உடையவர் ஸ்ரீ ராமானுஜரின் ஆயிரமாவது அவதாரத் திருநாளை தன் பங்கிற்கு கொண்டாடும் முகமாக ' தி இந்து' ஒரு சிறப்பிதழை தற்போது வெளியிட்டுள்ளது.
அது சரி, இறை நம்பிக்கை தனக்கு இல்லையென்று சொல்லிக் கொள்பவர்கள் கூட அகவை ஏற ஏற 'ஏதாவது ஒரு வகையில்' ஆண்டவனின் நாமம் சொல்லி அருளமுது பருகும் போது பாரம்பரிம் கொண்ட 'தி இந்து' குழுமம் செய்யாதா என்ன?
கச்சிதம் என்று பாராட்டத்தக்க படைப்பு.
கட்டுரைகளும் புகைப்படங்களும் நேர்த்தி. செழுமையான தகவல்கள் ஆங்காங்கே காணக் கிடைக்கின்றன.
நினைத்துப் பார்க்க முடியாத சீர்திருத்தங்களை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சிந்தித்து, உபதேசித்து, வாழ்ந்து, சாதித்துக் காட்டிய எத்திராஜர் இந்தியா உலகுக்கு ஈந்த ஒரு மிகச் சிறந்த சீர்திருத்தவாதி.
அவரது வாழ்க்கைச் சரிதத்தை ஏன் இம்மலரில் சுருங்கச் சொல்ல வேண்டும்?
சொல்லப்போனால் மற்ற எல்லா சமூக சீர்திருத்தங்களை விட அவரது கொள்கைகள் தொள்ளாயிரம் வருடம் முந்தையது. ஆனால் நமது பாடத்திட்டங்களில் அவரைப் பற்றிய பாடங்கள் அரிது.
பின் எங்ஙனம் நாடு உய்யும்?
திருப்பூர் கிருஷ்ணனின் கட்டுரை பாடமாக்கப் படவேண்டியதொன்று.
உறங்காவில்லி, பொன்னாச்சி தம்பதியருக்கும் எம்பெருமானாருக்கும் இருந்த நட்பு நம்மில் எத்தனை பெயருக்குத் தெரியும்? தெரியாமற் செய்தது யாருடைய குற்றம்?
உறங்காவில்லிதாசரின் தோள் மேல் ஈரத்துண்டின்றி ராமானுஜர் தன் கரங்களை சார்த்தும் நிகழ்வு இளங்கண்ணனின் வார்த்தைகளில் அழகாகச் சொல்லப்பட்டுள்ளது.
எம்பார் ஜீயரின் நேர்காணல் ராமானுஜரைப் பற்றி பல அரிய விவரங்களைத் தருகிறது.
மொத்தத்தில் இது ஒரு பொக்கிஷம் தான். ஆனால் நாய் பெற்ற தெங்கம் பழமாக இதை ஆக்கி விடாமல் பலரும் படிக்கச் செய்வது நன்று.
அதோடு நில்லாமல் நாமும் நாளும் அவரது உபதேசங்களைப் பின்பற்றுவது உத்தமம்.
No comments:
Post a Comment