Tuesday, 17 January 2017

பாசுரம்-பரவசம்-2

ஒரு பாசுரம்.

ஒரே ஒரு பாசுரம்.

முகத்தில் அறைந்தாற்
போல் ஒரு அரிதான விஷயத்தைச் அழகுறச் சொல்ல, நாம் உறைந்து நிற்கிறோம்.

அது நாலாயிரத் திவ்விய பிரபந்தத்தில் உள்ள திருமழிசை ஆழ்வாரின் ஒரு ஆழ்ந்த செறிவான பாசுரம்(64).

பல திருத்தலங்களில் பலவேறு கோலங்களில் மூலவராகவும் உற்சவ மூர்த்தியாகவும் கடந்து உள் நிற்கிறார் கடவுள்.

நின்ற கோலம், அமர்ந்த கோலம், சயனம் என்று விதவிதமான நிலைகளில் அவரது திருவுருவச்சிலைகளை நாம் வழிபடுகிறோம்.

ஆனால் விக்கிரகங்கள் இல்லாமல், திருக்கோவில்களுக்குச் செல்லாமல் அவனை வழிபட முடியாதா என்ற கேள்வி ஒரு தடவையாவது நமக்கு எழாமல் இல்லை அல்லவா?

அந்தப் பக்குவம் பற்றிய ஆழ்வாரின் இப்பாசுரம் ஒரு அழகிய ஆச்சரியம்.

"நின்றது எந்தை ஊரகத்து, இருந்தது எந்தை பாடகத்து,
அன்று வெஃகணைக் கிடந்தது,
என்இலாத முன்எலாம்,
அன்று நான் பிறந்திலேன்,
பிறந்தபின் மறந்திலேன்,
நின்றதும், இருந்ததும், கிடந்ததும் என் நெஞ்சுளே"

இப்பாசுரத்தில் வரும் ஊரகம், பாடகம் மற்றும் வெஃகா ஆகியவைகள் திருமால் நின்றும், அமர்ந்தும், படுத்தபடியும் காட்சியளிக்கும் கோவில்கள் அமைந்துள்ள ஊர்கள் ஆகும்.

ஆழ்வார் இறைவனை அந்தக் கோலங்களில் தரிசித்த காலங்களில் தான் பிறந்திருக்கவில்லை என்றும் அந்த ஞானம் பிறந்த பின்பு அவனை தான் மறக்கவேயில்லை என்றும் நெகிழ்கிறார்.

பிறப்பு என்று அவர் இப்பாசுரத்தில் சொல்லியிருப்பதை இம்மனிதப்பிறவி எடுத்ததைச் சொல்கிறார் என்று பொருள் கொள்ளாது தான் ஞானம் பெற்ற நிலையை மட்டுமே அவர் குறிப்பதை சற்று ஆழ்ந்து இப்பாசுரத்தைப் படித்தால் நாம் உணரமுடியும்.

தனக்கு ஞானம் பிறந்த நாள் தான் உண்மையில் தான் பிறந்த நாள் என்று ஒருவன் உணர்வது எத்தனை உயரிய பக்குவம்!

அவ்வாறு ஞானம் பெற்ற பிறகு ஒருவனுக்கு சிலைகள், கோவில்கள், சடங்குகள் எல்லாம் ஒரு பொருட்டே அல்ல; அவன் அவற்றையெல்லாம் கடந்து நிற்பவன் என்பதே இப்பாசுரத்தின் உட்பொருள்.

அந்நிலையில் நம் மனதிலேயே இறைவன் நிற்கின்றான், அமர்கின்றான், சயனம் கொள்கின்றான். வேறு ஏதும் தேவையில்லை என்கிறார் ஆழ்வார்.

திவ்வியப் பிரபந்தப் பாசுரங்கள் ஒவ்வொன்றும் எப்போது படித்தாலும் இனித்து ஊறும் தெய்வத் தமிழ் அமுது.

'நின்றதும், இருந்ததும், கிடந்ததும் என் நெஞ்சுளே'.

அடடா, என்ன ஒரு பொருள் செறிந்த அருள் வீச்சு!

No comments:

Post a Comment