Friday, 31 August 2018

பாசுரம்-பரவசம் - 13

கடவுளை நம்புபவரும் நம்பாதவரும் கடவுளைப் பற்றி விவாதித்தால் உத்தரவாதமாக இதைக் கேட்கலாம்;-

"நீங்கள் கடவுளைப் பார்த்ததுண்டா?"

"நீ காற்றைப் பார்த்ததுண்டா?"

" அது விஞ்ஞானம்"

" இது மெய்ஞானம்"

"உங்களால் கடவுளை உணர முடியுமா?"

"நீ மின்சாரத்தை எப்படி உணருகிறாயோ, அதே போலத் தான் நான் கடவுளை உணர்கிறேன்".

காலங்காலமாகத் தொடர்ந்து வரும் சர்ச்சை இது.

கடவுள் இல்லை என்று நான் சொல்லவில்லை, ஆனால், கடவுள் இருந்தால் நன்றாக இருக்குமே என்று தான் சொல்கினேன்! என்று ஒரு மாதிரி 'மய்யமாகச்' சொல்லிவைப்பது சமீபத்திய நியோ-நாத்திகம்.

இந்தக் கேள்விகளை ஆழ்வார்கள் எப்படி எதிர்கொண்டனர் என்பது ஒரு சுவாரசியமான தேடல்.

நிறையப் பாசுரங்களில் இத்தேடலுக்கு பதில் தென்படுகிறது.

முதலாழ்வரில் ஒருவரான பேயாழ்வாரைக் கேட்போம்.

"இனி, அவன் மாயன்
என உரைப்ப ரேலும்
இனி, அவன் காண்பறிய னேலும்-
இனியவன்
கள்ளத்தால் மண்கொண்டு
விண்கடந்த பைங்கழலான் உள்ளத்தின் உள்ளே உளன்!"

(83 - மூன்றாம் திருவந்தாதி)

திருமாலனைப் பற்றி யார் வேண்டுமானாலும் எதை
வேண்டுமானாலும்  எப்படி வேண்டுமானாலும் சொல்லட்டும்;
காண முடியாதவன், காணக் கிடைக்காதவன் என்றும், மாயன் என்றும் கூடச் சொல்லிக் கொள்ளட்டும். அவன் என் உள்ளத்தின் உள்ளே உறைந்திருக்கிறான்.
அது போதும் எனக்கு'
என்கிறார் ஆழ்வார்!

மிக எளிமையான ஆனால் ஆழமான கருத்து இது.

உயிர் என்பது என்ன? மூச்சுக் காற்று தானே! சுவாசத்தைப் பார்க்க முடியாது தான்.  அதற்காக அது இல்லை என்றாகிவிடுமா? அதை உணர முடியுமல்லவா! மின்சாரத்தைப் பார்க்க முடியாது. ஆனால் தொட்டால் அந்த மகத்தான சக்தியை உணர முடிகிறதே! பரந்த இவ்வுலகில் நம்மால் பார்க்க முடியாத பொருட்கள், உயிர்கள் எத்தனையோ உள்ளன. அவற்றை நம்மால் கேட்கவோ, உணரவோ, பார்க்கவோ, துய்க்கவோ  முடியாது  என்பதாலேயே அவற்றை இல்லவே இல்லை என்று சொல்ல முடியுமா?
காற்றும் மின்சாரமும் பார்க்க முடியாதவை. வடிவம் அற்றவை. ஆயினும் அவற்றின் பலன்களின் வாயிலாக உணரத்தக்கவை.
இறைவனும் அப்படியே. 'கடந்து உள் உறைபவனே கடவுள்' என்பதே ஆழ்வாரின் பதில்.

இறைவன் நிற்பதும், நடப்பதும், கிடப்பதும் நம் நெஞ்சுளே என்கிறார்கள் நம் ஆழ்வார்கள்.

தெய்வம் என்றால் அது தெய்வம்; சிலை என்றால் வெறும் சிலைதான்
என்றார் கண்ணதாசன்!

உளன் எனில் உண்டு அவன் உருவுகள்.

இலன் எனில் உண்டு அவன் அருவுகள்.

Thursday, 30 August 2018

பாசுரம் - பரவசம் - 12

நாமம் என்றால் ஒருவரின் பெயர்.
பெயர்சூட்டு விழாவை நாமகரணம் என்பர்.

