Book Review
Title : Radhika Sanatawanam
Author: Muddupalani.
நம்மால் அதிகம் அறியப்படாத அந்தப் பெண்மணியின் எழுத்துக்கள் கொஞ்சம் ரசமானவை.
அவரைப் பற்றி எனக்கு முதல் முதலில் தெரியவந்த போது மிக மிக ஆச்சரியப்பட்டேன்.
நமது ஆண்டாள் தெலுங்கு தேசத்திலும் மிகப் பிரபலம்.
அங்கு அவள் 'கோதா' என்று சிலாகிக்கப்படுகிறாள். அவளது 'திருப்பாவை' தெலுங்கு தேசத்தில் 'கோதாம்ருதம்' என்று சிலாகித்துக் கொண்டாடப்படுகிறது.
1989ல் சென்னையில் திருவல்லிக் கேணியில் எனது 'மேன்ஷன்' வாசத்தின் போது ரமேஷ் என்ற ஒரு ஆந்திர மாணவன் என் பக்கத்து அறை வாசியானார்.
அவரிடம் ஒரு முறை ஆண்டாளைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்த போது அவர் சொன்ன ஒரு சின்னத் தகவலின் மூலம் முதன் முதலாக முத்துப்பழனியைப் பற்றி எனக்கு ஓர் அறிமுகம் கிடைத்தது. அவர் திருப்பாவையைத் தெலுங்கில் மொழிபெயர்த்தார் என்பது தான் அத்தகவல்.
அப்போது அந்த நண்பர் என்னிடம் இன்னொன்றும் சொன்னார்:
"தெரியுமா ராகவன்? முத்துப்பழனி ஜெயதேவரின் 'அஷ்டபதியை'யும் அழகாக அவர் தெலுங்கில் மொழி பெயர்த்திருக்கிறார். ஆனால் அவரது கவிதைகளைப் படித்தால் எனக்கு எனது வீட்டில் நன்றாக வசவுதான் கிடைக்கும்."
அதற்கான காரணம் அவர் ஏதோ ஒரு நூலகத்தில் தேடி அவரது 'ராதிகா சந்தவனமு' என்ற ஒரு கவிதைத் தொகுப்பின் ஆங்கில மொழிபெயர்ப்பைத் தேடி எடுத்துக் கொடுத்த போது தான் புரிந்தது.
அவரது அந்தக் கவிதைகளின் மொழிபெயர்ப்பைப் படித்து விட்டு ஆடிப்போனேன் என்பதே பொருத்தமான வார்த்தை.
கலவியியலின்( sex) பலப்பல அம்சங்களையும் அவர் விரகம், தாபம், ஏக்கம், தவிப்பு போன்ற இதர பெண்ணியல் சார்ந்த அம்சங்களோடு வெளிப்படையாகத் தீட்டியிருந்தார்.
அந்த எழுத்துக்கள் ஏன் மக்களால் ஆட்சேபிக்கப்பட்டது என்பது எனக்கு அப்போது புரியவில்லை.
இப்போதும்.
செக்ஸ் பற்றியோ அதன் இன்ன பிற விவரங்கள் குறித்தோ வெளிப்படையாக சிலாகித்து எழுதவோ, பேசவோ பெண்களுக்கு எது தடையாக இருக்கிறது என்பதும் புரியவில்லை.
ஆனால் அத்தகைய தடைகளை பெண்களுக்கு எதிராக நிறுவியது ஆண் வர்க்கம்தான் என்பதும், அத்தடையை பெண்கள் மீறினால் ஆண்களின் பார்வையில்தான் அசிங்கப்படுத்தப்படுகிறார்கள் என்பது நிச்சயம் என்பன மட்டும் புரிகிறது.
தேவதாசியான முத்துப்பழனியின் பெருமையை வெளிக்கொணர அந்தப் பரம்பரையில் வந்த 'பங்களூரு நாகரத்தினம்' என்ற இன்னொரு நடன/ இசைக் கலைஞர் பிறக்கவேண்டியிருந்தது.
ஒரு வேளை முத்துப்பழனி தேவதாசியாக இல்லாதிருந்தால் இவற்றை இந்த அளவிற்கு எழுதியிருக்கமாட்டார் என்கிறார் என் நண்பர்.
அதனால் மட்டுமே அவரால் அப்படி எழுத முடிந்தது என்ற கருத்தில் உடன்படுதல் முறையா?
No comments:
Post a Comment