Wednesday, 21 February 2018

Miss. தமிழ்த்தாயே, நமஸ்காரம்..

வேதாசலம் @ மறைமலை அடிகள், திருமாவளவன்,  கவிஞர்
மகுடேசுவரன்,  கவிஞர் வைரமுத்து ஆகியோர்களின் 'தமிழில் மட்டுமே பெயர் சூட்டுக' என்ற கோரிக்கை இந்து மதத்தினருக்கு மட்டும் தானா?

இல்லை அது ஒரு சர்வ மதக் கோரிக்கையா?

------

இன்று உலகத் தாய்மொழி தினம்.

-------

போன வாரம் தமிழ் இந்துவில் வெளியான மறைமலை அடிகளைப் பற்றி வைரமுத்து எழுதிய கட்டுரையைப் படித்தீர்களா?

------

கடந்த வருடம் விகடன் ' தடம்' இதழில் கவிஞர் மகுடேசுவரன் அவர்கள் எழுதிய ' பெயர் வைக்கும் பேறு' கட்டுரையைப் படித்தவுடன் நினைவிடுக்கின் ஆழத்திலிருந்து இச் சம்பவம் முகிழ்த்தது.

தற்போது வைரமுத்துவின் கட்டுரையால் மறுபடியும் கிளைக்கிறது.

----

1999. அக்டோபர் மாதம். 21ம் தேதி.

எங்களுக்கு மகள் பிறந்தாள்.

என்ன பெயர் வைக்கலாம்? என்ற தேடல் படலம் துவங்கியது.

எனக்கு அவளுக்கு தூய தமிழில் பெயர் வைக்கவேண்டும் என்ற விருப்பம் இருந்தது.

'பூங்குழலி' அல்லது 'சுடர்க்கொடி' என்பவை என் விருப்பமாக இருந்தன.

என் மனைவி உட்பட மற்றவர்களுக்கு அதில் உடன்பாடில்லை.

அத்தனை பேரையும் பகைத்துக் கொண்டு பெயர் சூட்ட வேண்டிய சூழ்நிலையில் இருந்தேன்.

சில உறவினர்களின் பரிந்துரை கிடைத்தன.  என்னென்னவோ புத்தகங்களைப் பார்த்தோம்.
மனேகா காந்தி எழுதியது உட்பட.

ஒன்றும் படியவில்லை.

ஏற்கெனவே ஜாதகப் பெயராக என் தாயாரின் பெயர் என் மகளின் முதல் பெயராகத் தெரிவாகிவிட்டது.

என் மகளை 'அலங்காரவல்லி' என்று யார் விளித்தாலும் அது  என் அம்மாவையே பெயர் சொல்லி அழைப்பது போலாகும் என்பதால் 'அழைப்பதற்கு' என இன்னொரு பெயர் சூட்ட வேண்டும்.

அதில் தான் இழுபறி.

என் பெயரில் முதல் எழுத்தான 'சீ' மற்றும் என் மனைவியின் பெயரில் கடைசி எழுத்தான 'தா' இரண்டையும் சேர்த்து 'சீதா' என்ற நாமகரணம் செய்யலாம்  என்றார் ஒருவர். இப்படிப் பல பெயர்கள் அணிவகுத்தன.

செளமிய நாரயணப் பெருமாள் நினைவாக செளமியா என்றார் என் அம்மா.  சஹானா என்றார் என் மனைவியின் சகோதரி.

உடன்பாடில்லை.

பெயர் மிக நவீனமாக இருக்க வேண்டுமாம். அதே கருத்தில் என் பெயரின் ஆங்கில வடிவத்தின் முதல் எழுத்தான 'S' மற்றும் என் மனைவியின் பெயரின் ஆங்கில வடிவத்தின் கடைசி எழுத்தான 'dha'  ஆகிய இரண்டையும் சேர்த்து நடுவில் இருவர் எனப் பொருள் படும் வகையில்  ' we ' யைச் சேர்த்து 'Swedha' என்ற ஒரு காரணப் பெயரை உருவாக்கிச் சொன்னவுடன் துள்ளிக் குதிக்காத குறைதான்.

சில மாற்றங்களுடன் என் மனைவியின் பெயரின் முதல் எழுத்தையும் சேர்த்து
R.(adha) S.(rinivasa raghavan) Shwetha  என முடிவானது. 

அவரது பெயர் அப்படியே பிறப்புச் சான்றிதழிலும் பதியப்பட்டது.

தூய தமிழ்ப் பெயர் சூட்ட வேண்டும் என்ற என் எண்ணம் நிறைவேறவில்லை என்ற வருத்தம் இன்றும் என்னில் உறைந்தே கிடக்கிறது.

------

ஒரு  flashbackம் சொல்ல வேண்டும்.

என்னை மாதிரியே தன் குழந்தைக்கு சுத்தத் தமிழில் பெயர் வைக்க வேண்டும் என்று என் நண்பனுக்கும் அவா.

அவருக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தவுடன் பார்க்கப் போயிருந்தேன்.

அப்பேச்சும் எழுந்தது.

தமிழ்ப் பெயரை முடிவு செய்துவிட்டு அவன் மனைவி மற்றும் உறவினரின் சம்மதம் பெறுவதற்காக உள்ளே போனவன் தொங்கிய முகத்தோடு வெளியே வந்தான்.

என்னவென்று வினவினேன்.

சொன்னான்:
'உருதுப் பெயர் தவிர வேறு எந்தப் பெயரும் சூட்டக் கூடாது என்று சொல்லிவிட்டார்கள்' என்றான்.

'சரிதானே' என்று சொல்லிவிட்டு விடைபெற்றேன்.

-------

இப்போது இந்தக் கதை எதற்கு என்கிறீர்களா?

-------

இஸ்லாமியர்களும் மற்றும் கிறித்தவர்களும் தங்கள் மதம் சார்ந்த மற்றும் தங்களின் மதம் எந்த மொழியைப் பின்பற்றுகிறதோ அந்த மொழியில் மட்டும் தங்கள் குழந்தைகளுக்கு பெயர் சூட்டும் போது இந்துக்களும் தாங்கள் விரும்பும் வடமொழி அல்லது வேற்று மொழிப் பெயர்களைச் சூட்டுவதும் ஏற்புடையது தானே!

-------

அது சரி, தமிழ் தேய்வதை பின்பு எப்படித் தடுப்பதாம்?

தசாவதாரம் படத்தில் வரும் வசனம் போல வேறு மொழி பேசுபவன் தமிழை வளர்த்து விட்டுப் போவானோ?

-------

என் கேள்விக்கு என்றைக்காவது கவிஞர் மகுடேசுவரன் அல்லது வைரமுத்து ஆகியோர்களைச் சந்தித்தால் விடை கிடைக்கலாம்.

--------

சுஜாதா சொன்னது போல நம் தமிழ் மொழி இப்படித்தானா?

-மிஸ். தமிழ்த்தாயே, நமஸ்காரம்!-

-----

1 comment: