Wednesday, 29 August 2018

ஆற்றுவது ஆற்றாமை பேதமை

வெள்ளிவீதியார்.

சங்க காலப் புலவர்களில் தனித்தவர்.

காரணம், ஒரு தலைவி தனது வேட்கையை வெளிப்படையாகச் சொல்வதாக அவர்  இயற்றிய பாடல்கள்.

அந்த உணர்ச்சியை ஆற்றாமை என்றழைப்பர்.

அவர் இயற்றிய பாடல்கள் மொத்தம் 13 மட்டுமே.

அகநானூற்றில் இரண்டு, குறுந்தொகையில் எட்டு,
நற்றிணையில் மூன்று.

சமகாலத்தில் அவ்வையாரும்
( ஒன்றுக்கும் மேற்பட்ட புலவர்கள் அதே பெயரில் இருந்தனர்),
பிற்காலத்தில் ஆண்டாளும் (தெலுங்கில்) முத்துப்பழனியும் இந்தப் பொருளைப் பற்றிப் பாடியுள்ளனர்.

வெள்ளிவீதியாரின் பசலை குறித்த பாடல் ஒன்று மிகப் பிரசித்தம்.

பசலை என்பது காதலுற்ற தலைவனைப் பிரிந்திருக்கும் பிரிவுத்துயரால் தவைவிக்கு ஏற்படும் நோய்.

குறுந்தொகை 27ம் பாடல் வெள்ளி
வீதியார் எழுதிய ஆற்றாமை பற்றிய சிறப்பான பாடல்.

"கன்றும் உண்ணாது, கலத்தினும் படாது, நல்ஆன் தீம்பால் நிலத்துஉக் காஅங்கு, எனக்கும் ஆகாது, என்னைக்கும் உதவாது,
பசலை உணீஇயர் வேண்டும் திதலை அல்குல்என் மாமைக் கவினே".

இப்பாடலை என் சுவாசக் காற்றே என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற இனிமையான பாடலான 'தீண்டாய், மெய் தீண்டாய்' என்ற பாடலில் ஏ.ஆர்.ரஹ்மான் அழகுறப் பயன்படுத்தியுள்ளார்.

பசுவின் பால் அதன் கன்றுக்குட்டியால் அருந்தப் படாமலும், பாத்திரத்தில் கறக்கப்படாமலும், தரையில் வீணாவதைப் போல தலைவியின் அழகானது அவளுக்கும் பயனின்றி, தலைவனுக்கும் இன்பமளிக்காது பசலை நோய்க்கு இரையாகி விடுகிறதே என்ற ஏக்கமே அதன் பொருள்.

பிரிவுத்துயரைவிடக் கொடுமை யானதாக வீணாகும் இளமையையும் எழிலையும் குறிப்பது இப்பாடலின் மெய்ப்பொருள்.

ஒரே ஆற்றாமைப் பாடலை வெவ்வேறு மாந்தர் பாடுவதாகப் பொருள் தரக்கூடிய மற்றொரு பாடலும் (குறுந்தொகை-44)
வெள்ளிவீதியாரின் புலமைக்குச் சான்று.

"காலே பரிதப் பினவே; 
கண்ணே நோக்கி நோக்கி வாள்இழந் தனவே;
அகல்இரு விசும்பின் மீனினும் பலரே மன்ற, இவ் உலகத்துப் பிறரே".

இப்பாடலின் திணை; பாலை

துறை:  செவிலித்தாய் கூற்றுத் துறை.

வெள்ளிவீதியார் தன்னிலைப் பாடலாக காதற் பொங்கி இப்பாடலைப் பாடியதாகவும், இது செவிலியின் கூற்றல்ல என்றும் சில உரையாசிரியர்கள் கருதுகின்றனர்.

'என் மகளையும் அவளைக் கவர்ந்து சென்ற தலைவனையும் தேடி அளாவிய என் கால்கள் களைத்து விட்டன. துழாவிப் பார்த்த என் கண்கள் அயர்ந்துவிட்டன. இந்தப் பரந்த உலகில் வானத்து வின்மீனைப் போல எண்ணற்று உள்ளதில் நான் எப்படி அவர்களைத் தேடுவேன்?' என்று ஒரு செவிலித் தாய் அரற்றுவதாக இப்பாடல் அமைந்துள்ளது.

இதையே காதலனைப் பிரிந்த காதலி அந்த ஆற்றாமையில் பாடுவதாகவும் இப்பாடலைப் பொருள் கொள்ள முடியும்.

கண்கள் ஒளி குறைந்து போனதாலும், களைப்பாலும்
காணும் ஆடவர் பலரையும் தன் தலைவனே என ஐயப்பட்டு மனக்கவலையால் தலைவி தளர்ந்துவிட்டதாகவும் இப்பாடலைக் கருதுவர் உண்டு.

எவ்வகையில் நோக்கினும் மரபுமீறி ஆற்றாமை என்ற தவிப்பை மண்சட்டியில் கசியும் தண்ணீரைப் போல அல்லாமல், கலத்திலிருந்து பொங்கி வழியும் பாலைப் போல வெளிப்படையாக எழுதியதால்  வெள்ளிவீதியார் தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு ஒரு தலையாய முன்னோடி!

No comments:

Post a Comment