கடவுளரில் க்ருஷ்ணனைப் போல கணபதிக்கும் செல்லம் ஜாஸ்தி.
அவன் அருளோடுதான் எல்லாக் காரியங்களும் துவக்கப்- படுகின்றன.
நல்வழி என்ற தமிழ் நீதி நூலின் கடவுள் வாழ்த்துப் பாடலான
"பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை
நாலும் கலந்துனக்கு நான் தருவேன் - கோலஞ்செய்
துங்கக்கரிமுகத்துத்தூமணியே நீ எனக்கு சங்கத்தமிழ் மூன்றும் தா"
என்ற பாடல் தமிழ் உலகில் மிகவும் பிரசித்தி பெற்றது.
(கோலம் = அழகு, துங்க = பெருமை மிகுந்த, கரிமுகம் = யானை முகம், தூமணி = தூய மணி, தமிழ் மூன்று = இயல் தமிழ், இசைத் தமிழ், நாடகத் தமிழ்)
பெருமை மிகுந்த யானை முகத்தைக் கொண்ட விநாயகக் கடவுளே! நான் உனக்கு இனிய பாலையும் தெளிந்த தேனையும் வெல்லப் பாகினையும் பருப்பு வகைகளையும் கலந்து படைக்கின்றேன். நீ எனக்கு இயல், இசை, நாடகம் என்னும் மூன்று தமிழையும் தருவாயாக!
என்பதாகவே இப்பாடல் அர்த்தம் கொள்ளப்படுகிறது.
ஆனால் கொஞ்சம் ஆழ்ந்து யோசித்தால் அந்த அர்த்தத்தில் ஒரு ஐயம் எழலாம்.
மனித முயற்சிக்கு கடவுளின் அருள் என்பதே இறை வழிபாட்டின் ஆதார அச்சு. மனிதன் முயற்சி ஏதும் செய்யாமல் இறையருளை மட்டும் நம்பி எதிலும் வெற்றி காண முடியாது.
இதை மகாபாரதத்தின் பல கட்டங்களில் கண்ணன் அழகாக உணர்த்தியிருப்பான். கைகளை விடுத்துத் தொழும் வரை பரந்தாமன் பாஞ்சாலிக்குக் கை கொடுக்கவில்லை.
கணிதத் தேர்வுக்கு பயிற்சி செய்யாமல் பிள்ளையாருக்கு 108 தேங்காய்களை உடைப்பதாக வேண்டிக் கொண்டால் காரியம் நடக்குமா?
ஒளவையார் என்ன, நம்மைப் போல மிகச் சாதாரணமானவரா, கடவுளிடம் அப்படிப் பேரம் பேச?அவர் நான்கு பொருட்களைத் தருவதாகக் கூறி, மாறாகத்
தமக்கு மூன்று தமிழையும் அருளும்படி விக்னேஷ்வரனைக் கேட்கிறார் என்பதாக அப்பாடல் பொருள் கொள்வது சரியா?
இறைவனுக்கு உகந்தவற்றைப் படையலிட்டு அவனை வணங்கி, நமது வேணடுதலை வைப்பது ஐதீகம்.
ஐயமில்லை.
பாலையும், தேனையும், பாகையும், பருப்பையும் கலந்து நான் உனக்கு தருவேன் என்று ஒளவை கூறுவதாக இப்பாடல் அமைந்துள்ளது.
கணநாதா, நீ எனக்கு முத்தமிழைக் கொடுத்தால் உனக்கு நான் இவையெல்லாம் தருவேன் என்றுதான் கூறுவதாகப் பொருள் தருகிறது இப்பாடல். மாறாக இவற்றை உனக்குத் தந்துவிட்டேன் என்றோ அல்லது இதோ இவற்றை உனக்கு படைத்திருக்கிறேன் என்றோ அல்ல.
இங்குதான் நம் ஐயம் சற்று வலுப்பெறுகிறது.
நான் படித்த கோபிச்செட்டிப் பாளையம் வைர விழா மேனிலைப் பள்ளியில் ஒரு நாள் இலக்கிய மன்ற விழாவிற்கு
திருமுருக. கிருபானந்த வாரியார் அவர்கள் வந்திருந்தார்கள்.
அவர் இப்பாடலுக்குச் சொன்ன விளக்கம் சாலச் சிறந்ததாக எனக்குத் தோன்றுகிறது.
இயல், இசை, நாடகம் என்ற மூன்று தமிழ்ச் செல்வத்தையும் தனக்கு அந்த முழு முதற்கடவுள் அருள வேண்டுகிறார் ஔவையார்.
அந்தப் பாடலை இப்படி வரி மாற்றிப் படித்துப் பார்ப்போம்.
"கோலஞ்செய் துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீ எனக்கு சங்கத் தமிழ் மூன்றும் தா;
பாலும் தெளி தேனும் பாகும் பருப்புமிவை நாலும் கலந்துனக்கு நான் தருவேன்."
ஒளவை விநாயகனுக்கு ஒரு சாமான்ய மனிதனைப் போல அந்த இனிய நான்கு பொருட்களைக் கலந்து படையல் ஏதும் படைக்க வில்லை; படையல் படைப்பதாக உறுதியளித்து அவனிடம் பேரம் பேசவும் இல்லை.
தன்னை முத்தமிழ் வித்தகனாக்கு என்று அவனிடம் வேண்டுகிறார்.
எதற்கு இந்த முத்தமிழ் அறிவு வேட்கை?
பொருள் தேடவா?
இல்லவேயில்லை.
பருப்போடு, பால், தேன், பாகு ஆகியவற்றைக் கலந்தால் கிடைக்கும் சுவையான உணவினைப் போல
முத்தமிழால் தாம் பலப்பல பாடல்கள் இயற்றி தமிழ்ச் சேவை புரிவதற்காகவே அந்த தமிழ் வேட்கை ஒளவைக்கு!
அதற்குத்தான் ஒளவையார் அப்படியொரு வேண்டுதலை வைத்தார் என்றார் வாரியார்.
சரிதானே!
தமிழை முறைப்படி அறிவதே அறிவு!
விநாயகன் அருள் அவனியை நிறைக்கட்டும்!
No comments:
Post a Comment