Saturday, 25 February 2017

வழியான விழிகள்

வலுவாக வலி
பகரும் கணவாய்.

உள்ளத்தின்
வார்த்தைகளற்ற
மெளன
மொழி பெயர்ப்பு.

உள்ளச்சிறைக்கு
இமைகளின் தாழ்.

இருதயத்தின்
புறவாயில்.

Friday, 17 February 2017

தாயுமான.....

எனக்கும் என் தந்தைக்கும் இடையே சுமுகமான உறவு முறை எப்போதும் இருந்ததில்லை. தன் தந்தையை 'அப்பா' என வாய் நிறைய அழைக்கும் நபர்களை நான் பொறாமையோடு  பார்ப்பேன்.
அது வேறு கதை.

இப்பதிவு அதைப் பற்றியதல்ல.

Father like figure எனப்படும் பெரியவர்களின் பரிச்சயம் அதனாலோ என்னவோ எனக்கு மிகவும் பிடித்தமானதாக இருந்து வந்திருக்கிறது.

அவர்களில் முக்கியமானவர் நண்பர் இரா. முருகனின் தந்தை அமரர். ராமசாமி அவர்கள். எங்கள் ஊர்க்காரர். எங்கள் வீட்டுக்கு எதிர்வீட்டில் இருந்தார். எங்களுக்கு அவர் சீதா ராமசாமி.

எனக்கும் அவருக்கும் வயது வித்தியாசம் ஒரு பொருட்டாக இருந்ததில்லை. என் அத்தை குடும்பத்தினர் நடத்தி வந்த ரெட்டைத் தெரு கோகுல் பார்மசியின் திண்ணை தான் எங்களுக்குச் சங்கப் பலகை போல. அதை விட்டால் எங்கள் வீடு. என் தனிமையைத் தின்று தொலைக்க நான் நாடிய வெகு சில நல்லிதயங்களில் அவரும் ஒருவர்.

நிறையப் பேசுவோம். ஓரபோலின் முதல் ஓரம்போ வரை.
அதிராமல் சிரிப்பார். வலிக்காமல் திட்டுவார். நாசூக்காக அறிவுறுத்துவார்.

அவர் மரணம் சென்னையில் சம்பவித்தது. அது குறித்து  EraMurukan Ramasami எழுதியதைப் படித்த போது மங்கிய படலமாய் விழித்திரைப் படங்கள் மனதில்.

இப்போதும் எங்கள் இல்லத்திலிருந்து நான் கிளம்பும் போது தலை அனிச்சையாய் வீதியின் இரு புறமும் திரும்பப் பார்த்து ஏமாறும்.

இரண்டு கட்டிடங்களும் கை மாறி இடிக்கப்பட்டு உருமாறி நிற்பதையுணர்ந்து காருக்குள் அமர்கையில் விரல் நுனி உயர்ந்து திரண்டு நிற்கும் கண்ணீரைச் சுண்டும்.

----

இதோ தந்தையின் மரணம் பற்றி இரா. முருகன் எழுதியது:-

அப்பாவின் மரணமும் அடுக்குமாடிக் குடியிருப்பும்
---------

காலையில் வென்னீர் போட்டுத்தரச் சொன்ன குரலிலும்
குளிகை தேடித்தரக் கொடுத்த துணிப்பை மேலும்
சாவின் ரேகைகள் இல்லை.

செம்மண் பூமியில் எண்பது வருடம் முன்னால்
மாற்றாந்தாய்ப் பாலோடு தொடங்கியது
உஸ்மான்வீதி காப்பி கிளப் சர்க்கரை ஜாஸ்தி
பிற்பகல் காப்பியோடு முடிந்தது.

மழை ராத்திரியில் ஐஸ்பாளம் இறக்கிய
ஆட்டோக்காரர் சொன்னார்
'போட்டுக் கொடு சார். பொணம் கனம் '.

எல்லா மாடியிலும் தெரிந்த முகங்கள்
பார்த்தபடி நிற்கப் பாளம் உருட்டி
மாடியேற்றி நண்பர்கள் கைகொடுக்கக்
குளிரக் குளிரப் படுக்க வைத்தோம்.

