அற்றைத் திங்கள் நள்ளிரவு. பனிபடர்ந்த வான்.
முகிலைத் துகிலாக்கி நிலா தலை துவட்டிக் கொண்டிருந்தாள்.
தூரத்திலிருந்து தண்மை சேர்த்து ஓர் இசைக் கீற்றையும் கடத்திக் கொண்டு வந்த தென்றல் அதை என் செவிகளுக்குள் நிரப்பிச் சென்றது.
வாகனத்தை அமர்த்தினேன்.
ஆளரவமற்ற நெடுஞ்சாலை. மயான அமைதி.
திடீரென்று காற்றைக் கிழித்துக் கொண்டு விரையும் உந்துகளின் ஓசையைத் தவிர வேறு சலனமற்ற பொழுது.
செல்.பேசியிலிருந்த ஒரு இசைக் கோர்வைக்கு மின்னுயிர்ப்பித்தேன்.
ஒரு மெல்லின்னிசை எழும்பி என் காதோடு பேசி மனதோடு கரைந்தது.
'நல்லை அல்லை, நல்லை அல்லை, நன்னிலவே நீ நல்லை அல்லை.......'
வைரமுத்துவும், ரெஹ்மானும், சத்யப்பிரகாஷும், சின்மயியும் போட்டி போட்டுக்கொண்டு நம்மை இம்சை செய்த இசை அது...
தரை தொட்டேன்.
காற்று அழுத்தமாக என் முகத்தை அறைந்து போனது.
அருகே ஏதும் ஒரு நீர்நிலை இருந்திருக்கவேண்டும். காற்றில் அந்த ஈரத்தின் வாசம் இருந்தது.
என் அகமும் சிலிர்த்துக்கொள்ள கவனம் அந்தப் பாடலுக்குள் வலியப் புகுந்தது.
நல்லை அல்லை.....
இச் சொல்லாடல் குறுந்தொகையின் 47வது பாடலில் இடம் பெற்றுள்ள ஒன்று.
அதனால் உந்தப்பட்டு காற்று வெளியிடை இப்பாடலை வைரமுத்து எழுதியிருக்க வேண்டும்
சங்க காலம்.
நூறாண்டுகள் பல கடந்த காலம்.
அற்றைத் திங்கள் ஒரு நள்ளிரவு.
காதலுற்ற தலைவியும் தலைவியும் இருமனம் கூடினாலும் திருமணம் கைகூடாதவர்.
இரவில் சந்திக்கும் களவொழுக்கம் பற்றியவர்.
தலைவியென்று ஒருத்தி இருந்தால் அவளுக்கு தோழி ஒருத்தி இருப்பாள் அல்லவா?
சங்ககால அக இலக்கியங்களில் தோழிகளின் கருத்தைச் சொல்லும் தோழிக்கூற்று என்ற வகைப் பாடல் அது:
“கருங்கால் வேங்கை
வீயுகு துறுகல்
இரும்புலிக் குருளையிற் றோன்றுங் காட்டிடை
எல்லி வருநர் களவிற்கு
நல்லை யல்லை
நெடுவெண்ணிலவே.”
என்ன சொல்கிறாள் அத்தோழி?
'நீண்ட நேரம் வானில் காயும் வெண்ணிலவே!
கரிய அடியுடைய வேங்கை மரத்தின் மலர்கள் உதிர்ந்த குண்டுக்கல், பெரிய புலிக்குட்டியைப் போலக் காணப்படும்.
காட்டினிடையே இரவில் வரும் தலைவனது களவொழுக்கத்திற்கு நன்மை தருவதாக நீ இல்லை.”
இது தான் அப்பாடலின் பொருள்.
தலைவன் இரவில் தலைவியிடம் வந்து பழகும் காலத்தில் அவளை அவன் விரைந்து திருமணம் செய்து கொள்ளும்படி தூண்ட நினைத்த தோழி சொல்கிறாள்:
நிலவே, இரவில் வந்தொழுகும் தலைவனது களவொழுக்கத்திற்கு நீ செய்வது நல்லது அல்ல.
இரவுக் குறியை மறுக்கும் தோழிக்கூற்றாக இப்பாடல் அமைந்துள்ளது.
முன்னிலைப் புறமொழி என்ற உத்தியில் அமைந்த பாடல் இது.
முன்னிலைப் புறமொழி என்றால் என்ன?
சொல்லப்படும் சேதியைக் கேட்க வேண்டியவர் தன் முன்னே இருந்தாலும் அவரை நேரடியாக அழைத்துக் கூறாமல், வேறு ஒருவரையோ அல்லது பிறிதொரு பொருளையோ விளித்துக் கூறுவதே முன்னிலைப் புறமொழி எனப்படும்.
அதன் சொற்களின் பொருள்:
1. நெடு வெண்நிலவே-
நீடித்திருக்கும் வெண்ணிலாவே,
2. கரு கால் வேங்கை - கரிய அடியையுடைய வேங்கை மரத்தின்,
3. வீ உகு துறுகல் - மலர்கள் உதிர்ந்த குண்டுக்கல்,
4. இரு புலி குருளையின் தோன்றும் - பெரிய புலிக்குட்டியைப் போலக் காணப்படும்,
5. காட்டிடை - காட்டிற்குள்,
6. எல்லி வருநர் களவிற்கு - இரவின்கண் வரும் தலைவரது களவொழுக்கத்திற்கு
7. நல்லை அல்லை - நன்மை தருவது அல்ல.
அது இருக்கட்டும், அது என்ன நெடு வெண்நிலவே? புதுமையாக உள்ளதே! என்று தோன்றலாம்.
நெடுவெண்ணிலவே, காட்டிடை எல்லி வருநர் களவிற்கு நல்லை அல்லை என்பதன் மெய்ப்பொருள் என்னவென்றால் ' இனி இரவில் வருதல் தகாது என்பதால் தலைவன் தலைவியை விரைவில் மணந்து கொள்ள முன்வர வேண்டும்' என்பதே.
நெடு வெண்ணிலவு என்பது நெடு நேரம் உலவும் வெண்ணிலவு என்று பொருள்படும். தனக்காக இயல்பாக அமைந்த தண்மதியாக இருந்தால் என்ன, அது விரைவில் மறைய வேண்டும் என்று அவள் விரும்பினாள். அவளுக்கு அந்த இரவு நீண்டதாகத் தோன்றியது.
தான் விரும்பாத அந்த நீள் முழு நிலவை, ‘நெடு வெண்ணிலவு’ என்று அவள் கருதியதாக அப்புலவர் சொல்லாடிய சிறப்பால் அவர் ‘நெடுவெண்ணிலவினார்’ என்னும் பெயர் பெற்றார்.
நல்லை அல்லை என்றால் அது அவ்வளவு நல்லதல்ல என்று பொருள் கொள்ளலாம்.
ஆங்கிலத்தில் சொன்னால்
This is not fair.
The girl here says that it is not fair for her lover to keep visiting her at night.
It indicates that He must marry Her soon and make their relationship official.
(இடையே மேஜர் சுந்தர்ராஜன் காற்று வந்து வீசியதோ?)
தோழி தலைவியின் அருகே/ தன் எதிரே இருக்கும் தலைவனிடம் நேரடியாகச் சொல்லாமல் தலைவியை கூடிய விரைவில் திருமணம் செய்துகொள் என்ற அறிவுரையை நிலவின் மேல் ஏற்றிச் சொன்ன வகையில் இப்பாடல் ரசிக்கத்தக்கது.
இப்போது திரைப்பாடலுக்கு வருவோம்.
----
வானில் தேடி நின்றேன்.
ஆழி நீ அடைந்தாய்.
ஆழி நான் விழுந்தால்
வானில் நீ எழுந்தாய்.
என்னை நட்சத்திரக் காட்டில்
அலையவிட்டாய்.
நான் என்ற எண்ணம்
தொலையவிட்டாய்.
நல்லை அல்லை,
நல்லை அல்லை
நன்னிலவே, நீ
நல்லை அல்லை.
நல்லை அல்லை,
நல்லை அல்லை
நள்ளிரவே, நீ
நல்லை அல்லை.
ஒலிகளின் தேடல்
என்பதெல்லாம்
மௌனத்தில் முடிகிறதே.
மௌனத்தின் தேடல்
என்பதெல்லாம்
ஞானத்தில் முடிகிறதே.
நான் உன்னை தேடும்
வேளையிலே
நீ மேகம் சூடி ஓடிவிட்டாய்.
நல்லை அல்லை
நல்லை அல்லை
நன்னிலவே நீ
நல்லை அல்லை.
நல்லை அல்லை,
நல்லை அல்லை
நள்ளிரவே, நீ
நல்லை அல்லை.
முகை முகல்
முத்தென்ற நிலைகளில்
முகம்தொட காத்திருந்தேன்
மலர் என்ற நிலை விட்டு
பூத்திருந்தாய்
மனம் கொள்ளக் காத்திருந்தேன்.
மகரந்தம் தேடி
நுகரும் முன்னே
வெயில் காட்டில் வீழ்ந்து விட்டாய்.
நல்லை அல்லை
நல்லை அல்லை
நாறும்பூவே
நல்லை அல்லை
நல்லை அல்லை
நல்லை அல்லை
முல்லை கொல்லை நீ
நல்லை அல்லை.
------
பொருத்தமான ஒரு கட்டத்தில் நிலவையும் காதலியையும் ஒப்புமைப்படுத்தி நாயகன் பாடுவதாக நல்லை அல்லை
என்ற குறுந்தொகையின் சொல்லாடலையும் அப்பாடல் எழுதப்பட்ட யுக்தியையும் அழகாகப் பயன்படுத்தியதற்காக கவிஞர் வைரமுத்துவுக்கும் அந்தப் பாடலை படத்தில் செம்மையாகப் பொருத்தியமைக்காக
மணிரத்தினத்திற்கும் பாராட்டுகள்.
சினிமா பாட்டுக்கு இத்தனை முக்கியத்துவம் தேவையா? என்றால் இளைய தலைமுறையை தமிழ் இலக்கியத்தின் பால் ஈர்ப்பு கொள்ள வைக்க சினிமாதான் சாதகமான சிறந்த ஒரு சாதனம் என்பதால் தேவையே என்பேன்.
எனவே இத்திரைப்படப் பாடல் நல்லை அல்லை அல்ல!
No comments:
Post a Comment