அண்ணா நாமம் வாழ்க என்று எம்ஜியார் சொன்னது அறிஞர் அண்ணா அவர்களின் பெயரை.

ஆங்கிலர் மனிதனுக்கு வைக்கும் பெயர்கள் அஃறிணையாக இருக்கும்.  உ-ம் Blackstone.
தமிழில் பெயர்த்தால் அது மண்ணாங்கட்டி.

தமிழிலும் வித்தியாசமான நாமகரணங்கள் உண்டு.

ஹைகோர்ட் மகாராஜா, உள்ளேன் ஐயா, கும்புடறேன் சாமி என்ற பெயர்களையும் நாம் தற்போது கேள்விப்படுகிறோம்.

நம் தேசத்தில் பெரும்பாலும் கடவுளின் பெயரையே குழந்தைகட்குச் சூட்டுகிறாம்.

ஏன் தெய்வத்தின் பெயர்?  என்ற கேள்விக்கு பெரியாழ்வார் திருமொழியில் ஒரு பதில் உள்ளது.

'மண்ணில் பிறந்து மண்ணாகும்,
மானிடப் போரிட்டு அங்கு
எண்ணமொன் றின்றியிருக்கும்
ஏழை மனிதர்காள்!
கண்ணுக் கினிய கருமுகில்
வண்ணன் நாமமே!
நண்ணுமின் நாரணன் தம் அன்னை நரகம்புகாள்!

(4-6-7 பெரியாழ்வார் திருமொழி)

நாம் பிறப்பதும், தவழ்வதும், நடப்பதும், வாழ்வதும், மடிவதும் பின்பு புதைவதும் இந்த மண்ணிலே. மண்ணோடு மண்ணாய்ப் போகின்ற மனிதரின் பெயரை பிள்ளைகளுக்கு இடுவதா? அவர்கள் மறைந்தால் அப்பெயர்களும் மறைந்துவிடும்.

இறைவனின் இனிய பெயர்களைச் சூட்டினால் பெயரும் நிலைக்கும், நாம் மரித்தபின் நரகமும் போக மாட்டோம் என்கிறார் பெரியாழ்வார்!

நாம் சளைத்தவர்களா என்ன?

தாத்தாவிற்கு/ பாட்டிக்கு அவர்களது பெற்றோர்கள் இறைவனது திருநாமத்தைச் சூட்டினார்கள் அல்லவா?

அந்த மனிதர்களுக்கு சூட்டப்பட்ட இறைவனின் நாமத்தை நம் குழந்தைகட்கு நாம் இட்டால்
இறைவன் நாமமும் ஆயிற்று. பெயர் சொல்லும் பெயரன்/ பெயரத்தியும் ஆயிற்று!

எப்படி?

வளர்ந்ததும் தனது பெயரை அரசிதழில் வெளியிட்டு தனது பெயரை மாற்றிக்கொள்பவர் பலர். வசதி, சுருக்கம், மதமாற்றம் ஆகியவையே அதற்கு முக்கிய காரணம்.

என் அண்ணனுக்கு என் தாத்தா தனது பெயருக்குப் பதிலாக பெருமாள்+நேரு+ ரமணர் நினைவாக 'வெங்கட்ட ரமணானந்தன்' என்று பெயரிட்டார். என் சகோ-வை (அதாங்க ப்ரோ)
முழுப் பெயரைச் சொல்லிக் கூப்பிடுவதற்குள் அவர் அடுத்த தெருவிற்கே போய்விடக் கூடிய அபாயம்  இருந்ததால் அவர் வெங்கட் என்று தன் பெயரைப் பின்னாளில் சுருக்கிக் கொண்டார்.

மகனுக்கு மாமனாரின் பெயரை வைத்துவிட்டு 'அடேய், ராகவா' என்று விளித்து வசைபாட முடியாது என்பதால் எனக்கு 'சுந்தர்' என்று இலவச இணைப்பாக வீட்டுப் பெயர் ஒன்றையும் வைத்தது போல் மற்றொரு பெயர் சூட்டும் வழக்கமும் இங்கு பலருக்கு உண்டு.

ஸ்ரீரங்கத்தில் முப்பெயர் வைக்கும் வழக்கம் இன்றும் உண்டு.
உ-ம் தீபக் @ நாராயணன் @ சுதர்சன். ஆனால்  அழைப்பதென்னவோ வேறுமாதிரி. அது வேறு விஷயம்!