'காலையிலே தானா மற்றதெல்லாம் ?
சீக்கிரம் எடுத்துடுவேளா ? எனக்குப்
பசி தாளாது. அல்சர் வேறே '.
தொலைபேசியில் சேதி சொல்ல
உறவு முறையிட்டது.

காலையில் லுங்கியோடு வந்த
முதல் மனிதர் நேர்மேலே மூன்றாம் தளம் -
'இந்துவிலே இப்பத்தான் படிச்சேன்.
அனுதாபங்கள் '.
டிவியில் சொல்லியிருந்தால்
எதிர்வீட்டிலிருந்தும் வந்திருப்பார்கள்.

நெய்யை ஊற்றி ஹோமம் பண்ணனும்.
சாஸ்திரி சொல்லியபடி
ஜர்தாபான் டப்பாவில்
வனஸ்பதி வாங்க
ஆள் அனுப்பினார்.

'எண்ணூறு சதுர அடி வீடா ?
எவ்வளவுக்கு வாங்கினது ? '
ஈரம் மிதித்துக் கேட்டவர்
குடையை மாட்ட இடம் தேடினார்.

'எடுத்துப் போக வண்டி வரலியா ? '
எல்லோரும் கேட்கச் சங்கடம் தாங்காது
'போகலாம் வா ' என்றார் அப்பா.
எப்போதும் போல் மழை.

(ஆனந்த விகடன்)

Wednesday, 15 February 2017

அகமூடி

பெண்ணே,
இந்த முகங்களில்
இப்போது
எது உனக்கு
வேண்டும்?

உனக்கான நாட்கள்,
உனக்கான நேரம்,
உனக்கான வாழ்வு
உன்
வசமாகும் நாள் வரை
உன்னிடமிருக்கும்
அந்த முகமே
உனது முகம்.

அது வரை
நீ
கொஞ்சம்
இளைப்பாறு.

அந்நாளில்
என் அகத்தில்
நீ உன்
அகமுகம் பார்க்கலாம்
என்பதைத் தவிர
நான்
வேறென்ன பெரிதாகச்
சொல்லிவிட முடியும்?

பாசுரம்-பரவசம்-8

அகநானூறு குறுந்தொகை போன்ற சங்க இலக்கியங்கள் மனிதனின் அகவாழ்வு பற்றியன. காதலும் காதல் சார்ந்தவையும் தான் அவற்றின் களம். தமிழ் மண்ணில் பக்தி இலக்கியம் தோன்றிய காலம் அதற்கு மிகப் பிற்பாடு தான்.

சங்க இலக்கியத்தில் போற்றிப் போற்றப்பட்ட அகம் சார்ந்த பொருள் தமிழ் பக்தி இலக்கியத்திலும் பாடப்பட்டது என்பது சுவாரசியம்.

அட, அது எப்படி? என்று புருவம் உயர்த்தினால் பக்தியையும் காதலையும் ஒரே தட்டில் வைத்து ஆராதித்த ஆழ்வார்களின் பாங்கு இதழ்களை முறுவச் செய்யும்.

அங்கே காதல் என்றால் இங்கே பக்தி.
அங்கே தலைவன்/ தலைவி என்றால்  இங்கே இறைவன்/ இறைவி.

தலைவன் என்ற இடத்தில் கடவுளை நிறுத்தி காதல் என்ற இடத்தில் பக்தியைப் பொருத்தி உண்மையான காதலும் ஆழமான பக்தியும் ஒரே மாதிரியானதென்றும் புனிதமானதென்றும் நிறுவியிருக்கும் வல்லமை தமிழின் பெருமைக்கும் ஆழ்வார்களின் அருமைக்கும் சான்று.

அந்த வகைப் பாசுரங்களில் நம்மாழ்வாரது பதிகங்கள் தனித்து நிற்பவை.

ஒரு பதம் சுவைப்போமா?

"மலர்ந்தே ஒழிந்தில மாலையும் மாலைப்பொன் வாசிகையும்
புலந்தோய் தழைப்பந்தர்
தண்டுற நாற்றி பொருகடல்சூழ்
நிலந்தாவிய எம்பெருமான் தனது வைகுந்தமன்னாய் கலந்தார் வரவு எதிர்கொண்டு வன்கொன்றைகள் கார்த்தன"

இது நம்மாழ்வாரின் பாசுரம்.

