Wednesday, 21 December 2016

பரிகாசம்

அந்த அவன் 
நெடுஞ்சாலையின்
நடுவே கொளுத்தும் வெயிலில்
அமர்ந்திருக்கிறான்.

ஈக்களற்று காய்ந்து
நசுங்கிக் கிடக்கிறது
பிச்சையில்லாத
தட்டு.

ஒட்டிப் போன கூட்டின்மேல்
சதைப் போர்வை
சுருங்கியிருக்க
குருதி வடிந்திருந்தது.

குறுக்கிலும் நெடுகிலும்
விரைந்தன
சட்டைசெய்யாத
வாகனங்கள்.

முகத்தை சுளித்தன பலர்.
அவனின் அரை நிர்வாணம்
பார்த்துவிடக்
கூடாததாகக் கருதப்பட்டு
குழந்தைகளின் முகங்கள்
திசை திருப்பப்பட்டன.

யாருக்கும் விலகியறியாத
பெரும்புள்ளி வாகனங்கள்
அப்போது
விலகிச் சென்றன.

என்னப்பா செய்யறான்?
என்ற கேள்விகளை
நன்கு உண்டு விட்ட
எல்லோரும் புறக்கணித்தனர்.

செத்துப் போயிட்டானோ?
எடுத்துப் போட மாட்டாரோ?
என மாநகராட்சியை
வசை பாடிய யாரும்
அவன் உயிரோடு இருப்பதை
விரும்பவில்லை.

நாயும் சீந்தாத அவனை
காவல் துறை
நல்லவேளை
ஒரு எதிரியாகக்
கருதவில்லை.

சிக்னலில் காத்திருந்த பொழுதில்
அவன் வீடெங்கே?
அவனுக்கான சோறெங்கே?
என்று பின்னிருக்கையிலிருந்து
கேட்ட மகளிடம்
யாருமில்லை போல,
நம்ம வீட்டுக்கு கூட்டிட்டுப்
போலாமா? என்று
யாரோ ஒரு
அப்பன் சொன்னான்.
அய்யய்யோ என்றாள் அவள்.

எல்லோரும்
எதையோ எங்கேயோ
தொலைத்து விட்டு
அதைத் தேடி
விரைவது போலே
சென்றார்கள்.

அவனைக்கடந்து சென்ற
அந்த மூன்று வினாடி காலத்தில்
அவனின் முகத்தில்
தெரிந்த அந்த
அரை இஞ்ச் பரிகாசம்
யாரைப்பற்றியது?

Monday, 5 December 2016

ஜெ.

It is one life and she lived it.

இந்தியப் பெண்கள் தான் விரும்பிய வாழ்க்கை கிடைக்காவிட்டாலும் தனக்கு கிடைத்த வாழ்க்கையை பெருமைப் படுத்துவதில் வல்லவர்கள்.

ஜெ. யும் அப்படியே..

RIP.

ஓம் ஷாந்தி!

Sunday, 4 December 2016

Love and Love Only

Words are simple to utter.
Words are painful to bear. 
One word pleases
and eases someone.
Same word kills
and hurts another.
Our love is an ocean,
unfathomable in depth.
Our love may make us
To differ at times.
But never allow us
to whither.
Our bond, oh, not a sin to eschew.
But a bliss  to embrace.
Dreams galore, wishes to fulfill.
Faith in our hands,
hope in our hearts.
Let the bodies be buried.
Let the spirits be free.
Our souls  would take us
where we want to be.

Monday, 14 November 2016

நித்ரா

எந்நாளும் இழந்ததாய்
கிஞ்சித்தும் நினைவில்லை.
விழி மூடி மறுகணம்
மனம் உறங்கச் சென்றவன்தான்.
கனவேதும் கண்டதாய்
நினைவேதும் இருந்ததில்லை.

பசியோடு படுத்தாலும்
பழியோடு படுத்தாலும்
விழிமூட மறந்தேனில்லை.
கருக்கலில் விழித்தேனில்லை.

எப்பேதை ஏதுரைத்த போதிலும்
எப்போதை வழிமறித்த போதிலும்
நப்பாசை கொண்டதில்லை.
ஒப்பாரி வைத்ததில்லை.

கொண்டோர் ஒதுக்கியதும்
கண்டோர் தாங்கியதும்
மண்டையைத் துளைத்தறியேன்.
மனமது களைத்தறியேன்.

கண் கண்ட விபத்து நூறு.
செவி விழுங்கிய அமிலம் ஆறு.
ஆனாலும் ஒருநாளும்
ஏழுமணி உறக்கம் மறுத்தறியேன்.

உவகைக்கு குறைவில்லை.
வசதியும் பொருட்டில்லை.
உறக்கம் மட்டும் கண்கட்டி
கண்ணாமூச்சி ஆனதின்று.