மொத்தத்தில் முன்னோர் பெயரும் கடவுள் பெயலும் ஒன்றாக இருந்தால் ஆழ்வார் வாக்கு நிலைக்கும்.

இல்லையென்றால்?

சொர்கம், நரகத்தை விடுங்கள்.

பெரியவர்களின் பெயர்கள் நிலைக்காது.

பி.கு:

பின்னாளில் நாமும் அவர்களாவோம்!

வார்த்தை சூழ் வாழ்க்கை


'ஹாப்பி பர்த்டே'-களுக்கு
இடையில் தவழ்ந்து வரும்
வாழ்க்கை பின்னர்
ஒரு மையலான 'ஹாய்'-ல் சிக்கி
பின்பு கசப்பான ஒரு 'குட்-பை'யில்
சிதறுண்டுவிடுகிறது.

பிறிதொரு பொழுதில்
ஒரு கங்ராட்ஸ்-ல்
தடம் மாறும் வாழ்க்கை
ஹாப்பி வெட்டிங் டே-யில் நழுவி பழையபடி ஹாப்பி பர்த்டேயில்
தஞ்சம் அடைகிறது.

நடை தளர்ந்து
விஷ் யு ஸ்பீடி ரெகவரி- யில் தடுமாறும் அந்த வாழ்க்கை
இறுதியாக ஆர்ஐபி-யில்
புதைந்துவிடுகிறது.

இதற்கு நடுவில்,
வார்த்தைகளால் சூழ்ந்த
இந்த உலகில்,
அவனுக்கான அவனது நாளை
மனிதன்
எப்போது வாழப்போகின்றான்?

Wednesday, 29 August 2018

ஆற்றுவது ஆற்றாமை பேதமை

வெள்ளிவீதியார்.

சங்க காலப் புலவர்களில் தனித்தவர்.

காரணம், ஒரு தலைவி தனது வேட்கையை வெளிப்படையாகச் சொல்வதாக அவர்  இயற்றிய பாடல்கள்.

அந்த உணர்ச்சியை ஆற்றாமை என்றழைப்பர்.

அவர் இயற்றிய பாடல்கள் மொத்தம் 13 மட்டுமே.

அகநானூற்றில் இரண்டு, குறுந்தொகையில் எட்டு,
நற்றிணையில் மூன்று.

சமகாலத்தில் அவ்வையாரும்
( ஒன்றுக்கும் மேற்பட்ட புலவர்கள் அதே பெயரில் இருந்தனர்),
பிற்காலத்தில் ஆண்டாளும் (தெலுங்கில்) முத்துப்பழனியும் இந்தப் பொருளைப் பற்றிப் பாடியுள்ளனர்.

வெள்ளிவீதியாரின் பசலை குறித்த பாடல் ஒன்று மிகப் பிரசித்தம்.

பசலை என்பது காதலுற்ற தலைவனைப் பிரிந்திருக்கும் பிரிவுத்துயரால் தவைவிக்கு ஏற்படும் நோய்.

குறுந்தொகை 27ம் பாடல் வெள்ளி
வீதியார் எழுதிய ஆற்றாமை பற்றிய சிறப்பான பாடல்.

"கன்றும் உண்ணாது, கலத்தினும் படாது, நல்ஆன் தீம்பால் நிலத்துஉக் காஅங்கு, எனக்கும் ஆகாது, என்னைக்கும் உதவாது,
பசலை உணீஇயர் வேண்டும் திதலை அல்குல்என் மாமைக் கவினே".

இப்பாடலை என் சுவாசக் காற்றே என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற இனிமையான பாடலான 'தீண்டாய், மெய் தீண்டாய்' என்ற பாடலில் ஏ.ஆர்.ரஹ்மான் அழகுறப் பயன்படுத்தியுள்ளார்.

பசுவின் பால் அதன் கன்றுக்குட்டியால் அருந்தப் படாமலும், பாத்திரத்தில் கறக்கப்படாமலும், தரையில் வீணாவதைப் போல தலைவியின் அழகானது அவளுக்கும் பயனின்றி, தலைவனுக்கும் இன்பமளிக்காது பசலை நோய்க்கு இரையாகி விடுகிறதே என்ற ஏக்கமே அதன் பொருள்.

பிரிவுத்துயரைவிடக் கொடுமை யானதாக வீணாகும் இளமையையும் எழிலையும் குறிப்பது இப்பாடலின் மெய்ப்பொருள்.