இதன் பொருள் எளியது:

"அழகான அந்தக் கொன்றை மலர்கள் இன்னும் மலரவில்லை. பந்தல்களை ஒத்த அந்த மரக்கிளைகளில் பொன்னைப் போன்ற மலர்கள் இன்னும் முகிழ்க்கவில்லை. திருமாலின் உறைவிடமான வைகுண்டத்தை ஒத்தவளே, உன்னுடன் இரண்டறக் கலந்த உன்னவரின் வருகையை எதிர்பார்த்து மட்டுமே அம்மலர்களின் மொட்டுக்கள் மலர்வதற்காகக் காத்துக் கொண்டு இருக்கின்றன!"

தலைவனின் வரவிற்காக காத்திருக்கும் தலைவியிடம் அவளது தோழி பகர்வது போல அமைந்துள்ளது இப் பாசுரம். உண்மையில் மழைக்காலம் வந்தாகிவிட்டது. கொன்றை மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன. ஆனால் கார்காலம் வரும்போது நான் உன்னோடிருப்பேன் எனச் சொல்லிப் பிரிந்து சென்ற தலைவன் இன்னும் திரும்பவில்லை. அந்தக் கவலையில் மூழ்கியிருக்கும் தலைவியை சமாதானம் செய்வதற்காக தலைவி பொய்மையும் வாய்மையிடத்து என்பதாக ஒரு காட்சிப்பிழையை உருவாக்கி உரைப்பதாக நம்மாழ்வார் பாடியுள்ளார்.

"அடியே, உன் உள்ளம் கவர் கள்வன் வரப்போகிறான் என்பதை அறிந்துதான் இம்மலர்கள் மலர்வதற்காக இன்னும் காத்துக்கிடக்கின்றன. பார், அந்த அரும்புகள் அவன் வந்த பிறகே மலரும். கவலை கொள்ளாதே" என்பதாக அவளது சமாதானம் அமைகிறது.

இப்போது இவ்விடத்தில் தலைவனுக்குப் பதிலாக  இறைவனையும் காதல் என்ற உணர்வுக்குப் பதில் பக்தியையும் இருத்திப் பொருள் கொண்டு பாருங்கள், சிலிர்த்துப் போவீர்கள்!

Wednesday, 8 February 2017

பாசுரம்- பரவசம்- 7

யோசிக்காமல் நாம் ஆப்ஷனில் விடும் கேள்வி எது என்றால் 'கடவுளைப் பற்றி சிறு குறிப்பு வரைக' என்பதாகத்தான் பெரும்பாலும் இருக்கும்.

ஏன் எனில் அந்தக் கேள்விக்கு மனிதரிடையே ஒத்த கருத்தும் இல்லை, கருத்திசைவும் இல்லை.

அவன் இருக்கிறானா?
இருக்கிறான் என்றால் உருவம் உண்டா?
உருவு உண்டென்றால் பார்க்க முடியுமா?
பார்க்க முடியும் என்றால் பார்த்தவர் யார்?

இப்படியாக ப்ளோ சார்ட் வடிவில் வினாக்கள் மிகும்.

உண்மையில் அவனை எப்படி உணர்வது என்ற ஐயம் காலம்கடந்து தொடர்ந்து வருகிறது, விடை புரியாமல்.

இந்தக் கேள்வி நம்மாழ்வருக்கும் எழ அவர் தமது திருவாய்மொழியில் சொல்வதைக் கேட்டால் விக்கித்து நிற்கவேண்டும்.

' ஆணல்லன் பெண்ணல்லன் அல்லா அலியுமல்லன்
காணலும் ஆகான் உளனல்லன் இல்லையல்லன்
பேணுங்காற் பேணும் உருவாகும் அல்லனுமாம்
கோணைப் பெரிதுடைத்து எம் பெருமானைக் கூறுதலே' என்பது பாசுரம்.

பொருளறியுங்கால் திகைப்பே மிஞ்சும்.

மிகப் பெரிய தத்துவார்த்த உண்மையை எளியாரும் புரிந்து கொள்ளும் வகையில் எடுத்துச் சொல்வதென்பது ஒரு கலையென்றால் அக்கலையில் நம் நம்மாழ்வார் ஒரு சூப்பர் ஸ்டார்.

