Tuesday, 15 May 2018

பச்சை வயல் மனது....

தமிழ் கூறும் நல்லுலகில் வசீகரமான
எழுத்தாளர்களின் வரிசையில் என் கணிப்பில் முதல் இடம் சுஜாதாவிற்கு என்றால் அடுத்த இடம் சந்தேகமின்றி பாலகுமாரனுக்குத்தான்.

வாசிப்பு என்ற வழக்கம் என்னைத் தொற்றிக் கொண்ட போது எனக்கு வயது 13.  தொலைக்காட்சி என்ற ராட்சசன் வராதிருந்த காலம். புத்தகங்கள் மட்டும் உலகை எட்டிப் பார்ப்பதற்கான நல்ல சாளரமாக இருந்த காலம். என்னைப் பொறுத்தவரை அது எனது பொற்காலம்.

சுஜாதா, பாலகுமாரன், இளையராஜா, யேஸுதாஸ், எஸ்பிபி என்ற கைகளைப் பிடித்துக் கொண்டுதான் வளர்ந்தேன்
என் வயதை ஒத்த நண்பர்கள் எல்லோரும் இன்றும் அப்படித்தான் சொல்கிறார்கள்.

முதன்முதல் அவரது 'மெர்க்குரிப் பூக்கள்' வாசித்த போது அதன் உள்ளடக்கம் அதிகம் புரியாவிட்டாலும் அவரது எழுத்தின் வீச்சு கட்டிப்போட்டது.

அதன் பின்பு 'இரும்புக்குதிரைகளில்' தொடங்கி 'கரையோர முதலைகள்', 'தாயுமானவன்', 'பயணிகள் கவனிக்கவும்' என்று அவரது தொடர்கதைகளை ஒன்று விடாமல் படித்தது எல்லாம் இன்றும் மனதில் அழியாத கோலங்களே..

ஆனந்த விகடனில் தனி இணைப்பாக மணியன் செல்வனின் படத்தோடு வெளிவந்த அவரது 'பச்சை வயல் மனது' என்ற குறுநாவல் எனது நெஞ்சுக்கு மிக நெருக்கமானது. அதில் வரும் அந்த மூன்று சகோதரிகள் ஆகட்டும், அதில் வரும் ஒரு கவிதாயினி சகோதரியின் தொலைக்காட்சி கவியரங்கக் கவிதைகளாகட்டும், அதில் அவளைப் பெண் கேட்க வரும் அந்த ஆணாகட்டும், அத்தனையும் அசாத்தியமான எழுத்துக்கள்.

அதில் இடம் பெற்ற 'எனக்குள்ளேயும் எப்போதாவது இடியிடித்து மழை பெய்யும்' என்ற ஒரு கவிதை இன்றும் என் இதயத்தை உலுக்கிக் கொண்டே இருக்கிறது.

காதல் என்ற உணர்வை அதன் அடி ஆழம் வரை சென்று பெயர்த்து எழுதினார் பாலா...

சில சமயங்களில் அவரது எழுத்து நம்மை அறியாமல் நமது அந்தரங்கத்தை ஆழமாக அலசியதாகவே தோன்றும்.

ஒரு பெண்ணை ஒரு ஆண் எப்படிப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதை ஒரு ஆணாக இருந்து ஒரு பெண்ணின் போக்கில் சொல்வது என்பது மிகக் கடினம். அந்த வித்தை அவருக்கு லாவகமாக கைவந்தது.

'நாயகன்' திரைப்படத்தின் வெற்றிக்கு அவர் வசனம் எழுதியதில் பெரும்பங்கு இருந்தது. 'குணா'வில் அவரது வசனங்கள் படத்தை வலுப்படுத்தியது. பாட்ஷா விற்கும் அவரே வசனம். ஆனால் திரைப்பட இயக்கம் அவருக்கு ஏனோ வசமாகவில்லை. பாக்கியராஜ் மேற்பார்வையில் அவர் இயக்கிய ' இது நம்ம ஆளு' படத்தில் பாலகுமாரன் என்பவரைக் காணாது மிகவும் வருந்தியவர்களில் நானும் ஒருவன்.

நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், தொடர்கதைகள், புதினங்கள் அவரால் எழுதப்பட்டன. அவற்றால் இன்னும் நூறாண்டுகளாவது அவர் பேசப்படுவார்.

'கல்கி' முடித்த இடத்தில் தொடங்கி இராஜராஜன் பற்றி பாலா எழுதிய 'உடையார்' தான் அவர் எழுதி நான் கடைசியில் வாசித்த எழுத்துக்கள்.
அந்த எழுத்தின் வசீகரம் வார்த்தைகளால் சொல்ல வல்லது அல்ல. அது படித்துப் பார்ப்பவர்கள் அனுபவித்து அறிய வேண்டிய பரவசம்.

அதை அடுத்து அவர் ராஜேந்திர சோழனைப் பற்றி எழுதிய 'கங்கை கொண்ட சோழன்' புதினம் இன்னும் படிக்கப்படாமல் என் புத்தக வரிசையில் என்னைப் பழித்துக் கொண்டிருக்கிறது.