ஒரே ஆற்றாமைப் பாடலை வெவ்வேறு மாந்தர் பாடுவதாகப் பொருள் தரக்கூடிய மற்றொரு பாடலும் (குறுந்தொகை-44)
வெள்ளிவீதியாரின் புலமைக்குச் சான்று.

"காலே பரிதப் பினவே; 
கண்ணே நோக்கி நோக்கி வாள்இழந் தனவே;
அகல்இரு விசும்பின் மீனினும் பலரே மன்ற, இவ் உலகத்துப் பிறரே".

இப்பாடலின் திணை; பாலை

துறை:  செவிலித்தாய் கூற்றுத் துறை.

வெள்ளிவீதியார் தன்னிலைப் பாடலாக காதற் பொங்கி இப்பாடலைப் பாடியதாகவும், இது செவிலியின் கூற்றல்ல என்றும் சில உரையாசிரியர்கள் கருதுகின்றனர்.

'என் மகளையும் அவளைக் கவர்ந்து சென்ற தலைவனையும் தேடி அளாவிய என் கால்கள் களைத்து விட்டன. துழாவிப் பார்த்த என் கண்கள் அயர்ந்துவிட்டன. இந்தப் பரந்த உலகில் வானத்து வின்மீனைப் போல எண்ணற்று உள்ளதில் நான் எப்படி அவர்களைத் தேடுவேன்?' என்று ஒரு செவிலித் தாய் அரற்றுவதாக இப்பாடல் அமைந்துள்ளது.

இதையே காதலனைப் பிரிந்த காதலி அந்த ஆற்றாமையில் பாடுவதாகவும் இப்பாடலைப் பொருள் கொள்ள முடியும்.

கண்கள் ஒளி குறைந்து போனதாலும், களைப்பாலும்
காணும் ஆடவர் பலரையும் தன் தலைவனே என ஐயப்பட்டு மனக்கவலையால் தலைவி தளர்ந்துவிட்டதாகவும் இப்பாடலைக் கருதுவர் உண்டு.

எவ்வகையில் நோக்கினும் மரபுமீறி ஆற்றாமை என்ற தவிப்பை மண்சட்டியில் கசியும் தண்ணீரைப் போல அல்லாமல், கலத்திலிருந்து பொங்கி வழியும் பாலைப் போல வெளிப்படையாக எழுதியதால்  வெள்ளிவீதியார் தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு ஒரு தலையாய முன்னோடி!

Monday, 27 August 2018

அல்லை நல்லை

அற்றைத் திங்கள் நள்ளிரவு. பனிபடர்ந்த வான்.

முகிலைத் துகிலாக்கி நிலா தலை துவட்டிக் கொண்டிருந்தாள்.

தூரத்திலிருந்து தண்மை சேர்த்து ஓர் இசைக் கீற்றையும் கடத்திக் கொண்டு வந்த தென்றல் அதை என் செவிகளுக்குள் நிரப்பிச் சென்றது.

வாகனத்தை அமர்த்தினேன்.

ஆளரவமற்ற நெடுஞ்சாலை. மயான அமைதி.

திடீரென்று காற்றைக் கிழித்துக் கொண்டு விரையும் உந்துகளின் ஓசையைத் தவிர வேறு சலனமற்ற பொழுது.

செல்.பேசியிலிருந்த ஒரு இசைக் கோர்வைக்கு மின்னுயிர்ப்பித்தேன்.

ஒரு மெல்லின்னிசை எழும்பி என் காதோடு பேசி மனதோடு கரைந்தது.

'நல்லை அல்லை, நல்லை அல்லை, நன்னிலவே நீ நல்லை அல்லை.......'

வைரமுத்துவும், ரெஹ்மானும், சத்யப்பிரகாஷும், சின்மயியும் போட்டி போட்டுக்கொண்டு நம்மை இம்சை செய்த இசை அது...

தரை தொட்டேன்.

காற்று அழுத்தமாக என் முகத்தை அறைந்து போனது.

அருகே ஏதும் ஒரு நீர்நிலை இருந்திருக்கவேண்டும். காற்றில் அந்த ஈரத்தின் வாசம் இருந்தது.

என் அகமும் சிலிர்த்துக்கொள்ள கவனம் அந்தப் பாடலுக்குள் வலியப் புகுந்தது.

