Saturday, 28 April 2018

எதிர் வெயில்

வெறுமை சூழ
இருக்கிறது
வெளி உலகம்.

எது செய்தாலும்
உரைக்கவில்லை.

வார்த்தைகள் பிரிந்து
எழுத்துக்களாகி
தாள்களை விட்டு
வெளியேறுகின்றன.

இசைக் கலைஞன்
அபஸ்வரமாக
ஒலிக்கிறான்.

பேனாவிலிருந்து

உயிரில்லாத 

பொய்யெழுத்துகள்

வெளி வருகின்றன.

வறண்டு போன
நாக்கும் உதடுகளும்
ஒத்துழைக்க மறுக்கின்றன.

தோட்டத்தில் பூமரங்கள்
தலை கவிழ்ந்து
துஞ்சி விடுகின்றன.

காற்றும் ஈரம் இழந்து
கையறு நிலையில்
பொசுக்குகிறது.

வானம்
கரு முகில்களைத்
துறவு பூண்டு 
பாழாய் நிற்கிறது.

பாதைகள்
முறுக்கிக் கொண்டு
திமிறி நீள்கின்றன.

நிலவு
தேய்ந்து போன
முக்காடு ஒன்றைத்
தரித்துக்கொள்கிறது.

மாறாமல் இருப்பது
தகிக்கின்ற
சூரியன் மட்டுமே.

சாளரத்திற்கு வெளியே
வான்வெளியைப்
பார்க்கவே
பயந்து வருகிறது.

என்ன செய்து
என்
காலத்தை நான்
குளிரூற்றுவேன்?

Friday, 27 April 2018

ஓசைகளின் இசை

என்னைச் சுற்றிலும்
கூப்பாட்டுக்
கூச்சலின் கூத்து.

மனதின் கதவுகள் எல்லாம்
மெளனித்துக் கிடக்க
காதுகளைக் கடந்து
உள் துளைத்து குடிகொண்டது
ஓசை.

மனதின் இரைச்சலில்
வேறேதும் கேட்கவில்லை
செவிகளுக்குள்.

ஊரடங்கி உறங்கினாலும்
உள்ளுறைந்த சப்தம் மட்டும்
அடங்காமல் திமிறுகிறது.

பேசிய வார்த்தைகளைத்
திரும்பப் பெறத் தெரியாத
நாவு
உதடுகளுக்குள்
அடங்கிக் கிடக்கிறது.

கூக்குரலின் தாண்டவம்
தாங்காது
இடையிடையே
திடுக்கிட்டு
விழிக்கிறது என் தூக்கம்.

உடல் வாடி ஓய்வெடுக்கும்
பொழுதுகளிலும்
வீரியம் ஓயாமல்
துவண்டு மருள்கிறது
மனம்.

அணைக்கின்ற
குளிர் நீரும்
தகித்துச் சுட்டுவிட
எதைக் கொண்டு
அணைப்பேன்
இந்த மனமென்னும்
கொதிகலனை?

Wednesday, 11 April 2018

அது ஒரு ஏப்ரல் 12

1989ல்
இதே நாள்....

நான்
வழக்குரைஞனாகப்
பிறந்த நாள்.

விண்ணின்
கார்மேகத்தைப் போல,
கண்ணின்
கருவிழிகளைப் போல
அடைமழைக்கான
குடையைப் போல,
பள்ளியின்
கரும்பலகையைப் போல,
கருஞ்சீருடையும்
புனிதமானது
என்பதை அறிந்த நாள்.

சட்டமும் நீதியும்
பரம்பரைச் சொத்தாக
அடைந்த நாள்.

நாம் வாழும் வாழ்க்கை
நமக்கானது மட்டும்
அல்ல என்பதைத்
தெரிந்த நாள்.

உண்மைக்கும் நேர்மைக்கும்
உலகில் என்றும்
மதிப்புண்டு
என்பதைக் கற்ற நாள்.

விழிகள் மூடினும்
மனம் உறங்காது
என்பதைப் புரிந்த நாள்.

வாய்ச் சொல்லில் வீரரடி
என்ற பழிச் சொல்லைப்
பொய்யாக்கத் துணிந்த நாள்.

பாட்டனும் பூட்டனும்
விட்டுச் சென்ற நெறிகளை
கற்பினும் பெரிதென
உணர்ந்த நாள்.

போற்றுதலையும்
தூற்றுதலையும்
தலைக்குள் கொள்ளாது
என் கடன் பணி செய்து கிடப்பதே
என்றிருக்கப் பழகிய நாள்.

இன்னும் கொஞ்சம் தான்
என்றவாறு படியேறி மலையேறும்
பரவசப் பக்தனைப் போல
சோர்விலும் மகிழும் நாள்.

அந்த நாளை
மனதில் கொண்டு
உதட்டில் சிரிப்பையும்
உள்ளத்தில் அன்பையும்
நிறுத்திய படி
வாழ்த்துக என்றே
உற்றாரையும் நல்லோரையும்
நான் பணிந்து வணங்கும்
நாள்...

Tuesday, 10 April 2018

எது வரை?

இருட்டு என்பது
வெளிச்சமின்மையா?

