Sunday, 20 January 2019

அறியாது...

கிளையிலிருந்து
உதிரும் முன்
பூ
காற்றிடம்
கடைசியாகப் பேசியது என்னவென்று
வண்டுகள் அறியாது....

குடையை விரித்து
நனைய மறுக்கும்
மனிதரைப் பார்த்து
மழைத்துளிகள்
பழித்தது என்னவென்று
மேகம் அறியாது.

வெட்டப்பட்ட மரத்துடன்
ஒரு வனத்தின் சரித்திரமும்
புதைந்து போவதை
அந்தக் கோடாலி
அறியாது..

காதலைத் துறந்து
அவனது கரம் பற்றும்
அவளின் மனதின்
வதையை அந்த மோதிரம்
அறியாது..

அறியாத உணர்வுகளைக்
கடந்தபடி நாட்கள்
நகர்ந்து செல்வதை
அந்தக் காலமும்
அறியாது.

No comments:

Post a Comment