
கொண்டிருந்தாள்.

'நீங்கள் கடவுளா?'
என்ற கேள்வியோடு
எங்களின் உரையாடல்
துவங்கியது.

'அப்படித்தான் என்னை
எல்லாரும் சொல்கிறார்கள்'
என்றார் அவர்.

'உங்கள் பெயர்?'
என்ற கேள்விக்கு
அவருடமிருந்து
கடைசி வரை
பதில் இல்லை.

'ராமனா? ஏசுவா?
அல்லாவா? இல்லை,
புத்தனா?'
என்றேன்.

'அதெல்லாம்
நீங்கள் எனக்கு
வைத்த பெயர்கள்'
என்றார் கடவுள்.

'நீங்கள் எந்த மதம்?'
என்று கேட்டேன்.

'அப்படி எதுவும்
எனக்குக் கிடையாது'
என்றார் கடவுள்.

'நான் சொன்ன
கடவுள்களை நீங்கள்
சந்தித்ததுண்டா?'
என்று கேட்டேன்.

'அப்படி யாரையும்
நான் பார்த்ததில்லை'
என்றார் கடவுள்.

'நீங்கள் ஒருவர்
இருப்பது போலவே
தோன்றவில்லை'
என்று கேட்டேன்.

'நீ நீயாக
இருந்தால்
நான்
நானாக இருப்பேன்'
என்றார் அவர்.

'நீங்கள் இங்கே
இருந்தால் நன்றாக
இருக்குமே' என்றேன்.

'என்னிடமிருந்து
உங்களை எதுவோ
தடுத்தால்
அது என்னுடைய
தவறில்லை'
என்றார் கடவுள்.

'நீங்கள் தானே
இத்தனை மோசமான
குணங்களோடு
மனிதர்களைப் படைத்தீர்கள்?'
என்று கொஞ்சம்
கோபத்தோடு கேட்டேன்.

'நானா?' என்று கேட்டவர்
சிரித்தபடி தொடர்ந்தார்.
'நீங்கள் அல்லவா
என்னைப் படைத்தீர்கள்?'

ரத்த தானம் முடிந்து
திரும்பிப் பார்த்தேன்.
கடவுளை அங்கே
காணவில்லை.

எங்கேயேனும்
கடந்து உள் சென்று
இருப்பார்
என்று நினைத்தபடி
வீடு வந்து விட்டேன்.

Sunday, 28 January 2018

அமானிடன்

என்னைத்தவிர யாருமற்ற
அந்த அறையில் என்னுடன்
அதுவும் இருக்கிறது.

காற்று வீசாமல்
ஊதுபத்திப் புகை 
வளைகிறது.

குளிர் இல்லாமல்
சில்லென ஆகிறது
காற்று.

அழைத்தேன்.
கேட்டேன்.
கைகளால் துழாவினேன்.
கத்தியும் பார்த்தேன்.
சலனமில்லை.

புகையாகக் கூட
இல்லாத ஒன்றை
எப்படி 'ஆவி'
என்றழைப்பது?

தான் அங்கே இருக்கிற
ஒன்றைத் தவிர
வேறு எதையும்
அது
செய்யவில்லை.

செத்துப் போனவனா?
வேற்று கிரகவாசியா?
காட்சிப்பிழையா?
மனப்பிறழ்வா?
வினாக்களால்
நிரம்பி வழிகிறது
என் அக அறை.

மையிருளில்
ஒற்றை மெழுகுவர்த்தி
ஒளிகாட்ட
ஒய்ஜா போர்டில்
'நாங்கள் மனிதர்கள்,
நீங்கள் யார்' என்று
எழுதிக் கேட்டேன்.

விரல்களின் வழியே 
ஏதோ ஒன்று
சில்லென்று பரவியது.

செல்லாது போன
அந்தச் செப்புக் காசு
இழுத்துக் கொண்டு போன
எழுத்துக்களை எல்லாம்
சேர்த்தும் கோர்த்தும்
வாசித்த போது
அது
'த்தூ,
நீங்கள் எல்லாம்
வெறும் பிணங்கள்' என்றது.