கட்டியணைத்து உச்சிமுகரும்
நித்திராதேவியவள்
என்னை மட்டும் விட்டு
மாற்று மனம் தேடுவதேன்.

யானறிந்து தீங்கேதும்
யாருக்கேதும் இழைத்ததாக
எவரேனும் சாட்டுரைத்தால்
பற்றி அழுவேனோ,
சடலக்கூறு செய்வேனோ.

உலகெங்கும் உறங்கிவிடும்
நள்ளிரவின் உச்சத்தில்
எள்ளி நகைக்கும்
மனதுக்கு ஒன்று மட்டும்
புரிகிறது.

தனியனாய் இன்றி
தனிமையாய் இருத்தல்
சென்று வர இனிது.
தங்கிவிடல் கொடிது.

Sunday, 16 October 2016

சாயும் காலம்

அந்தி மாலை
இயற்கை
களை கட்டும்.

எட்டிப்பிடிக்கத்
தூண்டும் மரங்கள்
யாருக்கோ
சாமரம் வீசும்.

எட்டாத தொலைவில்
விண்மீன்கள்
யாருக்கோ
கண் சிமிட்டும்.

பகலவனோடு
ஊடல் கொண்ட
முகில் பொதிகள்
விலகியோடும்.

முகிலோடு
கோபம் கொண்ட
ஆதவன்
மண்மகளிடம்
தஞ்சமடைந்து
மடிசாயும்.

அவசரமாக
மஞ்சள் வானம்
தன் சரிகை
உடை மாற்றும்.

மேகத்தலைப்பை
விலக்கித் தலைகாட்டி
நிலவென்னும்
நல்லாள்
நாணும்.

தயங்கித் தயங்கி
செயற்கை ஒளி
மினுக்கத்
துவங்கும்.

கால்நடைகள்
அசை போட்டபடி
சோர்ந்து
பூனை நடைபோடும்.

பரவசப் பறவைகள்
இலவச
இளையராஜாக்கள்
ஆகிவிடும்.

அட மானிடா,
பார்த்ததில்லையா?

சரி, போகட்டும்.
இன்றாவது
உனது
அகக் கண்ணையும்
திற.

இயற்கையின்
மொழிபெயர்ப்பாளர்கள்
பறவைகள்
என்ற ரகசியம்
இன்று உனக்குப்
புலப்படும்.

காதலியின் வாசம் போல
காற்றின் வாசம்
உன் சுவாசத்தைச்
செப்பனிடும்.

புறத்தில்
இருள் கவிந்து
அகத்தில்
ஒளி வரும்.

அப்போது
சில்லென்ற காற்றாய்
முகம் அறைந்து
இவ்வுலகம் கேட்கும்.

'சொர்க்கம் என்ன
விண்ணிலா
உள்ளது?'

Monday, 10 October 2016

மற

நினைக்கத் தெரிந்த
மனங்கள்
மறக்கவும்
மறுக்கவும்
பழகிக்கொள்கின்றன.

ராத்திரியில்
பெய்யும் மழைக்கு
ஏது
வானவில்?

விளி

தனியாய்க் கிடந்தேன்.

என்ன இது மெளனம்
என்றபடி
தனிமையும்
சேர்ந்து கொண்டது.

உன்னுடன் தானே
இருக்கிறேன் தனியாக,
நீ வந்தால் தான்
தெளிவு என்றேன்.

அய்யோ, நான்
தங்கிவிட்டால்
அழிவு என்றது தனிமை.

பேசினோம்.
சிரித்தோம்.
ரசித்தோம்.
நிறைய.

அழுதோம்
என்று கூட ஞாபகம்.

ஆனால் என்ன,
எல்லாமே
மெளனமாக.

'ஹோ' என்ற இரைச்சலோடு
காற்றைக் கிழித்துக் கொண்டு தனிமை விடைபெற்றது,
மெளனத்தை
விட்டு விட்டு.

சிரித்துக்கொண்டேன்
நான்,
மெளனத்தின்
கரம் பற்றியவனாய்.

என்ன அங்கே சத்தம்
என்று உள்ளிருந்து
இன்னொரு சத்தம் கேட்டது.
ஏதோ முனகியிருப்பேன்
போலும்.

ஒன்றுமில்லை என்று
சொல்லிவிட்டு
பழையபடி
மெளனமானேன்.

Sunday, 2 October 2016

துறவு

என்ன சொல்லியிருப்பாய்
சித்தார்த்தா?
உன் துறவு
அவளையும்
சேர்த்தே என்றா?

Friday, 16 September 2016

விட்டில் பூச்சிகள்

மறுத்து விலகிச் சென்று
மங்கலாய் மறைந்த போது
நீ
மணலில் பதித்த
உன் கால் தடங்கள்
என் மனதில் தான்
பதிந்தன.

கட்டாயமாய் அவற்றை
மறந்து போன
தருணங்கள்
உருண்டோடிவிட்டாலும்
அவை தந்த அழுத்தம்
நெஞ்சில் ஒரு ஓரமாய்
இன்னும்
ஒளிந்து தான் கிடக்கிறது.