அவன் நாம் காணும் ஆண்களைப் போன்றவன் அல்ல; நாமறிந்த பெண்களைப் போன்றவனும் அல்லன். இரண்டுமில்லாத திருநங்கைகளைப் போன்றும் அல்லன். அவனைக் கண்களால் காண முடியாது. அவன் உள்ளவனும் அல்ல. இல்லாதவனும் அல்ல. வேண்டும்போது தேவைப்படும் உருவில் தோன்றுவான். தோன்றாமலும் இருப்பான். என் பெருமாளை உணர்ந்தறிவது மிக்க கடினமானது' என்பது இப்பாசுரத்தின் சாரம்.

நம்மாழ்வாருக்கே இறைவன் எத்தகையவன் என்று விளக்க கடினமானது என்றால், அற்பம், நாமெல்லாம்?

அன்பே கடவுள் ஒன்றான பிறகு அவனை இருக்கிறானா, இல்லையா என்று தேடுவது தேவையற்றது. அன்பு மிக்கவருக்கு அவன் தேவைப்பட்ட கோலத்தில் தோன்றுவான். இல்லையெனில் தோன்ற மாட்டான்.

நாம் ஆணுக்கும் பெண்ணுக்கும் வைத்துள்ள வரையறைக்குள் அவனை அடைக்க முடியாது.

இந்த புறத் தோற்றங்களை எல்லாம்
கடந்து உள் வசிப்பவனே இறைவன் என்பதே இப்பாசுரம் சொல்லும் அம்சமாகும்.

கொஞ்சம் க்வாண்டம் இயற்பியலில் ஆர்வமுள்ளவர்களுக்கு இது அழகாய்ப் புரியும்.

உளன் எனில் உளன், இலன் எனில் இலன்.

Thursday, 2 February 2017

பாசுரம்-பரவசம்-6

தெய்வத் தமிழ் அமுது-6
--------------

உலகில் அதிகம் விவாதிக்கப்படும் ஒரு விஷயம் கடவுள். அவன் இருக்கிறானா அல்லது இல்லையா என்பதை விட அவன் ஒருவனா என்பதே நோக்கி நிற்கும் கேள்வி.

ஒவ்வொரு மதத்திற்கும் தனித்தனியே கடவுளர்கள். இந்து மதத்திலோ குறைவிலாத எண்ணிக்கையில் இறைவன். அதிலும் எத்தனை வகை? ஒரே கடவுளின் பல அவதாரங்களும் கடவுளே. அதில் ராமன் ஒரு வகை என்றால் கண்ணன் ஒரு வகை. லட்சுமி ஒரு வகை என்றால் சக்தி ஒரு வகை. கல்விக்கு ஒரு கடவுள்.  லட்சுமியில் அஷ்டலக்‌ஷ்மிகள். அய்யனாரும் உண்டு. மாரியம்மாவும் உண்டு. பத்ரகாளியும் உண்டு. அய்யப்பனும் உண்டு. குட்டிக்கண்ணனாகி குருவாயூரில் பரவசப்படுத்தும் திருமால் மீசை தரித்து பார்த்தனுக்கு பாரதப்போரில் தேரோட்டிய சாரதியாக அல்லிக்கேணியில் அருள்பாலிக்கிறான். லிங்க ரூபமாய் சிவனின் தேசமளாவிய தரிசனம் அற்புதம்.

இத்தனை கடவுள்கள் என்ன செய்துவிடப் போகிறார்கள் என்ற கேள்வி சாமானியரின் மனதுக்குள் எழுந்து உடன் வேண்டாமென்று மறக்கடிக்கப்படுகிறது என்னவோ உண்மையே.

இதை இவண்கண் விடல் என்று நினைத்து அதைப்பற்றி யாரோ நம்மாழ்வாரிடம் கேட்டிருக்க வேண்டும்.

பொளேரென்று ஒரு பாசுரத்தில் சொல்லிவிட்டார் ஆழ்வார்.

"அவரவர் தமதம தறிவறி வகைவகை
அவரவர் இறையவர் என அடியடைவர்கள்
அவரவர் இறையவர் குறைவிலர்; இறையவர்
இவரவர் விதிவழி யடைய நின்றனரே!

