Thursday, 2 February 2017

பாசுரம்-பரவசம்-6

தெய்வத் தமிழ் அமுது-6
--------------

உலகில் அதிகம் விவாதிக்கப்படும் ஒரு விஷயம் கடவுள். அவன் இருக்கிறானா அல்லது இல்லையா என்பதை விட அவன் ஒருவனா என்பதே நோக்கி நிற்கும் கேள்வி.

ஒவ்வொரு மதத்திற்கும் தனித்தனியே கடவுளர்கள். இந்து மதத்திலோ குறைவிலாத எண்ணிக்கையில் இறைவன். அதிலும் எத்தனை வகை? ஒரே கடவுளின் பல அவதாரங்களும் கடவுளே. அதில் ராமன் ஒரு வகை என்றால் கண்ணன் ஒரு வகை. லட்சுமி ஒரு வகை என்றால் சக்தி ஒரு வகை. கல்விக்கு ஒரு கடவுள்.  லட்சுமியில் அஷ்டலக்‌ஷ்மிகள். அய்யனாரும் உண்டு. மாரியம்மாவும் உண்டு. பத்ரகாளியும் உண்டு. அய்யப்பனும் உண்டு. குட்டிக்கண்ணனாகி குருவாயூரில் பரவசப்படுத்தும் திருமால் மீசை தரித்து பார்த்தனுக்கு பாரதப்போரில் தேரோட்டிய சாரதியாக அல்லிக்கேணியில் அருள்பாலிக்கிறான். லிங்க ரூபமாய் சிவனின் தேசமளாவிய தரிசனம் அற்புதம்.

இத்தனை கடவுள்கள் என்ன செய்துவிடப் போகிறார்கள் என்ற கேள்வி சாமானியரின் மனதுக்குள் எழுந்து உடன் வேண்டாமென்று மறக்கடிக்கப்படுகிறது என்னவோ உண்மையே.

இதை இவண்கண் விடல் என்று நினைத்து அதைப்பற்றி யாரோ நம்மாழ்வாரிடம் கேட்டிருக்க வேண்டும்.

பொளேரென்று ஒரு பாசுரத்தில் சொல்லிவிட்டார் ஆழ்வார்.

"அவரவர் தமதம தறிவறி வகைவகை
அவரவர் இறையவர் என அடியடைவர்கள்
அவரவர் இறையவர் குறைவிலர்; இறையவர்
இவரவர் விதிவழி யடைய நின்றனரே!

( 1-1-5 திருவாய்மொழி - நம்மாழ்வார்)

என்ன சொல்கிறார்?

' கடவுளைத் தொழ விரும்புவர்கள் ஒவ்வொருவரும் தங்களது அறிவுக்கேற்றபடி அவனைப்பற்றி அறிந்துகொண்டு, அவரவர் விருப்பத்திற்கேற்ப ஏதேனும் ஒரு தெய்வத்தை வழிபட்டு உய்வார்கள்.

இருப்பினும் அவர்கள் யாரை தெய்வமாக வழிபட்டாலும் சரி, அவரவர் வழிபடும் கடவுளால் அவர்கள் அளவற்ற நன்மையை மட்டுமே அடைவார்கள்.

அவரவர்கள் அவரவர் விதிப்படி ஏதோ ஒரு கடவுளை துதித்து வணங்கினாலும் அவரவர்கள் வணங்கும் நிலையில் அந்தந்த இறைவன் அவரவர் நினைப்புக்கு ஏற்றபடி அருள் தருவான்'

என்ன ஒரு ஆழமான கருத்தை எளிமையாக நாலே வரிகளில் ஆழ்வார் நமது சிற்றறிவுக்கு உணர்த்திவிட்டார் பாருங்கள். நாம் தான் புத்திக் கொள்முதல் கொண்ட கோளாறால் இந்த உண்மையை உணர மறந்தும் மறுத்தும் நான் நம்பும் 'அந்த ஏதோ ஒரு' இறைவன் மட்டுமே உலகத்துக்கு எல்லாம் ஒரே கடவுள் என்றுபிதற்றியும் வெறிகொண்டும் அலைகிறோம்.

இது எப்படி இருக்கிறது?

இப்புவியில் நிலம்சூழ் கடல்பரப்பிற்கு நாம் அடையாளம் காண்பதற்காக விதவிதமாக பெயர்களைச் சூட்டிவிட்டு பிறகு அந்தக் கடல்கள் எல்லாம் வெவ்வேறு நீரால் ஆனது என்று சொல்வது போல!

மாரியோ, மேரியோ, அல்லாவோ, யேசுவொ, சிவனோ, விஷ்ணுவோ, புத்தனோ, ராமனோ நீங்கள் தொழும் கடவுள் யாராக இருந்தாலும் சரி, அன்பை விடுத்து வெறுப்பையும் பகையையும் நீங்கள் உங்களது மனத்தில் புகுத்தினால் உங்களை விட்டு அந்தக் கடவுள்  நீங்குவது நிஜம்.

No comments:

Post a Comment