குழல் விளக்கில்
முட்டி மோதும்
விட்டில் பூச்சியா
நீ?

Thursday, 15 September 2016

அவளும் நானும் - 1

நேற்று மாலை;

ஷ்வேத்து, என்னடா பண்ற?

படிக்கறேம்ப்பா...

என்னடா படிக்கற?

மேத்பா, quadratic equations.

அப்டின்னா?

போங்கப்பா, உங்களுக்கு அதெல்லாம் புரியாது.

கிர்ர்ர்...

அது சரி, உங்க கைல  என்ன புக்?

சைக்காலஜிடா...கரஸ்ல பண்றேன்லடா செல்லம்...

இந்த வயசுல உங்களுக்கு பிஜியெல்லாம் தேவையா? அந்த நேரத்துல என் பாடத்தைப் படிச்சு எனக்காவது சொல்லித்தரலாம்ல?

அதுவும் பண்றேனேடா.....
(மைன்ட் வாய்ஸ்) உன் பாடம் எல்லாம் sounds Latin and Greek to me....

என்னப்பா சத்தமே காணோம்...

எம்எஸ்சி அப்ளைட்  சைகாலஜில நா பர்ஸ்ட் க்ளாஸ்ல பாஸ் பண்ணிக்காட்டல.....

(உள்ளிருந்து குரல்): இப்பவே வேற பெயர் ரெடி பண்ணி வச்சுக்கோங்க...பின்னால மாத்திக்கனும்ல..

(நற...நற....)   அதையும் பாப்போம்...

அப்பா, அதைவிடுங்க...என்ன படிக்கறீங்க?

நானா? ஹிப்போகேம்பஸ், காக்னிடிவ் பர்ஸ்பக்டிவ்....

சரி, சரி,.....ஒழுங்காப் படிங்க....நாளைக்கு சாயங்காலம் நான் வந்து நீங்க படிச்ச போர்ஷன்லேர்ந்து கேள்வி கேட்பேன்..

ஙே....

-----
( காலை ஐந்து மணிக்கு எழுந்து உளவியல் படிக்கும் சோகம் ஒரு தனிக் கதை)

பேச்சும் மூச்சும்

புத்தகத் திருவிழா என்று சின்னதாக ஞாபகிக்கிறேன். பேச்சரங்கத்தில் சற்று நேரம் கழிக்க நேர்ந்தது. மிக வேதனையோடு வெளியேவந்தேன். வருத்தம் தாளாமல். காரணம், பேச்சுக்கலையின் நிலைமை.

தமிழ் மொழி பல தளங்களில் சிங்காதனத்தில் அமர்ந்திருக்கிறது. அய்யமில்லை. ஆனால் தமிழ்ப் பேச்சுக்கலையின் நிலை தற்போது மெச்சிக்கொள்ளும் அளவிற்கு இல்லை என்பதே நிதர்சனம். முப்பது ஆண்டுகளுக்குள் இத்தனை வீழ்ச்சியா?

என் முதல் முதல் வருத்தம் பேச்சாளர்களின் தமிழ் உச்சரிப்புதான்.  தமிழ் என்ற வார்த்தையை 'தமில்' என்று உச்சரிப்பவர்களுக்கு மரண தண்டனை கூடத் தகும்.  ல, ள மற்றும் ழ ஆகிய எழுத்துக்களை சரியாக உச்சரிக்காத தமிழர்களை (தமிழ்)நாடு கடத்துவது நன்று.

சொந்தக் கருத்துக்களையே காணோம். எங்கு பார்த்தாலும் கூகுள் ஆண்டவர் புண்ணியத்தில் வெட்டுதலும் ஒட்டுதலும் ஏராளமாகவும் தாராளமாகவும் அரங்கேறி இரவல் வாங்கியதால் இன்னும் விடியாமல் சந்தி சிரிக்கிறது. சொந்த சிந்தனைக்கா இங்கே பஞ்சம்?

தமிழ் இலக்கிய உலகின் ஏற்றமும் எழுச்சியும் எழுத்தோடும் இசையோடும் கலையோடும் நின்று விட்ட நிலைமை தமிழ் கூறும் நல்லுலகிற்கு மிகப் பெரிய இழப்பு.

சரி, இலக்கியவாதிகள் தான் இப்படி, அரசியல் பேச்சாளர்கள் எப்படி என்றால் அது அதைவிட மலிவு.  இரட்டை அர்த்தப் பேச்சும், ஆபாசமும், தனிமனிதத் தாக்குதல்களும் மட்டுமே பெரும்பாலும் அங்கே விஞ்சி நிற்கிறது. நயமான மற்றும் செறிவான பேச்சுக்கு தற்போதைய அரசியலில் இடமில்லை.

