Wednesday, 15 February 2017

பாசுரம்-பரவசம்-8

அகநானூறு குறுந்தொகை போன்ற சங்க இலக்கியங்கள் மனிதனின் அகவாழ்வு பற்றியன. காதலும் காதல் சார்ந்தவையும் தான் அவற்றின் களம். தமிழ் மண்ணில் பக்தி இலக்கியம் தோன்றிய காலம் அதற்கு மிகப் பிற்பாடு தான்.

சங்க இலக்கியத்தில் போற்றிப் போற்றப்பட்ட அகம் சார்ந்த பொருள் தமிழ் பக்தி இலக்கியத்திலும் பாடப்பட்டது என்பது சுவாரசியம்.

அட, அது எப்படி? என்று புருவம் உயர்த்தினால் பக்தியையும் காதலையும் ஒரே தட்டில் வைத்து ஆராதித்த ஆழ்வார்களின் பாங்கு இதழ்களை முறுவச் செய்யும்.

அங்கே காதல் என்றால் இங்கே பக்தி.
அங்கே தலைவன்/ தலைவி என்றால்  இங்கே இறைவன்/ இறைவி.

தலைவன் என்ற இடத்தில் கடவுளை நிறுத்தி காதல் என்ற இடத்தில் பக்தியைப் பொருத்தி உண்மையான காதலும் ஆழமான பக்தியும் ஒரே மாதிரியானதென்றும் புனிதமானதென்றும் நிறுவியிருக்கும் வல்லமை தமிழின் பெருமைக்கும் ஆழ்வார்களின் அருமைக்கும் சான்று.

அந்த வகைப் பாசுரங்களில் நம்மாழ்வாரது பதிகங்கள் தனித்து நிற்பவை.

ஒரு பதம் சுவைப்போமா?

"மலர்ந்தே ஒழிந்தில மாலையும் மாலைப்பொன் வாசிகையும்
புலந்தோய் தழைப்பந்தர்
தண்டுற நாற்றி பொருகடல்சூழ்
நிலந்தாவிய எம்பெருமான் தனது வைகுந்தமன்னாய் கலந்தார் வரவு எதிர்கொண்டு வன்கொன்றைகள் கார்த்தன"

இது நம்மாழ்வாரின் பாசுரம்.

இதன் பொருள் எளியது:

"அழகான அந்தக் கொன்றை மலர்கள் இன்னும் மலரவில்லை. பந்தல்களை ஒத்த அந்த மரக்கிளைகளில் பொன்னைப் போன்ற மலர்கள் இன்னும் முகிழ்க்கவில்லை. திருமாலின் உறைவிடமான வைகுண்டத்தை ஒத்தவளே, உன்னுடன் இரண்டறக் கலந்த உன்னவரின் வருகையை எதிர்பார்த்து மட்டுமே அம்மலர்களின் மொட்டுக்கள் மலர்வதற்காகக் காத்துக் கொண்டு இருக்கின்றன!"

தலைவனின் வரவிற்காக காத்திருக்கும் தலைவியிடம் அவளது தோழி பகர்வது போல அமைந்துள்ளது இப் பாசுரம். உண்மையில் மழைக்காலம் வந்தாகிவிட்டது. கொன்றை மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன. ஆனால் கார்காலம் வரும்போது நான் உன்னோடிருப்பேன் எனச் சொல்லிப் பிரிந்து சென்ற தலைவன் இன்னும் திரும்பவில்லை. அந்தக் கவலையில் மூழ்கியிருக்கும் தலைவியை சமாதானம் செய்வதற்காக தலைவி பொய்மையும் வாய்மையிடத்து என்பதாக ஒரு காட்சிப்பிழையை உருவாக்கி உரைப்பதாக நம்மாழ்வார் பாடியுள்ளார்.

"அடியே, உன் உள்ளம் கவர் கள்வன் வரப்போகிறான் என்பதை அறிந்துதான் இம்மலர்கள் மலர்வதற்காக இன்னும் காத்துக்கிடக்கின்றன. பார், அந்த அரும்புகள் அவன் வந்த பிறகே மலரும். கவலை கொள்ளாதே" என்பதாக அவளது சமாதானம் அமைகிறது.

இப்போது இவ்விடத்தில் தலைவனுக்குப் பதிலாக  இறைவனையும் காதல் என்ற உணர்வுக்குப் பதில் பக்தியையும் இருத்திப் பொருள் கொண்டு பாருங்கள், சிலிர்த்துப் போவீர்கள்!

No comments:

Post a Comment