நல்லை அல்லை.....

இச் சொல்லாடல் குறுந்தொகையின் 47வது பாடலில் இடம் பெற்றுள்ள ஒன்று.

அதனால் உந்தப்பட்டு காற்று வெளியிடை இப்பாடலை வைரமுத்து எழுதியிருக்க வேண்டும்

சங்க காலம்.
நூறாண்டுகள் பல கடந்த காலம்.

அற்றைத் திங்கள் ஒரு நள்ளிரவு.

காதலுற்ற தலைவியும் தலைவியும் இருமனம் கூடினாலும் திருமணம் கைகூடாதவர். 

இரவில் சந்திக்கும் களவொழுக்கம் பற்றியவர்.

தலைவியென்று ஒருத்தி இருந்தால் அவளுக்கு தோழி ஒருத்தி இருப்பாள் அல்லவா?

சங்ககால அக இலக்கியங்களில் தோழிகளின் கருத்தைச் சொல்லும் தோழிக்கூற்று என்ற வகைப் பாடல் அது:

“கருங்கால் வேங்கை
வீயுகு துறுகல்
இரும்புலிக் குருளையிற் றோன்றுங் காட்டிடை
எல்லி வருநர் களவிற்கு
நல்லை யல்லை
நெடுவெண்ணிலவே.”

என்ன சொல்கிறாள் அத்தோழி?

'நீண்ட நேரம் வானில் காயும் வெண்ணிலவே!
கரிய அடியுடைய வேங்கை மரத்தின் மலர்கள் உதிர்ந்த குண்டுக்கல், பெரிய புலிக்குட்டியைப் போலக் காணப்படும்.
காட்டினிடையே இரவில் வரும் தலைவனது களவொழுக்கத்திற்கு நன்மை தருவதாக நீ இல்லை.”

இது தான் அப்பாடலின் பொருள்.

தலைவன் இரவில் தலைவியிடம் வந்து பழகும் காலத்தில் அவளை அவன் விரைந்து திருமணம் செய்து கொள்ளும்படி தூண்ட நினைத்த தோழி சொல்கிறாள்:

நிலவே, இரவில் வந்தொழுகும் தலைவனது களவொழுக்கத்திற்கு நீ செய்வது நல்லது அல்ல.

இரவுக் குறியை மறுக்கும்  தோழிக்கூற்றாக இப்பாடல் அமைந்துள்ளது.

முன்னிலைப் புறமொழி என்ற உத்தியில் அமைந்த பாடல் இது.

முன்னிலைப் புறமொழி என்றால் என்ன?

சொல்லப்படும் சேதியைக் கேட்க வேண்டியவர் தன் முன்னே இருந்தாலும் அவரை நேரடியாக அழைத்துக் கூறாமல், வேறு ஒருவரையோ அல்லது பிறிதொரு பொருளையோ விளித்துக் கூறுவதே முன்னிலைப் புறமொழி எனப்படும்.

அதன் சொற்களின் பொருள்:

1. நெடு வெண்நிலவே-
நீடித்திருக்கும் வெண்ணிலாவே,

2. கரு கால் வேங்கை - கரிய அடியையுடைய வேங்கை மரத்தின்,

3. வீ உகு துறுகல் - மலர்கள் உதிர்ந்த குண்டுக்கல்,

4. இரு புலி குருளையின் தோன்றும் - பெரிய புலிக்குட்டியைப் போலக் காணப்படும்,

5. காட்டிடை - காட்டிற்குள்,

6. எல்லி வருநர் களவிற்கு - இரவின்கண் வரும் தலைவரது களவொழுக்கத்திற்கு

7. நல்லை அல்லை - நன்மை தருவது அல்ல.

அது இருக்கட்டும், அது என்ன நெடு வெண்நிலவே? புதுமையாக உள்ளதே! என்று தோன்றலாம்.

நெடுவெண்ணிலவே, காட்டிடை எல்லி வருநர் களவிற்கு நல்லை அல்லை என்பதன் மெய்ப்பொருள் என்னவென்றால் ' இனி இரவில் வருதல் தகாது என்பதால் தலைவன் தலைவியை விரைவில் மணந்து கொள்ள முன்வர வேண்டும்' என்பதே.