தீந்தமிழ்ப் பேச்சால் தமிழை சீராட்டி வளர்த்த சொல்லின் செல்வர்கள் இறந்த காலம் தமிழ் மேடைப்பேச்சின் நிகழ்காலமாக உறைந்து விட்டதோ?

அண்ணாவும், மா. பொ. சியும்,
திரு. வி. க.வும், சத்தியமூர்த்தியும், கருணாநிதியும் , கி.வா.ஜவும்,
ரா. பி. சேதுப்பிள்ளையும், குமரி அனந்தனும், அவ்வை நடராசனும், அறிவொளியும், வலம்புரி ஜானும் பேணி வளர்த்த பேச்சுத்திறன் எங்கே?

பக்தி சொற்பொழிவுகளும் அதே போலத்தான் இருக்கின்றன. கிரிதாரி பிரசாத், புலவர் கீரன், வாரியார் சுவாமிகள் ஆகியோர்களுக்கு வழித்தோன்றலே இல்லாமல் போனது தமிழுலகின் வேதனையேயன்றி வேறென்ன?

பட்டிமன்றங்கள் தான் தமிழில் மிகப்பெரிய வீழ்ச்சியைச் சந்தித்திருக்கின்றன என்பேன். ஒரே கூக்குரலே மிஞ்சி நிற்கிறது. பட்டி தொட்டி எங்கிலும் தமிழ் மணக்கச் செய்ய பட்டிமன்றங்களைப் பாங்காய்ப் பயன்படுத்திய குன்றக்குடி அடிகளார் இன்று இருந்தால் பட்டிமன்றங்களின் இன்றையை நிலையைப் பார்த்தால் மனம் வெம்பியிருப்பார்.

பாரதி பாஸ்கர், சாலமன் பாப்பையா போன்ற தமிழ் பேச்சுக்கலையை அறிந்தவர்களும் இப்படி துணுக்குத் தோரணங்களாக மட்டும் சொல்லாடுவது காலத்தின் கோலம் போலும்.

இலக்கிய நயம் சொட்டச் சொட்ட இனி அரங்கத்தில் தமிழ் கேட்கவே முடியாதா என்று அயற்சி ஏற்படுகிறது. உணர்ச்சி வசப்படுதலே தமிழனின் பலவீனம் என்று தோன்றுகிறது.

சில ஆறுதல்களும் இருக்கத்தான் செய்கிறது.

ஆன்மிகப் பேச்சில் வேளுக்குடி கிருஷ்ணன் சுவாமிகளின் தெள்ளு தமிழ்ப்பேச்சு, சுய முன்னேற்றம் பற்றிய ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணனின் கருத்துள்ள பேச்சு, இலக்கியத்தில் பழ. கருப்பையா, நெல்லை கண்ணன், கே. சுமதி, மற்றும் நீதியரசர் வி. இராமசுப்பிரமணியத்தின் அருமையான பேச்சு, அரசியலில் வைகோவின் ஆழமான பேச்சு, திரையுலகில் பார்த்திபனின் பேச்சு, வைரமுத்துவின் கவிநயம் மிக்க பேச்சு, சுகிசிவத்தின் ஆழமான இலக்கிய மற்றும் ஆன்மிகப் பேச்சு என சில வித்தகர்களின் நயமான பேச்சு மட்டுமே ஆறுதல்.

இப்படிச் சிலரோடு தமிழ்ப்பேச்சுக்கலை முடிந்துவிடுமோ என்ற அய்யம் இன்னும் கவலை சேர்க்கிறது.

நிகழ்கால மாணவர்களே, தீவிர சிகிச்சைப் பிரிவில் மரணப்படுக்கையில் இருக்கும் தமிழ்ப் பேச்சுக்கலைக்கு புத்துயிரும் பிராண வாயுவும் தரவேண்டிய கட்டாயத்தை உணர்ந்து தமிழை முறையே பயின்று தெளிவாகப் பேசி பேச்சுக்கலையை இனிதே வளர்ப்பீராக!

மனிதன் மறந்தான்

நான் அந்த இடத்தைக்

கடந்து சென்ற போது

ஈன ஸ்வரத்தில் 

ஒரு முனகல் 

ஒலித்தது.


வெட்டப்பட்டு

வீழ்ந்து கிடந்தது

ஓர் உயிர்,

பல துண்டுகளாக.


பதறிப் போய்

செவி வைத்துக் 

கேட்டேன்.


'ரொம்ப வலிப்பதால்

அரற்றுகிறாயா?'


'இல்லை, மனிதா, இல்லை,

புவிக்கு வேறு எங்கும்

கிளைகள் இல்லை தெரியுமா'

என்று சொல்லிவிட்டு

அது 

மரித்தது. 

ரயில் சிநேகம்

பயணம் இனிது.
ரயில் பயணம்
அதனினும் இனிது.
அது தரும் அனுபவம்
அமிழ்தினும் இனிது.