( 1-1-5 திருவாய்மொழி - நம்மாழ்வார்)

என்ன சொல்கிறார்?

' கடவுளைத் தொழ விரும்புவர்கள் ஒவ்வொருவரும் தங்களது அறிவுக்கேற்றபடி அவனைப்பற்றி அறிந்துகொண்டு, அவரவர் விருப்பத்திற்கேற்ப ஏதேனும் ஒரு தெய்வத்தை வழிபட்டு உய்வார்கள்.

இருப்பினும் அவர்கள் யாரை தெய்வமாக வழிபட்டாலும் சரி, அவரவர் வழிபடும் கடவுளால் அவர்கள் அளவற்ற நன்மையை மட்டுமே அடைவார்கள்.

அவரவர்கள் அவரவர் விதிப்படி ஏதோ ஒரு கடவுளை துதித்து வணங்கினாலும் அவரவர்கள் வணங்கும் நிலையில் அந்தந்த இறைவன் அவரவர் நினைப்புக்கு ஏற்றபடி அருள் தருவான்'

என்ன ஒரு ஆழமான கருத்தை எளிமையாக நாலே வரிகளில் ஆழ்வார் நமது சிற்றறிவுக்கு உணர்த்திவிட்டார் பாருங்கள். நாம் தான் புத்திக் கொள்முதல் கொண்ட கோளாறால் இந்த உண்மையை உணர மறந்தும் மறுத்தும் நான் நம்பும் 'அந்த ஏதோ ஒரு' இறைவன் மட்டுமே உலகத்துக்கு எல்லாம் ஒரே கடவுள் என்றுபிதற்றியும் வெறிகொண்டும் அலைகிறோம்.

இது எப்படி இருக்கிறது?

இப்புவியில் நிலம்சூழ் கடல்பரப்பிற்கு நாம் அடையாளம் காண்பதற்காக விதவிதமாக பெயர்களைச் சூட்டிவிட்டு பிறகு அந்தக் கடல்கள் எல்லாம் வெவ்வேறு நீரால் ஆனது என்று சொல்வது போல!

மாரியோ, மேரியோ, அல்லாவோ, யேசுவொ, சிவனோ, விஷ்ணுவோ, புத்தனோ, ராமனோ நீங்கள் தொழும் கடவுள் யாராக இருந்தாலும் சரி, அன்பை விடுத்து வெறுப்பையும் பகையையும் நீங்கள் உங்களது மனத்தில் புகுத்தினால் உங்களை விட்டு அந்தக் கடவுள்  நீங்குவது நிஜம்.

பாசுரம்-பரவசம்-5

தெய்வத் தமிழ் அமுது-5
------------------

தோழர்.....வேண்டாம்,வேண்டாம்.

இப்போது அந்த வார்த்தைக்கு நேரம் சரியில்லை. அதனால் நண்பன் என்றே சொல்வோம்.

நண்பன் என்ற வார்த்தைக்கான அர்த்தமாகட்டும், அல்லது அதற்கான இலக்கணமாகட்டும், தமிழ் இலக்கியம் தொடாத உச்சம் இல்லை.

ஆனால் அதை பொய்கையாழ்வார் சொல்லும் பாங்கு இன்னும் சிறப்பு.

திருமாலின் உறுதுணை ஒரு அரவம். பெயர் ஆதிசேஷன். அது திருமாலின் பலப்பல அவதாரங்களில் பெரும்பங்கு பெற்றது என்பது நம்பிக்கை. ராமாயண காதையில் வரும் ராமனின் இளவல் லட்சுமணன் என்பது ஆதிசேஷனின் அவதாரம் என்பர்.

ராமானுஜரும் ஒருவகையில் அப்படியே. ராமனின் அனுஐன் தான் ராமானுஜன். அனுஜன் என்றால் தம்பி. ஆக லட்சுமணனின் அவதாரமே எத்திராஜன் ராமானுஜர் என்பர் சிலர்.

அதிருக்கட்டும்.

இந்த ஆதிசேஷனை வைத்து நட்பின் ஆழத்தைப் பொய்கையாழ்வார் விளக்கும்போது அப்பாசுரம் சொல்லும் நட்பின் இலக்கணத்தின் வீச்சு அபாரம்.

