Monday, 15 July 2019

நீ, நான், நிலா....

நிலாவின் தாசன்
நான்.
நீயோ மழையின்
ரசிகை.

நிலவும் மழையும்
சேர்ந்திருந்த
ஒரு நாளில்
சந்தித்துப் பிரிந்த
தருணத்தில்
மழை நேரத்து
கரு முகில்கள்
வான் நிலவை
மறைத்துவிட,
திரண்டு கசிந்த
உன் கண்ணீர்
கன்னங்களை
அடையும் முன்
மழை நீர் 
அதை தன்னுள்
கரைத்துக்
கொண்டது.

இப்போது புரிகிறது,
நீ நிலா என்றால்
நான் மழை....

Saturday, 13 July 2019

மேக தாகம்

மேகங்கள் வசீகரமானவை.
வித விதமான
வண்ணம் தரித்து
நினைத்த போது உருமாறி
உள்ளங்கவர்வதால்.

மேகங்கள் வினோதமானவை.
வெண்மேகமாக
மழை தாராது
கார்மேகமாகிப்
பொழிந்து விடுவதால்.

மேகங்கள் பாவப்பட்டவை.
கர்ணனைப் பெற்ற
குந்தியைப் போல
தான் பிரசவித்த
மழை மீது தனக்கே
உரிமை இல்லாததால்.

மேகங்கள் மோகம் மிக்கவை.
ஆதவனின் ஒளியை
இரவல் பெற்றாவது
வெண் பஞ்சு முகில்கள்
வண்ணத் துகில்கள் ஆவதால்.

ஆயினும்
மேகங்கள் சாபத்திற்கும் உரியவை.
தரிசாக இருந்த மண்மகள்
ஒருபாடாகச் சூல் கொண்டு
பயிராகி நிற்கும் போது
வெள்ளமாக வந்து
அவளின் கர்ப்பத்தைக்
கலைத்து விடுவதால்.

Friday, 12 July 2019

சும்மா இருப்பதில்லை காற்று

அவன்:

தூக்கத்தில் வரும்
கனாக்களிலும்
ஏக்கத்தில் எழும்
வினாக்களிலும்
கடப்பதல்ல என் வாழ்க்கை.

மெளனமாய் ஓடும் ஓடைக்கு
தடையாய் அமையும்
பாறைகளே இசையாவது போல
பாரமான நிகழ்வுகளைச்
சுமந்து வரும்
உன் நினைவுகளால் நான்
நகர்ந்து கொண்டிருக்கிறேன்.

அவள்:

என் கதை வேறு.
வண்டு துளைத்ததால்
புல்லாங்குழலாய் ஆன
ஒரு மூங்கில் போல
உன் சுவாசக்காற்று
என் நாசிகளின்
வழியே உட்புகுந்து
நீ என் இதயத்தில்
காதலாய் இடம் பெயர்ந்தாய்.
நான் அதை
மொழிபெயர்க்க முடியாமல்
அனுநொடியும்
கசிந்து கொண்டிருக்கிறேன்.

அவர்கள்:

மரங்கள்
அசையாது இருந்தாலும்
சும்மா இருப்பதில்லை
அந்தக் காற்று.