வளைந்து கொடுக்கா
இருப்புப்பாதையின்
உறுதி இனிது.

வகையான மக்களின்
பகையிலாப் பண்புகள்
இனிது.

நல்லோர் நம்மில்
பல்லோர் உண்டெனப்
பகரும் சேதி இனிது.

முகமறியா 'முகமது'வும்
ஊரறியா 'அகமது'வும்
காட்டும் அன்பும் பரிவும்
சிவமேயென
முகமது நம் அகமது மலர
உணர்த்தும் தருணங்கள்
எல்லாம் இனிது.

பாதையிரண்டும்
இணையாமற் போயினும்
சேர்ந்தோர் யாரையும்
சேரிடம் போய்ச் சேர்க்கும்
பாங்கும் இனிது.

மதமும் மனமும்
இசையாது போயினும்
அன்பென்ற பயணம்
கேளிர் யாரையும்
நல்லூரில் சேர்க்கும்
என்று அழுந்தச்
சொல்லும் பயணம்
என்றும்  இனிதே.

Thursday, 25 August 2016

நடை

மரித்தாள் மனைவி
காசநோயில் வீழ்ந்து.
உடன் மரித்தன
உறவும் நட்பும்.

கையில் காசில்லை.
ஆயின்
தோளில் வலுவுண்டு.

பஞ்சாய்க் கிடந்தவளை
மூட்டையாய்ச் சுமந்தேன்
மகளே வழித்துணையாய்.

வழியெங்கும் கைகட்டி
வேடிக்கை பார்த்தன
மனிதத்தோல் போர்த்திய
மிருகங்கள்.
அவற்றின் பிடறியின்
பின்னால்
மறைந்து கொண்டது
மானுடம்.

இருவரால் பிறந்த அவள்
என் ஒருவனால்
போய்ச் சேர்ந்தாள்.

நான் மரிக்கையில்
இப்படி என்னைச் சுமக்க
இயலுமா எனும் கேள்வியோடு
மகளும் நடக்க
துழாவித் தேடினேன்.

எங்கேயும் காணவில்லை
கடவுள் நீட்டிய
அபயக்கரத்தின் நிழல்.

Monday, 22 August 2016

நிலமென்னும்...

தனுஷ்கோடி.

கடைகள், பயணிகள் என மக்கள் கூட்டம் இருந்தாலும் அங்கு நிலவிய மயான அமைதி (eerie silence)  இயற்கை மனிதனுக்கு அவ்வப்போது விடும் அறைகூவலாகத்தான் தெரிகிறது.

ரயில் விபத்தும், புயலின் சீற்றமும் அது குறித்த பத்திரிக்கைச் செய்திகளும் மனத்திரையில்  நிழலாடின.

மரண ஓலம் காற்றில் கலந்து தேய்ந்து இன்னமும் மிச்சமிருப்பதாகவே தோன்றியது.

இடிந்த கட்டிடங்களும் புகையிரதப் பாதையின் எச்சமும் மனிதனுக்குத் தெரியாத மொழியில் இயற்கையின் கோபத்தை இன்றளவும் மொழிபெயர்க்கின்றன.

இலங்கையில் ஏற்பட்ட ஆழிப் பேரலையில் ஒரு தொடர்வண்டி முழுவதுமாகக் கடலுள் அடித்துச் செல்லப்பட்ட அவலத்தை ஒரு நினைவுச்சின்னம் மூலம் காட்சிப் படுத்தியிருப்பதைப் போல நாமும் தனுஷ்கோடியில் செய்திருந்தால் வருங்காலத் தலைமுறையினருக்கு ஒரு பாடமாக இருந்திருக்கும்.

இயற்கையை எவ்வளவுதான்  வாஞ்சையோடு அன்னை என்று நாம் அழைத்தாலும் நாமிழைக்கும் தீங்குகளுக்கு அவள் பழி தீர்க்கையில் 
கொடுங்கோல் சிற்றன்னையாகவே
ஆகிவிடுகிறாள்.

நிலமென்னும் நல்லாள்?

விழியில் விழுந்து மனதில் பதிந்து...

சென்று வர இனிமை.
தங்கி விடல் கொடுமை.
தனிமை.

இருக்கட்டும்.

சில சமயங்களில் தனிமை நமக்குத் தேவைப்படத்தான் செய்கிறது. தளர்வான தருணங்களில் மனது கிடந்து தவிக்கும் போது அந்தக் காலத்து அரசர்களைப் போல "ஏகாந்தம்" என்ற ஒரு குரலுக்கு எல்லோரும் விலகிவிட்டால் நன்றாகத்தான் இருக்கும். சாத்தியமா என்ன?

பதுங்கி வாழும் போராளிகளும் தலைவர்களும் சீக்கிரமாகத் தளர்ந்து போவதும் அதனால்தான். "Manic Depression" என்றவகை மனச்சோர்வு தொடர் தனிமையால் ஏற்படும் என்கிறது மருத்துவ அறிவியல்.