நெடு வெண்ணிலவு என்பது நெடு நேரம் உலவும் வெண்ணிலவு என்று பொருள்படும். தனக்காக இயல்பாக அமைந்த தண்மதியாக இருந்தால் என்ன,  அது விரைவில் மறைய வேண்டும் என்று அவள் விரும்பினாள். அவளுக்கு அந்த இரவு நீண்டதாகத் தோன்றியது.
தான்  விரும்பாத அந்த நீள் முழு நிலவை, ‘நெடு வெண்ணிலவு’ என்று அவள் கருதியதாக அப்புலவர் சொல்லாடிய சிறப்பால் அவர் ‘நெடுவெண்ணிலவினார்’ என்னும் பெயர் பெற்றார்.

நல்லை அல்லை என்றால் அது அவ்வளவு நல்லதல்ல என்று பொருள் கொள்ளலாம்.

ஆங்கிலத்தில் சொன்னால்
This is not fair.

The girl here says that it is not fair for her lover to keep visiting her at night.

It indicates that He must marry Her soon and make their relationship official.

(இடையே மேஜர் சுந்தர்ராஜன் காற்று வந்து வீசியதோ?)

தோழி தலைவியின் அருகே/ தன் எதிரே இருக்கும் தலைவனிடம் நேரடியாகச் சொல்லாமல் தலைவியை கூடிய விரைவில் திருமணம் செய்துகொள் என்ற அறிவுரையை நிலவின் மேல் ஏற்றிச் சொன்ன வகையில் இப்பாடல் ரசிக்கத்தக்கது.   

இப்போது திரைப்பாடலுக்கு வருவோம்.

----
வானில் தேடி நின்றேன்.
ஆழி நீ அடைந்தாய்.
ஆழி நான் விழுந்தால்
வானில் நீ எழுந்தாய்.

என்னை நட்சத்திரக் காட்டில்
அலையவிட்டாய்.
நான் என்ற எண்ணம்
தொலையவிட்டாய்.

நல்லை அல்லை,
நல்லை அல்லை
நன்னிலவே, நீ
நல்லை அல்லை.

நல்லை அல்லை,
நல்லை அல்லை
நள்ளிரவே, நீ
நல்லை அல்லை.

ஒலிகளின் தேடல்
என்பதெல்லாம்
மௌனத்தில் முடிகிறதே.

மௌனத்தின் தேடல்
என்பதெல்லாம்
ஞானத்தில் முடிகிறதே.

நான் உன்னை தேடும்
வேளையிலே
நீ மேகம் சூடி ஓடிவிட்டாய்.

நல்லை அல்லை
நல்லை அல்லை
நன்னிலவே நீ
நல்லை அல்லை.

நல்லை அல்லை,
நல்லை அல்லை
நள்ளிரவே, நீ
நல்லை அல்லை.

முகை முகல்
முத்தென்ற நிலைகளில்
முகம்தொட காத்திருந்தேன்

மலர் என்ற நிலை விட்டு
பூத்திருந்தாய்
மனம் கொள்ளக் காத்திருந்தேன்.

மகரந்தம் தேடி
நுகரும் முன்னே
வெயில் காட்டில் வீழ்ந்து விட்டாய்.

நல்லை அல்லை
நல்லை அல்லை
நாறும்பூவே
நல்லை அல்லை

நல்லை அல்லை
நல்லை அல்லை
முல்லை கொல்லை நீ
நல்லை அல்லை.
------

பொருத்தமான ஒரு கட்டத்தில் நிலவையும் காதலியையும் ஒப்புமைப்படுத்தி நாயகன் பாடுவதாக நல்லை அல்லை
என்ற குறுந்தொகையின்  சொல்லாடலையும் அப்பாடல் எழுதப்பட்ட யுக்தியையும் அழகாகப் பயன்படுத்தியதற்காக கவிஞர் வைரமுத்துவுக்கும் அந்தப் பாடலை படத்தில் செம்மையாகப் பொருத்தியமைக்காக
மணிரத்தினத்திற்கும் பாராட்டுகள்.

சினிமா பாட்டுக்கு இத்தனை முக்கியத்துவம் தேவையா? என்றால் இளைய தலைமுறையை தமிழ் இலக்கியத்தின் பால் ஈர்ப்பு கொள்ள வைக்க சினிமாதான் சாதகமான சிறந்த ஒரு சாதனம் என்பதால் தேவையே என்பேன்.

எனவே இத்திரைப்படப் பாடல் நல்லை அல்லை அல்ல!