பகல் என்பது
இருட்டின்மையா?

தண்ணீரின் அருமை
நடுக்கடல் அறியுமா?

கண்ணீரின் வலியை
தனிமை உணர்த்துமா?

அன்பின் பெருமை
அகதிகள் அறிவாரா?

மொழியின் வலிமை
ஊமைகள் அறிவாரா?

செத்த பிறகு நம்மை
நினைவுபடுத்துவது
பிறந்த நாளா?
இறந்த நாளா?

ஒரு செடியாவது
நட்டு வைத்தால்
என்ன பிடுங்கினாய்
என்று எவன் கேட்பது?

வந்த இடத்தில்
செத்துப் பிழைப்போமா?
வாழ்ந்து விட்டுச் சாவோமா?

வினாக்களின்
அணிவகுப்பில்
விடைகள்
ஒளிந்துள்ளனவோ?

விடை தேடி உய்வதே
வாழ்வாங்கு வாழ்வதா?

ஆம் எனில்,
நாம்
உயிர் வாழ்வது
வாழும் வரை.
சாகும் வரை அல்ல.

Thursday, 5 April 2018

ஏன்?

ஏன் பேச்சைக்
குறைத்து விட்டாய்
என்று தானே கேட்கிறாய்?

பேசும்போது
முன்பே தெரிந்திருந்ததை
மட்டும் அல்லவா
பேச முடியும்?

ஆனால் கேட்கும் போது
தெரியாத ஒன்றை
புதிதாகக் கேட்க முடியும்
இல்லையா?

Silent மற்றும் listen
இரண்டுக்கும்
எழுத்துக்கள் ஒன்றே.

ஆயின்
அமைதியான மனமே
அதிகம் கேட்கும்.

மெளனத்தில் கூட
இரைச்சல் அற்ற மனதால்
பொருள் தேட இயலும்

மற்ற உயிர்கள்
ஊமைகள்.

அதனால் தான்
பேசத் தெரிந்த
மனிதன் அளவுக்கு
அவை யாருக்கும்
துரோகம் இழைப்பது
இல்லையோ?

யோசிப்போமாயின்,
படைப்பின் சேதி
ஒன்று புரியலாம்

இரண்டு கண்கள்.
நிறையப் படிப்பதற்காக.

இரண்டு காதுகள்.
நிறையக் கேட்பதற்காக.

ஆனால்
ஒரே ஒரு நாக்கு.

Tuesday, 3 April 2018

உயிரின் உடல்

கவிதையெல்லாம்
எழுதுகிறாயாமே,
அப்படியா?
என்றாள்.

வார்த்தைகளை
மடித்துப் போட்டு
கொடியில்
துணிகளைப் போல்
தொங்க விடுகிறேன்.
அதுவா கவிதை? என்றேன்.

எழுதுவதெல்லாம்
மற்றவர்களைப் பற்றி
மட்டும் தானா?
புருவம் உயர்த்திக் கேட்டாள்.

உன்னிடம் இருக்கும்
என்னை விடுவித்து
நீ என்னிடம்
அனுப்பினால் தானே
நீயாகியிருந்த
நான் நானாகி
உன்னைப் பற்றி
எழுதமுடியும்?
என்றேன்.

இதுவே ஒரு
கவிதையன்றோ!
என்றாள்.

நீ தேநீர் போடுவது
சமையல் என்றால்
நான் கிறுக்குவதும்
கவிதையே என்றேன்.

நீ இப்போதும்
எழுதுகிறாயா?
மெளனம் கலைத்துக்
கேட்டேன்.

நாம் கடைசியாகச்
சந்தித்த நிமிடத்தில்
உறைந்து போனேன்,
அப்போதே இறந்தும்
போனேன்.
எனக்கு நானே
எரியூட்ட வழியின்றி
இன்றும் உடலோடு
வாழ்கிறேன்.
உயிர் எப்படி எழுதும்?
என்றாள்.

போதும் கவிதை
என்று
சொல்லிவிட்டேன்.

Monday, 2 April 2018

யாருடைய?

எங்கிருந்தோ
மிதந்து வந்தது
யாரோ இசைத்த
குழல் இசை.

இதயத்தை நனைத்து
உயிரை உருக்கி
மனதைக் கரைத்துச்
சென்றது
வேங்குழல் நாதம்.

யாருக்குச் சொந்தம்
அந்த இன்னிசை?
என்று கேட்டது குயில்.

என்னிடமிருந்து
பிறந்ததால்
எனக்கே சொந்தம்
என்றது மூங்கில்.

வெட்டி எடுத்து,
துளைகளிட்டுக்
கொடுக்காமல்
எப்படி இசைக்கும்?
என்றான் செய்தவன்.

செய்தால் மட்டும் போதுமா?
புல்லாங்குழலால்
தன்னைத் தானே
வாசிக்க முடியுமா?
என்றான்
இசைக் கலைஞன்.

எல்லாவற்றையும் கேட்டபடி
இசையைச் சுமந்து,
ஜீவனை நனைத்து
இதமாய்
வீசிக் கொண்டிருந்தது
காற்று.