என்ன செய்வது! தனிமை தரும் தற்காலிக உவகை கூட இனியது தான்.

நான் பயணங்களை அதிகம் விரும்புவன். தானே நெடுந்தொலைவு வாகனத்தை ஓட்டுவதில் எனக்கு அலாதிப் ப்ரியம் உண்டு.

காரணம்?

பயணமெங்கும் இயற்கையின் கொடையை உணரலாம். இசையின் பரிமாணங்களை ரசிக்கலாம். சாமரம் வீசும் மரங்களின் புத்துயிர்க்காற்றை உள்ளிழுத்தல் ஒரு சுகம். பறவைகளின் கான மழையில் நனையலாம்.

ஆனால் நாம் தான் இயற்கையை எதிர்த்து அனுதினமும்  கதவடைப்பு நடத்துபவர்களாயிற்றே. மழைக்கு குடையென்னும் கருப்புக்கொடி காட்டுபவர்களாயிற்றே. குளிரூட்டியின் செயற்கைக் குளிர்காற்றுக்காக தென்றலுக்கு தடைபோடுபவர்கள் ஆயிற்றே.

விழி விரித்து என்றாவது அழகின் சிரிப்பை நமது மனத்திரையில்  பதிந்திருக்கிறோமா? இல்லையே. கண்களில் ஏந்த வேண்டிய காட்சிகளின் எழிலை கேமிரா என்ற செயற்கைத் திரையில் பதிப்பதே நம்மில் பலருக்கு கடமையாகி விட்டது.

வானவில்லை நேரில் பார்க்கையில் கிடைக்கும் பரவசம் புகைப்படத்தில் பாதி கூட கிடைப்பதில்லை. ஆனால் நமக்கோ தான் பார்த்து ரசித்த அழகோவியத்தை எல்லோரும் நேரில் சென்று பார்க்க முடியாது என்பதால் புகைப்படம் மூலம் பகிர்தல் சரியே என்பர் பலர். மறுப்பில்லை.  ஞாபகங்களுக்கு புகைப்படம் அவசியமே.

ஆனால் விழித்திரைக்கும் நமது மன அரங்குகளில் இட ஒதுக்கீடு தேவை என்பது என் கட்சி.

ஒரு வழக்கு நிமித்தம் நான் முன்பு
திருநெல்வேலி சென்றிருந்த போது
இந்த சிந்தனைகளே துணையாய் ஒரு சாலை வழிப்பயணம்.  தனியனாய்.
போகவும் வரவும் நிறைய அவகாசம் எடுத்துக்கொண்டேன். இயற்கை உபாசனைக்காக.

இசை தவிர்த்தேன். தொ(ல்)லை பேசியின் வாயமர்த்தினேன். விழியும் செவியும் மகிழ அலுக்காமல் விருந்தைப் பக்குவமாக பரிமாறிய பாங்கு இயற்கையின் மாட்சி.

கண்களால் படம் எடுத்து மனத்திரையில் இருத்தி மகிழ்ந்து பின் நினைவுக்காக சில புகைப்படங்களைப் பதிந்தேன். யான் பெற்ற இன்பம் நான் பெற்றவள் துய்க்க.

அந்நேரத்தில் வானம் காட்டிய மாயாஜாலக் காட்சியைப் பார்க்கும் போது எனக்கு உடையவர் ராமானுஜரின்  கோட்பாடு தான் நினைவுக்கு வந்தது.

பரமாத்மாவும் ஜீவாத்மாவும் ஐக்கியமாவதே முக்தி என்பது அதன் சாரம். இப்போது  இந்தப்
புகைப்படங்களைப் பாருங்கள்.

இயற்கை படைத்தவையும் மனிதன் படைத்தவையும்  ஒருசேர சந்திக்கும்
அந்தி வானம் ஒருவேளை எதையோ நமக்கு மறைமுகமாக உணர்த்துகிறதோ?

வாசி....

சொந்தமாக வாங்கியோ, பரிசாக அடைந்தோ, இரவலாகப் பெற்றோ அல்லது நூலகம் மூலமாக வாங்கியோ-

பிடித்தோ பிடிக்காமலோ-
ஒரே மூச்சிலோ அல்லது வசதியான தவணைகளிலோ, அச்சு வடிவான
புத்தகமாகவோ அல்லது மின்நூலாகவோ,
நாம் எத்தனையோ புத்தகங்களைப் வாசிக்கிறோம்.

எல்லா புத்தகங்களும் நம்மை கவர்வதில்லை. ஈர்ப்பதில்லை.

சில எழுத்தாளர்கள் எதை எழுதினாலும் படிக்கிறோம். மற்றவர்களின் படைப்புக்களையோ யாரும் பரிந்துரைத்தால் மட்டுமே படிக்கிறோம். மற்றும் சில நூல்களை பயணம், காத்திருத்தல் போன்ற தருணங்களில் மட்டுமே புரட்டுகிறோம்.