'சென்றால் குடையாம், இருந்தால் சிங்காசனமாம், நின்றால் மரவடியாம், நீள்கடல் என்றும் புணையாம், மணிவிளக்காம், பூம்பட்டாம் புல்கும் அணையாம் திருமாற்கு அரவு.'

(முதல் திருவந்தாதி/பொய்கையாழ்வார்)

ஆதிசேஷன் அன்புடைத்தெய்வம் திருமாலுக்கு என்னவெல்லாம் செய்கிறது?

அவன் நடந்தால் இது குடை.
அவன் அமர்ந்தால் இது சிம்மாசனம்.
அவன் நின்றால் இது காலணி.
அவன் தூங்கினால் இது மெத்தை.
இரவில் கண்மணி மூலம் வெளிச்சம் தரும்.
சமயங்களில் பட்டாடையாகவும் தலையணையாகவும் அது இருக்கிறது'

ஆழ்வாரின் திறத்தைப் பாருங்கள்.
உற்ற உறுதுணை என்பவன் எப்படி இருக்கவேண்டும் என்பதை மாலனின்  அரவத்தை வைத்து இதல்லவா நட்பு? தன்னலம் கருதாத உறவு? என்று குறிப்பால் நச் என்று உண்த்திவிட்டாரே!

ராமனுக்கு ஒரு லட்சுமணன் போல, துரியாதனனுக்கு ஒரு கர்ணன் போல நமக்கு ஒரு ஆதிசேஷன் அமையாவிட்டாலும் ஒரு அல்சேஷனாவது கிட்டுமா?

பாசுரம்-பரவசம்-4

தெய்வத் தமிழ் அமுது-4
------------------

மனிதன் இறைவனோடு ஐக்கியமாவதை முன்வைக்கும் முப்பெரும் தத்துவங்களை உள்ளடக்கியது இந்து சமயம் என்பதை நாம் அறிவோம். அவை அத்வைதம், த்வைதம், விஷிஷ்டாத்வைதம் என்பதும் நாம் அறிந்ததே.

இதில் மகான்
ராமானுஜர் உபதேசித்தது விஸிஷ்டாத்வைதம் ஆகும். அதன்படி
கடவுளும் மனிதனும் ஒரு பைனரி நிலை மாதிரி...டிஜிடல் உலகம் பைனரியை அடிப்படையாகக் கொண்டதைப் போல பக்தியும் முக்தியும் பரமாத்மாவையும் ஜீவாத்மாவையும் சுற்றி அமைவது. பிரபத்தி என்ற ஒப்பணர்வு அதன் வழிமுறை. சரணாகதி அதன் அடிப்படைக்கூறு.

வைணவத்தின் இந்த நிலைப்பாட்டை திருவாய் மொழியில் நம்மாழ்வார் லேசாக ஒரு காட்டு காட்டுகிறார் பாருங்கள், அது ஒரு எளிய அமர்க்களம்...

"எனது ஆவியுள் கலந்த பெருநல்லுதவிக் கைம்மாறு
எனது ஆவி தந்தொழிந்தேன் ;
இனி மீள்வது என்பதுண்டே
எனதாவி யாவியும் நீ,
பொழிலேழும் உண்டவெந்தாய்!
எனது ஆவி யார்? யான் யார்? தந்த நீ கொண்டாக்கினையே!"

(நம்மாழ்வார்/ 2-3-4 திருவாய்மொழி)

இதன் பொருள்:
'என்னுள்ளே கலந்து உயிருடன் உறைந்து நீ எனக்கு அருளிய நன்மைகளுக்கு இறைவனே,  உனக்கு நான் என்ன கைம்மாறு செய்ய முடியும்?
என் உயிரே உன்னுடையது! அதே எப்போதோ உனக்கு அர்ப்பணித்து விட்டேன். அதன் பிறகு உன் உயிரை நான் உன்னிடமிருந்து மீட்டெடுத்தல் இயலுமோ?
நீ எனது உயிருக்கு உயிரானவன் ஆயிற்றே...
இந்நிலையில் என் உயிர் என்பது என்ன?
நான் என்பது தான் யார்?
அனைத்தையும் எனக்கு அள்ளிக்கொடுத்த நீயே அனைத்தையும் உன்னுடையதாக்கிக் கொண்டு விட்ட பிறகு எனக்கு என்று என்னிடத்தில் என்ன இருக்கிறது?'

