'பாரதி சின்னப் பயல்' என்று தனக்குத் தரப்பட்ட எகத்தாளமான ஈற்றடிக்கு நெத்தியடியாக சிறுவனாய் இருக்கும் போது பாரதி பதிலடி கொடுத்த நிகழ்வு நம்மில் பலர் அறிந்ததே.
பாரதி இளம் வயதிலேயே மிகப் புகழ் பெற்றிருந்ததால் பொறாமையடைந்த காந்திமதிநாதப் பிள்ளை என்ற ஒரு புலவர் எல்லாரும் கூடியிருந்த சபையில் அவரை அவமானப் படுத்தும் நோக்கில்
'பாரதி சின்னப் பயல்' என்ற ஈற்றடியைக் கொடுத்து வெண்பா ஒன்றைப் பாடும்படி சொல்ல, காத்திமதி நாதப் பிள்ளைக்கு தக்க பாடம் புகட்டும் வகையில் பாரதி நொடிப்பொழுதில் பாடினார்:-
'ஆண்டில் இளையவன் என்றந்தோ, அகந்தையினால் ஈண்டிங்கு இகழ்ந்தென்னை ஏளனஞ்செய்- மாண்பற்ற காரிருள் போல் உள்ளத்தான் காந்திமதி நாதனைப்
பாரதி (பார் அதி) சின்னப் பயல்'
இதைக் கேட்டு சபையோர் பரிகசிக்க குறுகிப்போனார் காந்திமதி நாதன்.
இது நாம் அறிந்த செய்தி.
நாம் அறியாத மற்றொரு செய்தி இதில் உண்டு.
என்ன தெரியுமா?
அவ்வாறு பாடி முடித்த சில நிமிடங்களில் பாரதிக்கு மனம் ஒப்பவில்லை. தம்மில் வயதில் பெரியவரான காந்திமதி நாதன் என்ற புலவரை வசைபாடிவிட்டதாக மனம் வருந்திய பாரதி என்ன செய்தான் தெரியுமா?
கேட்டால் ஆச்சரியம் மேலிடும்.
முன்னம் தான் பாடிய வெண்பாவை அடியோடு மாற்றி விட்டு வேறொரு வெண்பாவினை சற்று நிமிடங்களில் இயற்றிப் பாடினான் பாரதி.
' ஆண்டில் இளையவன் என்றைய, அருமையினால் ஈண்டின்று என்னை நீ யேந்தினையால்- மாண்புற்ற காரது போல் உள்ளத்தான் காந்திமதி நாதற்குப்
பாரதி (பார் அதி) சின்னப் பயல்'.
சபையிலிருந்தோர் பாரதியின் பண்பினைப் போற்றினர் என்பது நாம் அறியாத வரலாறு.
இரண்டு பாக்களையும் ஒப்பு நோக்கிப் படிக்கும் போது பாரதியின் சொல்வன்மையும், மொழித்திறனும், கவியுள்ளமும், மனப்பாங்கும், பாட்டுத் திறனும் அழகாக வெளிப்படும்.
அதோடு அவனுக்கிருந்த மாண்பும் பளிச்சிடும்.
அது தான் பாரதி! வாழ்க நீ எம்மான்!
No comments:
Post a Comment