Tuesday, 17 January 2017

பாசுரம்-பரவசம்-1

மதங்களைப் பற்றி சிறு வயதில் என் மகளின் கேள்வி நேரம் அது.

எல்லாவற்றையும் அக்கறையாய் கேட்டுக் கொண்டிருந்தவள் திடீரென்று அதிர் வேட்டாய் ஒரு கேள்வியைக் கேட்டாள். நானும் என் மனைவியும் விக்கித்துப்போய் மெளனம் சாதித்தோம். ஏன் என்றால் அந்தக் கேள்விக்கு எங்களிடம் பதில் இல்லை.
இன்று வரையிலும் இல்லை.

' நீங்க சொல்றதக் கேட்டா  வானத்துல நிறையக் கடவுள் இருக்காங்கன்னு தோண்றது....அவங்கள்ளாம் ஒண்ணா மீட் பண்ணுவாங்களா? அப்படி மீட் பண்ணா யாரு உசத்தின்னு சண்டை போட்டுண்டு அவங்களும் அடிச்சுப்பாங்களா?'

இந்த அய்யம் அடியார்களுக்கு வந்த போது அவர்களின் எண்ண ஓட்டம் எப்படி இருந்திருக்கும்?

ஆழ்வார்களைக் கேட்போமா?

ஒரு குழந்தை.

அதை ஒவ்வொருவரும் ஒவ்வொரு பெயர் வைத்து, அழைத்துக் கொஞ்சி மகிழ்கிறோம்.

'அம்மு, புஜ்ஜு, பாப்பு, குட்டிம்மா, ஜோ.......'

அதுவும் அதைக்கேட்டு நம்மோடு சிரித்து மகிழ்கிறது.
கொஞ்சுகிறது.
விளையாடுகிறது.

நேரம் ஆனவுடன் குழந்தையின் அம்மா வந்து ஏதோ ஒரு பெயரைச் சொல்லி அழைத்து அக் குழந்தையை அழைத்துச் செல்கிறாள். இல்லையா?

நாம் நம்பும் கடவுள்களும் அந்தக் குழந்தையைப் போலத்தான்.

பொய்கையாழ்வாருக்கு இது போன்ற ஒரு சந்தேகம் எழுந்தது. அப்போது இருந்த வந்த மற்ற மதத்தினரின் கோட்பாடுகளுக்கும் வைணவ மதக் கோட்பாடுகளுக்கும் இடையே இருந்த காழ்ப்பு அவரைச் சிந்திக்க வைத்தது. அற்புதமான ஒரு பாசுரத்தை எழுத வைத்தது.

'தமருகந்தது எவ்வுருவம்
அவ்வுருவம்தானே தமருகந்தது எப்பேர் அப்பேர்- தமருகந்தது எவ்வண்ணம் சிந்தித்து இமையாதிருப்பரே அவ்வண்ணம் ஆழியனாம்'

அதன் விளக்கம் மிக எளிமையானது. மற்ற எல்லாவற்றையும் மிக எளிதாகக் கற்றுத் தேர்ந்த மனிதனுக்கு இது மட்டும் ஏனோ புரியவில்லை.

"எந்த ஓர் உருவத்தை நம் மனம் விரும்பு கிறதோ அதுவே அவனது உருவம். எந்தப் பெயரை நாம் விரும்புகிறோமோ அதுவே அவனது பெயர். நாம் அவனை எப்படிச் உருவகித்தாலும் சரி,  எப்பெயரிட்டு இடைவிடாமல் தியானித்து அழைத்தாலும் சரி, அவை எல்லாம் திருமால் தான் போ..." என்கிறார் ஆழ்வார்.

இந்த சிறு விஷயம் கூடப் புரியாமல் நான் நம்பும் கடவுள் தான் உண்மை என்றும், மற்ற மதங்களும் கடவுளரும் பொய்யென்றும் பழித்தும், ஏசியும், மனிதகுலத்தைக் கொன்று குவித்தும்...

அடக் கடவுளே...!!!

எப்படிப் பார்த்தாலும் இறைவன் ஒன்றுதான். சிவம், திருமால், ஜீசஸ், அல்லா, புத்தர், மகா வீரர்.... எல்லாம் ஒன்றே.

அன்பே அவன்.

நீ யாரைச் சொன்னாலும் அவனைத்தான் சொல்கிறீர்கள் என்பதன் அர்த்தத்தை இப்படியாக விளங்கிக் கொண்டால் இங்கே டிசம்பர் ஆறு, இரத்த ஆறு ஏதும் வராது.

No comments:

Post a Comment