Tuesday, 26 April 2016

இன்னும் இருக்கிறது

விரைந்து

விரைந்து பின் சென்றன

வாழ்க்கையின்

மைல் கற்கள்.


நடந்து வந்த பாதைகளில்

கடந்து போயின காயங்கள்.


ஓடிக் களைத்த தருணங்களில்

குத்திக் கிழித்தன முட்கள்.


உறக்கம் தொலைத்த இரவுகளில் 

கண்ணை நனைத்தது ஈரம்.


சுமை தாளாது தவித்தபோது

வலி பரப்பின நரம்புகள்.


வரவான உறவுகள்

வீசிச் சென்றன சாமரங்கள்.


உறவான உள்ளங்கள்

தெளித்து வீசின அமிலங்கள்.


சில சேர்ந்து பல நீங்கின. 

சில பெருகி பல வகுத்தன.

என்னைச் சமமாக்கி 

நகைத்தது வாழ்க்கை.


இளைப்பாற அமர்கிறேன்.

நித்திரை தரும் 

மெளன வெளிச்சத்தில்

கண் கசக்கிப் பார்க்கும் நொடியில் 

என் பிடறியில் 

ஓங்கி அறைந்தது காலம்.


எழு மானிடா,

பயணத்தின் நடுவே தங்கும்

சத்திரங்கள் ஏதும்

பயணத்தின் முடிவல்ல.


ஒவ்வொரு இரவின் ஓய்வும் 

மறுநாள் துவங்கும் பயணத்தின்

ஆயத்தமே என்றுரைத்து

காலம் தன்

சாட்டையைச்

சொடுக்கிற்று 


காலமே,  காலனே,

கொஞ்சம் பொறுங்கள்....


சில்லென்ற ஒரு 

குளியலுக்குப் பிறகு 

நான் மீண்டும்

அணியவேண்டும் 

லாடங்களும், 

சில முகமூடிகளும்.


No comments:

Post a Comment