எனக்கும் என் தந்தைக்கும் இடையே சுமுகமான உறவு முறை எப்போதும் இருந்ததில்லை. தன் தந்தையை 'அப்பா' என வாய் நிறைய அழைக்கும் நபர்களை நான் பொறாமையோடு பார்ப்பேன்.
அது வேறு கதை.
இப்பதிவு அதைப் பற்றியதல்ல.
Father like figure எனப்படும் பெரியவர்களின் பரிச்சயம் அதனாலோ என்னவோ எனக்கு மிகவும் பிடித்தமானதாக இருந்து வந்திருக்கிறது.
அவர்களில் முக்கியமானவர் நண்பர் இரா. முருகனின் தந்தை அமரர். ராமசாமி அவர்கள். எங்கள் ஊர்க்காரர். எங்கள் வீட்டுக்கு எதிர்வீட்டில் இருந்தார். எங்களுக்கு அவர் சீதா ராமசாமி.
எனக்கும் அவருக்கும் வயது வித்தியாசம் ஒரு பொருட்டாக இருந்ததில்லை. என் அத்தை குடும்பத்தினர் நடத்தி வந்த ரெட்டைத் தெரு கோகுல் பார்மசியின் திண்ணை தான் எங்களுக்குச் சங்கப் பலகை போல. அதை விட்டால் எங்கள் வீடு. என் தனிமையைத் தின்று தொலைக்க நான் நாடிய வெகு சில நல்லிதயங்களில் அவரும் ஒருவர்.
நிறையப் பேசுவோம். ஓரபோலின் முதல் ஓரம்போ வரை.
அதிராமல் சிரிப்பார். வலிக்காமல் திட்டுவார். நாசூக்காக அறிவுறுத்துவார்.
அவர் மரணம் சென்னையில் சம்பவித்தது. அது குறித்து EraMurukan Ramasami எழுதியதைப் படித்த போது மங்கிய படலமாய் விழித்திரைப் படங்கள் மனதில்.
இப்போதும் எங்கள் இல்லத்திலிருந்து நான் கிளம்பும் போது தலை அனிச்சையாய் வீதியின் இரு புறமும் திரும்பப் பார்த்து ஏமாறும்.
இரண்டு கட்டிடங்களும் கை மாறி இடிக்கப்பட்டு உருமாறி நிற்பதையுணர்ந்து காருக்குள் அமர்கையில் விரல் நுனி உயர்ந்து திரண்டு நிற்கும் கண்ணீரைச் சுண்டும்.
----
இதோ தந்தையின் மரணம் பற்றி இரா. முருகன் எழுதியது:-
அப்பாவின் மரணமும் அடுக்குமாடிக் குடியிருப்பும்
---------
காலையில் வென்னீர் போட்டுத்தரச் சொன்ன குரலிலும்
குளிகை தேடித்தரக் கொடுத்த துணிப்பை மேலும்
சாவின் ரேகைகள் இல்லை.
செம்மண் பூமியில் எண்பது வருடம் முன்னால்
மாற்றாந்தாய்ப் பாலோடு தொடங்கியது
உஸ்மான்வீதி காப்பி கிளப் சர்க்கரை ஜாஸ்தி
பிற்பகல் காப்பியோடு முடிந்தது.
மழை ராத்திரியில் ஐஸ்பாளம் இறக்கிய
ஆட்டோக்காரர் சொன்னார்
'போட்டுக் கொடு சார். பொணம் கனம் '.
எல்லா மாடியிலும் தெரிந்த முகங்கள்
பார்த்தபடி நிற்கப் பாளம் உருட்டி
மாடியேற்றி நண்பர்கள் கைகொடுக்கக்
குளிரக் குளிரப் படுக்க வைத்தோம்.
'காலையிலே தானா மற்றதெல்லாம் ?
சீக்கிரம் எடுத்துடுவேளா ? எனக்குப்
பசி தாளாது. அல்சர் வேறே '.
தொலைபேசியில் சேதி சொல்ல
உறவு முறையிட்டது.
காலையில் லுங்கியோடு வந்த
முதல் மனிதர் நேர்மேலே மூன்றாம் தளம் -
'இந்துவிலே இப்பத்தான் படிச்சேன்.
அனுதாபங்கள் '.
டிவியில் சொல்லியிருந்தால்
எதிர்வீட்டிலிருந்தும் வந்திருப்பார்கள்.
நெய்யை ஊற்றி ஹோமம் பண்ணனும்.
சாஸ்திரி சொல்லியபடி
ஜர்தாபான் டப்பாவில்
வனஸ்பதி வாங்க
ஆள் அனுப்பினார்.
'எண்ணூறு சதுர அடி வீடா ?
எவ்வளவுக்கு வாங்கினது ? '
ஈரம் மிதித்துக் கேட்டவர்
குடையை மாட்ட இடம் தேடினார்.
'எடுத்துப் போக வண்டி வரலியா ? '
எல்லோரும் கேட்கச் சங்கடம் தாங்காது
'போகலாம் வா ' என்றார் அப்பா.
எப்போதும் போல் மழை.
(ஆனந்த விகடன்)
No comments:
Post a Comment