என் மனதை
நானே எதிர்க்க
முடிகிறபடியால்
நான் என்பது
நான் அல்ல.
எண்ணங்களின்
தொகுப்புகள்
என் சிந்தையை
மறுதலிப்பது
வெறும்
சந்திப் பிழையன்று.
என் மனதை நானே
அதட்டி வைக்கிறேன்.
சமயங்களில்
என் மனதை நானே
ஆமோதிக்கிறேன்.
நான் என்பது
எது என்பதை
நான் அறிவதை
நானே தடுக்கிறேன்.
என்ன சொல்லி
என் மனதிடம்
நான் போரிட்டு
ஜெயிக்க இயலும்?
என்ன செய்து
என் மனதின்
குரலை நானே
நெரிக்க முடியும்?
என்னையே என்னால்
எப்படி அப்படி
ஏய்க்க முடிகிறது?
மனதுக்கும் மூளைக்கும்
மாறி மாறிப்
பேசிப் பேசி
என் எண்ணங்கள்
மொழியற்றுப் போகின்றன.
எண்ணங்களை
உற்பத்தி செய்துவிட்ட
பிறகு
இதயத்தின்
இம்சை தாளாது
மனது
ஓடி ஒளிகிறது.
இப்படியாக
என்னை விட்டு
நானே வெளியேறிய
கதையை
உங்களில் யார்
என்னிடமே சொல்லப்
போகிறீர்கள்?
No comments:
Post a Comment