தெய்வத் தமிழ் அமுது-4
------------------
மனிதன் இறைவனோடு ஐக்கியமாவதை முன்வைக்கும் முப்பெரும் தத்துவங்களை உள்ளடக்கியது இந்து சமயம் என்பதை நாம் அறிவோம். அவை அத்வைதம், த்வைதம், விஷிஷ்டாத்வைதம் என்பதும் நாம் அறிந்ததே.
இதில் மகான்
ராமானுஜர் உபதேசித்தது விஸிஷ்டாத்வைதம் ஆகும். அதன்படி
கடவுளும் மனிதனும் ஒரு பைனரி நிலை மாதிரி...டிஜிடல் உலகம் பைனரியை அடிப்படையாகக் கொண்டதைப் போல பக்தியும் முக்தியும் பரமாத்மாவையும் ஜீவாத்மாவையும் சுற்றி அமைவது. பிரபத்தி என்ற ஒப்பணர்வு அதன் வழிமுறை. சரணாகதி அதன் அடிப்படைக்கூறு.
வைணவத்தின் இந்த நிலைப்பாட்டை திருவாய் மொழியில் நம்மாழ்வார் லேசாக ஒரு காட்டு காட்டுகிறார் பாருங்கள், அது ஒரு எளிய அமர்க்களம்...
"எனது ஆவியுள் கலந்த பெருநல்லுதவிக் கைம்மாறு
எனது ஆவி தந்தொழிந்தேன் ;
இனி மீள்வது என்பதுண்டே
எனதாவி யாவியும் நீ,
பொழிலேழும் உண்டவெந்தாய்!
எனது ஆவி யார்? யான் யார்? தந்த நீ கொண்டாக்கினையே!"
(நம்மாழ்வார்/ 2-3-4 திருவாய்மொழி)
இதன் பொருள்:
'என்னுள்ளே கலந்து உயிருடன் உறைந்து நீ எனக்கு அருளிய நன்மைகளுக்கு இறைவனே, உனக்கு நான் என்ன கைம்மாறு செய்ய முடியும்?
என் உயிரே உன்னுடையது! அதே எப்போதோ உனக்கு அர்ப்பணித்து விட்டேன். அதன் பிறகு உன் உயிரை நான் உன்னிடமிருந்து மீட்டெடுத்தல் இயலுமோ?
நீ எனது உயிருக்கு உயிரானவன் ஆயிற்றே...
இந்நிலையில் என் உயிர் என்பது என்ன?
நான் என்பது தான் யார்?
அனைத்தையும் எனக்கு அள்ளிக்கொடுத்த நீயே அனைத்தையும் உன்னுடையதாக்கிக் கொண்டு விட்ட பிறகு எனக்கு என்று என்னிடத்தில் என்ன இருக்கிறது?'
பரமாத்மாவான இறைவனும் ஜீவாத்மாவான மனிதனும் கலந்துறையும் இந்த விஸிஷ்டாத்வைதத் தத்துவத்தை இப்படி எளிமையான ஒரு வினாவின் மூலம் அழகுறச் சொல்வது ஆழ்வார்கள் ஆண்ட தமிழின் சிறப்பு.
அவர்கள் மனதில் உறைந்த பக்தியின் சிறப்பு.
No comments:
Post a Comment