Wednesday, 26 December 2018

யாதெனில்....3

/விழிகள்/
-----

உள்ளச் சிறையின்
எண்ணங்கள்
கசிந்து வரும்
புறவாசல்.


/திருமணம்/
-------

நாம் வாங்கிய
பின்பு மறுவாரம்
சந்தையில்
அறிமுகமாகும்
புது வரவு.


/கோவில்/
------
வெளியே கை
ஏந்துபவனைத்
துரத்திவிட்டு
உள்ளே
கை ஏந்தி
நிற்குமிடம்.

Monday, 17 December 2018

யாதெனில்...1

/தனிமை/

யாருமற்று
இருப்பதல்ல
தனிமை.

யார் யாரோ
உடனிருந்தும்
நீ
இன்றி
நானிருப்பதே
தனிமை.

---

/வாழ்க்கை/

சாகும்வரை
உயிருடன்
இருப்பதா
வாழ்க்கை?

அது
உயிரோடு
இருக்கும் வரை
வாழ்வது.

-----

/தந்தைமை/

தன் சிசுவைத்
தான்
சுமக்க இயலாத
உள் வலி.

பற்றி வந்த
கைகளை
விடுவித்து
விடை கொடுக்கும்
தவிப்பு.

மெளனமாய் உறைகின்ற
கண்ணீரின்
ஆண் பால்.

யாதெனில்....2

/காதல்/

எனக்காகப் புசித்து,
எனக்காக உறங்கி,
எனக்காகச் சிரித்து,
எனக்காக வாழ்ந்தது
போய்
நான்
உனக்காக
சுவாசிப்பது.

---

/காமம்/

நீயாகிய நானும்,
நானாகிய நீயும்
நாமாகிய போது
ஜீவன்
கூடு விட்டு
கூடு சேர்வது.

-----

/பிரிவு/

பெய்யென
மழை பெய்தாலும்
நிலாவிற்கு
கிட்டாது போன
வானவில்.

Monday, 10 December 2018

தீற்றிய திலகம்

இதென்ன
வானவில்லின்
துண்டொன்று
விண் விடுத்து
மண் புகுந்ததோ?

மழைத்துளி விடுத்த
ஆதவன்
உன் மேல் தெறித்து
விழுந்ததினால் விளைந்த நிறப்பிரிகையோ
நீ?

உன் மென் கன்னக்
கதுப்புகளில்
மிச்சமிருந்த
நாணச் சிவப்புதான்
தீற்றிய திலகமாய்
உன் நெற்றிக்கு
இடம் பெயர்ந்ததோ?

Friday, 7 December 2018

இன்றும் நமதே

கடிகாரம் நிறுத்திவிட்டு
காலத்தைத் தேடுகிறோம்.
திரும்ப வரும்போது
நாட்கள் நகர்ந்திருக்கும்.

அலைபேசி ஏந்தியபடி
அன்பர்களைத் தேடுகிறோம்.
அமர்த்தித் திரும்புகையில்
உறவுகளை இழந்திருப்போம்.

ஓசைகளின் இரைச்சலில்
செவிகளை மூடுகிறோம்.
களைத்துக் கழற்றுகையில்
இதயத்துடிப்பு தேய்ந்திருக்கும்.

கதவுகளைச் சார்த்தியபடி
குளிர்காற்றில் அமிழ்கிறோம்.
மின்விசை ஓயும்போது
தென்றல் கடந்திருக்கும்.

எதிர்காலக் கனவுகளில்
நிகழ் திட்டம் தொலைக்கிறோம்.
தற்காலம் கடக்கும்போது
திசைமாறிப் போயிருக்கும்.

கனவுகளைத் துரத்தியபடி
கடமைகளை மறக்கிறோம்.
ஆண்டுகள் கடந்த பின்னர்
பாடங்கள் அணிவகுக்கும்.

கண்முன்னே நடமாடும்
நிகழ்வுகளைத் துரத்திவிட்டு
கனவுகளில் உலாவரும்
மயக்கங்களில் திளைக்காதீர்.

நேற்று என்பது
வெறும் ஒரு நினைவு.
நாளை என்பது
தனிப் பெரும் கனவு.
இன்று என்பது
என்றும் மிக நன்று.