' கவிஞனுக்காய் வசந்தம் காத்திருக்குமா?
காற்று மெல்ல வசந்தத்தைக் கடத்திக் கொண்டு போகும்.
சருகுகள் தரையிறங்கி பூமி வெடிப்பில் சிக்கிக்கொண்ட மண்புழுவை மெல்ல மெல்ல மூடும்'

இப்படியெல்லாம் எழுதி நம்மைக் கிறங்கடித்த பாலாவையும் காலம் இன்று கடத்திக் கொண்டு போய்விட்டது...

ஆனாலும் அவரது படைப்புக்களை எங்கேயாவது யாராவது வாசிக்கும் போதெல்லாம் நிச்சயம் அவரது எழுத்துகள் உயிர் பெற்று பாலாவின் பெயரை உரக்கச் சொல்லும்.

Saturday, 5 May 2018

குழந்தைகளின் கடவுள்கள்

அடுக்ககத்தின்
பொதுவிடத்தில்
அந்தக் குழந்தைகள்
விளையாடினர்.

'இன்னிக்கு என்ன விளையாட்டு?'
என்ற கேள்வியில்
விளையாட்டு களை கட்டியது.

'உம்மாச்சி விளையாட்டு' என்று
சொன்ன ஒரு குழந்தைக்கு
உலகில் மொத்தம்
எத்தனை கடவுள்கள்
என்பது கூடத்  தெரியாது.

'நான் ஜீசஸ்' என்றது
ஒன்று.
'நான் அல்லா  சாமி'
என்றது மற்றொன்று.
'அப்ப நான்?'
என்று கேட்ட குழந்தை
முருகன் ஆனது.

சிரித்துக் கொண்டும்,
சண்டையிட்டுக் கொண்டும்,
தழுவிக் கொண்டும்,
களித்துக் கிடந்த அவர்களை
'நேரமாயிற்று, வா' என்று சொல்லி அவரவர்கள் வீட்டிலிருந்து
யார் யாரோ
கூட்டிச்செல்ல வந்தார்கள்.

அங்கிருந்து
தங்களது வீட்டிற்கு
கிளம்பியபோது
அந்தக் குழந்தைகள்
'ரிச்சர்ட்' ஆகவும்
'பல்கிஸ்' ஆகவும்
'அனிருத்' ஆகவும்
அழைத்துச் செல்லப்பட்டார்கள்.

Friday, 4 May 2018

முன்னாள்

அன்றைய சந்திப்பின்
அத்தனை நிமிடங்களையும்
வினாக்களே
விழுங்கிக் கொண்டன.

கேட்டார்கள்.
கேட்டுக்கொண்டார்கள்.

----

'எப்போதெல்லாம்
என் நினைப்பு உன்னை விழுங்கும்?'

'வேறு எதுவாகவும் இல்லாமல் நானாகவே நான் இருக்கும்
பொழுதெல்லாம்'

----

'உனக்கு எப்போது என் ஞாபகம்?'

'என் இமைகள் சார்த்திய போதெல்லாம்'

-----

ஒரு மெளன இடைவேளையில்
விரல்கள்
ஐந்தோடு பத்தாயின.

----

'இந்த ஸ்பரிசம்
எதைக் காட்டுகிறது?

'காமம் துறந்த காதல்
சாத்தியம் என்பதை'

----

சொல்லி முடிக்கவில்லை,  விரல்களில்
உதடுகள் பதிந்தன.

----

'இது எதைக் குறிக்கிறது?'

'முத்தம் காமத்தின்
நுழைவாயில் என்பதை'

-----

விடுவித்துக் கொண்ட
கரங்களில்
இதழ்களின் ஈரத்தோடு
கண்ணீரின் ஈரமும் சேர்ந்து கொண்டது.

----

'இத்தனைக்குப் பிறகும் நீ ஏன் என்னிடம் இவ்வளவு பிரியம் காட்டுகிறாய்?'

'ஏன் என்றால் நான் உன்னை இன்றும் காதலிக்கிறேன்.'

'அது தான் கை கூடவில்லையே?'

'திருமணத்தில் முடியாது போயினும் துணையை வெறுக்காத அன்பு என்னுடையது."

-----

'என்ன இருந்தாலும் நான் உனக்கு
ஒரு 'முன்னாள்' தானே?

'இல்லை. இல்லை.
காதலில் ஏது மாஜி?'

-----

'அப்படியானால்
நான் உனக்கு யார்?'

'நீ என் இதயத்தின் இசை'.

-----

'உனக்கு நான் யார்?'

'நீ என் கருவில் மரித்த சிசு'.

------

'அடுத்து என்ன?'
என்ற கேள்விக்கு
இருவரிடமும் பதில் இல்லை.

-----

அதற்குப் பின்பும்
உயிர் மரித்து
உடல் வாழ்கிறது
அவர்களிடம்.

-----