சில புத்தகங்கள் நம்மை அப்படியே புரட்டிப்போட்டுவிடுகின்றன. சில நூல்கள் மயிலிறகாய் நம் மனதை வருடுகின்றன. சில புத்தகங்கள் நம்மைச் செம்மைப் படுத்துகின்றன. சில நூல்கள் நமக்கு வழிகாட்டியாகின்றன.

நான் புத்தகங்கள் நிறையப் படித்தவன்தான். குறு நூலகம் ஒன்று எங்கள் இல்லத்தில் நிரந்தர கொலு வீற்றிருக்கிறது. ஆனால் தற்போது எனக்குள்ள வாசிப்பு ஆர்வம் பார்க்கும் புத்தகத்தின் கருப்பொருளைப் பொருத்தே அமைகிறது.

சமீபத்தில் நான் படித்த இரண்டு புத்தகங்கள் என்னை மிகவும் கவர்ந்தவை என்பேன்.

1. The Zahir - Paulo Coelho எழுதியது.

அது ஒரு புதினம். அதன் வாசிப்பு அனுபவம் அலாதியானது. அதை மற்றொரு தருணத்தில் பகிர்கிறேன்.

2.    Wise and Other Wise.  Sudha Murthy எழுதியது.

மூத்த வழக்குரைஞர் திரு.  A. ஆறுமுகம் அவர்கள் என் மகளுக்காகப் பரிந்துரைத்துக் கொடுத்த புத்தகம். என்னையும் படிக்கச் சொன்னார். செய்தேன்.

நெகிழ்ந்து போய் நிற்கிறேன். அது ஒரு நெடுங்கதையோ, கவிதையோ அல்லது காவியமோ அல்ல. நாளிதழ்களில் அவர் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு.

புத்தகத்தின் முதற் சிறப்பு அதன் எளிமையான நடைதான். தான் சந்தித்த மனிதர்களிடமிருந்தும் தனக்கேற்பட்ட அனுபவங்களிலிருந்தும் தன்னைப் பாதித்த நிகழ்வுகளிலிருந்தும் பல விஷயங்களை அவர் எளிமையாகவம் அதே சமயம் தெளிவாகவும் பதிவு செய்துள்ள பாங்கு சிறப்பானது.

இந்தியாவில் கன்னித் தாய்களின் அவல நிலை குறித்த கருத்தாகட்டும், தன்னம்பிக்கையின் அருமை குறித்த கட்டுரையாகட்டும், ஸ்காண்டிநேவிய நாடுகளில் பெண்களுக்குரிய சம உரிமை பற்றிய பார்வையாகட்டும், சமூகத்தில் ஆசிரியர்கள் முன்மாதிரியாகத் திகழ வேண்டியதைக் குறித்த கருத்தாகட்டும், விலைமாதுக்களின் மறுவாழ்வுக்கான வழியாகட்டும்,  நோபல் பரிசு பற்றிய எழுத்தாகட்டும், மிண்ணணுக்கருவிகளில் இளைய சமுதாயம் முடங்கியுள்ளதைப் பற்றிய கருத்தாகட்டும், மழையில் ஆடிக்களித்த பிச்சைக்காரனிடம் வாழ்க்கைப்பாடம் கற்ற ஒரு பெண்ணின் கதையாகட்டும், ஜான்சி ராணி பற்றி ஏதுமறியா இளைய தலைமுறையைப் பற்றிய கட்டுரையாகட்டும், தொழு நோயாளிகளைப் பற்றிய கரிசனமாகட்டும், அடுத்த தலைமுறையின் தன்னம்பிக்கை பற்றிய பெருமிதமாகட்டும், சுதா மூர்த்தி அவர்களின் பார்வையும் தெளிவும் புதிது.

வயது வித்தியாசம் பாராமல் படிக்கவேண்டிய மற்றும் பரிசளிக்கத்தக்க புத்தகம்.  வாசிக்க வேண்டியது அவசியம் என்பேன்.

A deserving salute to life. Her life too.

Tuesday, 2 August 2016

வைகறை மேகங்கள்...

கலைத்துப் போட்ட
சீட்டுக்கட்டாய்
மேகம்.

துடைத்து வைத்த
வெள்ளித் தட்டாய்
வானம்.

சிறகு விரித்த
சேய்ப் பறவையாய்
மனம்.

இந்த வித்தையை
முகிலினம்
யாரிடம் கற்றது?

இந்த ஜாலத்தை
கதிரவன்
எங்கே பெற்றான்?

இனிது இனிது
வைகறை
வான் இனிது.

Monday, 1 August 2016

கோதை ஆண்டாள்

நாங்களும் என் சகோதரர் வழக்குரைஞர் திரு. சுந்தர் சீனிவாசன் குடும்பமும் திருவில்லிப்பத்தூருக்குப் பயணித்தோம்.

