எத்தனை மொழிகளில் எத்தனை திரைப்படங்கள் பார்த்தாயிற்று!
திரைப்படங்களில் என்னை அதிகம் ஈர்ப்பது தொழில்நுட்பச் சமாச்சாரங்களே. குறிப்பாக அந்த மூவர். ஒளிப்பதிவாளர், எடிட்டர் மற்றும் இசையமைப்பாளர்.
ஒரு இயக்குநரின் கனவை செலுலாய்ட் வடிவில் உயிர்ப்பிக்கும் முயற்சியில் எடிட்டர் அவரது மூளை என்றால், ஒளிப்பதிவாளர் அவரது கண்கள் என்றால் இசையமைப்பாளரே அவரது இதயம் என்பேன்.
கதையைச் சிதைக்காமல் இயக்குநரின் மனதில் இருப்பதை இன்னும் உயரச் சென்று உணர்த்துவது பாடல்களைவிட பின்னணி இசைதான்.
அவ்வகையில் பின்னணி இசை என்ற துறையில் இளையராஜா தொட்ட உயரம் உச்சம் என்பேன். அருகில் யாரும் இல்லை எனலாம்.
மரணத் தருவாயில் கர்ண மந்திரமாய் என் காதில் ராஜாவின் How To Name It இழைய வேண்டும் என்று ஓர் உயில் எழுத உத்தேசம்.
எத்தனைபடங்கள் ராஜாவின் பின்னணி இசையின் காரணமாகவே முன்னணிக்கு வந்தன! எண்ணினால் எண்களுக்கு பஞ்சம் வரலாம்.
மணிரத்னம்- இளையராஜா கூட்டணி திரைத்துறைக்கு அளித்த இசைக் கோர்வைகள் பல. அவர்களது கூட்டுப்படைப்பில் பாடல்கள் எல்லாம் ஆஹா ரகம் என்றால் பின்னணி இசை ஓஹோ ரகம்.
அதிலும் அவர்களது படைப்பில் வந்த 'தளபதி' திரைப்படப் பின்னணி இசையில் ஒரு மாயாஜால அனுபவம்.
எத்தனை காட்சிகள் அப்படத்தில் அவரது இசையின் கரம் பிடித்து விசுவரூபமாய் ஜொலித்தன! உயிரூட்டிச் சென்றன!
'சுந்தரி கண்ணால் ஒரு சேதி', 'சின்னத் தாயவள்' ஆகிய பாடல்களின் மெட்டுக்களும் படத்தில் இடம் பெறாத 'புத்தம் புது பூ பூத்ததோ' பாடலின் மெட்டும் அப்படத்தின் பல வலிமையான காட்சிகளில் வயலின் வாயிலாகவும் குழலின் வழியாகவும் நெடுகிலும் பொங்கிப் பிரவாகம் எடுத்து நாடியெல்லாம் சிலிர்ப்பூட்டின.
அந்தப் பின்னணி இசை தேனினிமையிலும் தேமதுரமானது. உருகிக் கரைந்து வருடிச் செல்வது.
அதே தளபதி படம்தான் மணி-ராஜா கூட்டணியின் கடைசிப் படைப்பான போது பெரும் இழப்பு இசை உலகுக்கு வந்தது.
அந்த இழப்பையும் இசையாக மொழிபெயர்த்து உருக்கமாய் உணர்த்த ராஜாவை விட்டால் இனி யாருமில்லை என்பதே ராஜாவின் பெருமை.
No comments:
Post a Comment