பரமாத்மாவான இறைவனும் ஜீவாத்மாவான மனிதனும் கலந்துறையும் இந்த விஸிஷ்டாத்வைதத் தத்துவத்தை இப்படி எளிமையான ஒரு வினாவின் மூலம் அழகுறச் சொல்வது ஆழ்வார்கள் ஆண்ட  தமிழின் சிறப்பு.

அவர்கள் மனதில் உறைந்த பக்தியின் சிறப்பு.

பாசுரம்- பரவசம்-3

தெய்வத் தமிழ் அமுது-3
------

ஒரு திருக்குறளில் சொல்லப்பட்ட அதே வார்த்தைகள்(சீர்) நாலாயிரத் திவ்விய பிரபந்தத்தின் ஒரு பாசுரத்திலும் வருகிறது. ஆனால் அச்சீர்கள் பயன்படுத்தப்படும் உட்கரு வேறு.

முதலில் குறள் :

'வித்தும் இடல் வேண்டும் கொல்லோ விருந்தோம்பி மிச்சில் மிசைவான் புலம்'

இக்குறளின் பொருள்:

'விருந்தினர்களுக்கு உணவிட்டு மிச்சத்தை உண்பவனுக்கு தன் சொந்த நிலத்தில் விதை போடவேண்டிய அவசியம் இருக்காது '

விருந்தினர் போற்றுதும் எனப் பகர்வது வள்ளுவரின் குறள் வழிக்குரல்.

அதே சீர்கொண்டு திருமழிசை ஆழ்வார் எழுதியது என்ன?

'வித்தும் இடவேண்டும் கொல்லோ விடை அடர்த்த பக்தி உழவன் பழம் புனைத்து? மொய்த்து எழுந்த கார் மேகம் அன்ன கரு மால் திரு மேனி நீர் வானம் காட்டும் நிகழ்ந்து'

இப் பாசுரம் நமக்குப் பகர்வது என்ன வென்றால்:

"கடவுள் என்னும்  ஆன்மிக உழவனை அடிபணிந்தால் அவன் நிலத்தில் நாம் ஏதும் விதையை விதைக்க வேண்டுமா என்ன?"

வைணவத்தின் அடிப்படை அம்சம் சரணாகதி. அவனை அன்னவர்க்கே சரண் நாங்களே என நாம் பாதம் பணிந்தால் போதும்; நம்மை அவனாகவே ஆட்கொண்டு அருள்வான்.

இதை வைணவக் கடவுளான பெருமாள் தன் திருமேனியின் மூலமும் உருவகப் படுத்திக் காட்டுகிறார்.

எப்படி?

பொதுவாக கடவுளரின் திருமேனியில் யாமிருக்க பயமேன் என்ற தோரணையில் அவர்களது திருக்கரங்கள் உயர்த்தி நம்மை ஆசிர்வதித்து அருள் தரும், இல்லையா? அதை வடமொழியில் 'அபய ஹஸ்தம்' என்கின்றனர்.

இப்போது திருமலைத் தெய்வத்தின் திருவுருவத்தை மனக்கண்ணில் வைத்து நினைத்துப் பாருங்கள். அவனது வலக்கரம் என்ன செய்கிறது?

'என் பாதம் பணிந்து சரணடைந்தால் போதும், மற்றவை என் பொறுப்பு' என்று அவன் பாதத்தைச் சுட்டிக் காட்டி  நம்மை அவனது கமலபாதங்களை அடிபணியச் சொல்கிறது. வடமொழியில் இதை 'வரத ஹஸ்தம்' என்கின்றனர்.

திருமலையில் அவன் சன்னிதி நுழைகையில் குலசேகரன்படி அருகே இதை அழகாக நெய்து காட்டும் திரைச் சீலையை அடுத்த முறை அங்கே செல்லும்போது பார்க்கத் தவறாதீர்.

அந்த இறைத் தத்துவத்தை அழகுறச் சொல்வது நம் தமிழ் மறையின் தனிச்சிறப்பு!