பயண வழியில் நெடுகிலும் இரு குடும்பத்தாரும் பல விடயங்களைப் பற்றிப் பேசிவந்தாலும் எங்கள் மனது முழுவதும் நிறைந்திருந்தது ஆண்டாள் மட்டுமே.

'கோதை ஆண்டாள் தமிழை ஆண்டாள்' என்றான் கண்ணதாசன்.  கோதையின் சொற்கள் 'அமுதனைய சொற்கள்' என்றான் பாரதி. ஆண்டாளின் தமிழ் எளிய தமிழ். அழகுத்தமிழ்.

திருப்பாவை  30 மற்றும் நாச்சியார் திருமொழி 143 என ஆண்டாள் இயற்றியது மொத்தம்173 பாசுரங்கள் மட்டுமே. ஆனால் அவை ஒவ்வொன்றும் தெள்ளு தமிழ் தேனமுது.

பெரியாழ்வாரான பட்டர் பிரானின் சகோதரரின் நேரடி வாரிசான திரு. அனந்தராம கிருஷ்ணன் எனது உறவினர். அவர் எங்களுடன் திருக்கோவிலுக்கு வந்து உணர்வு மேலிட ஆண்டாளின்  வாழ்வையும், கோவிலின் தல வரலாற்றையும், அதன் விண்ணகரத்திலுள்ள சிற்பங்களின் மேன்மையையும் சொல்லச் சொல்ல எங்களின்  கற்பனைத் தேர் எங்களை ஆண்டாள் வாழ்ந்த எட்டாம் நூற்றாண்டுக்கே கொண்டு சென்றது.

'இங்கே தானே அவள் தெய்வக் குழந்தையாகப் புவியில் கிடந்தாள், இந்தக் கிணற்றில் தானே முகம் பார்த்தாள், இந்த நந்தவனத்தில் தானே புட்பம் பறித்து ரங்கமன்னாருக்கு பாமாலையும் பூமாலையும் சூட்டி மகிழ்ந்தாள்' என்று நானும் சுந்தர் சீனிவாசனும் பேசிப் பேசி உன்மத்தம் கொண்டோம்.

திருவரங்கத்து அகண்ட வீதிகளில் 'ரங்கா, ரங்கா' என்று அரற்றியபடி அந்த 'சூடிக்கொடுத்த சுடர்க்கொடி' அலைந்து திரிந்த நிகழ்வுகளில் எங்களின் மனமும் மகிழ்ந்து திளைத்தது.

எத்தகைய வாழ்வு! எத்தகைய வாக்கு! அப்பூமி மனிதன் தெய்வமாகிய திருத்தலம்.

கோவிலின் ஒவ்வொரு தூணும் சித்திரமும் அவளது பாசுரங்களையும் அவளது கீர்த்தியைப் பறை சாற்றும் பாடல்களையும் எடுத்துரைக்க, திகட்டாத தமிழ் நம் சிந்தையைப் பரவசப்படுத்தும் அந்த அனுபவமே தனி.

மலையாள முறைப்படி அமைக்கப்பட்டுள்ள 'கோபால விலாசத்தில்' உள்ள தேக்கு மர வேலைப்பாடுகளும் பிரதான வாயிலின் விதானத்தில் தீட்டப்பட்டுள்ள ராமாயண மகாபாரத கதைகள் பற்றிய ஓவியங்களும் பிரமிக்க வைத்தன.

மதுரை அழகர்மலையில் அகவை 85ல் பெரியாழ்வார் @ விட்டுச்சித்தர் பரம பதம் அடைந்தார். அவ்விடம் இன்றும் அழகர் கோவிலின் வெளிக் கோட்டையில் பெரியாழ்வார் நந்தவனமெனத் திகழ்கிறது.

'ஒரு மகள் தன்னை உடையேன்
       உலகம் நிறைந்த புகழால்
திருமகள் போல வளர்த்தேன்
     செங்கண்மால் தான் கொண்டு போனான்
பெருமகளாய்க் குடி வாழ்ந்து
     பெரும்பிள்ளை பெற்ற யசோதை
மருமகளைக் கண்டு உகந்து
       மணாட்டுப் புறஞ் செய்யும் கொலோ! '
என்ற பெரியாழ்வார் திருமொழியின் 300 வது பாசுரம் தெய்வப்பிறவியைப் பெற்றுவிட்ட ஒரு தந்தையின் பெருமையை உலகிற்கு  ஓங்கிச்சொல்கிறது.

பொங்கிப் பெருகிய நிறைவோடு விடைபெற்றோம்.

ஒன்று சொல்லியாக வேண்டும்....

ஊர் திரும்பும் போது என் மகளுக்கு ஆண்டாளின் பெயரைச் சூட்டாமல் போனதற்கு நான் வருந்தியது நிஜம்.