Saturday, 1 December 2018

வான் நிலா, வா நிலா

நிலவு அழகா?
வான் அழகா?

தாய் மடியில்
சிசு அழகு.
வான் வெளியில்
மதி அழகு.

மண் மீது விழுந்தாலே
மழை அழகு.
வான் மீது தவழாத
நிலழகா?

நிலவற்ற வானுக்கு
எழில் இல்லையோ?
புவி நிழலில்
மறைந்துவிடும்
நிலவுக்கு முகம்
இல்லையோ?

நிலா சூடேறும்
வானத்தின் குளிரூட்டி.
வானம் முகிலெனும்
பொதி சுமந்து
மழை ஈனும் தாய்.

சூரியத்தந்தை
உறங்கச் சென்றதும்
நிலா மகள்
ஆட்டம் போடும் மேடை
வானம்.

கடல் கூடி
கர்ப்பம் தரித்த
வான்மேகங்களின்
கண்ணீர்ப்பிரசவம்
மழை.

வான்மகளின்
நெற்றித் திலகம்
நிலா..

Friday, 30 November 2018

பேசு பொருள்

உயிரற்ற பொருட்களோடு
நீங்கள் என்றாவது
பேசியதுண்டா?

நான் உண்டு.

புகைப்படங்களும்,
திருமண அழைப்புகளும்,
மணல்வெளியும்,
கோப்பைகளும்,
மோதிரங்களும்,
ஆல்பங்களும்,
தாலியும்,
எக்ஸ்-ரேயும்,
லாடங்களும்
பேசுவதை விடவா
ஒரு மனிதன் பெரிதாகப்
பேசிவிட முடியும்?

ஆனந்தம்,த்ருப்தி,
வலி, பசி, 
தோல்வி, தனிமை,
காதல், நட்பு,
கண்ணீர், வெறுமை
என எல்லாமே
பொங்கிப் ப்ரவாகம் எடுக்கும்
அந்த ஜடப்பொருள்களில்
உயிர் இல்லை;
ஆயின்,
உயிர்ப்பு உண்டு.

இப்படியாக
எல்லா ஜடங்களோடும்
எனக்கும்
பேசுபொருள் உண்டு.

ஆனால்
நான் செய்வதையெல்லாம்
தானும் செய்து
கண்ணாடியில் விழும்
அந்தப் பிம்பம் மட்டும்
ஏன் என்னோடு
எதுவும் பேச மறுக்கிறது?

Friday, 23 November 2018

சுவாசம்

அவள் சுவாசம்
என் இதயம் துளைத்து
மூங்கில் விடு தூதானது.

அவள் வாசம்
என் நாசியில் நுழைந்து
உள்ளுக்குள் கள்வெறி
சூல் கொண்டது.

அவள் ஸ்பரிசம்
என் உடலை
எளிதிற் கடத்தியாக்கி
மெய் சுட்டது.

அவள் மெளனம்
என் மனதில்
வேங்குழலாய்
மொழி பெயர்ந்தது.

அவள் நினைவு மட்டும்
என் உயிர் சமைக்க
விறகானது.

சொல்லாமல்
கொள்ளாமல்
என் மூச்சு
வெறும் காற்றாகிவிடும்
அந்த நாளில்
இதயத் துளைகளின் வழி
வெளியேறும்
என் சுவாசம்
அவள் பேரைத் தவிர
வேறு எதை
முனகிவிடப் போகிறது?

Sunday, 14 October 2018

தோணியின் பயணம்


அரங்கில் பார்த்தேன்.
உறைந்து போனேன்.
உள்ளுக்குள்.

சலனமற்ற
ஒரு நதியைப் போல
'96
சுழித்துக் கொண்டு
போகிறது.

அமைதியாக,
ஆரவாரம் இல்லாது,
மெளனமாய்,
இயற்கையே
துணையாய்.

எனது மனமும்
அதன் கூடவே
வழுக்கிச் சென்றது,
படகில்,
கனமாக.

சந்தித்த
அத்தனை மலர்களின்
சுகந்தத்தையும்,
மண்ணின்
வாசனையையும்,
மழையின்
ஈரத்தையும்
தன்மீது சுமந்து
கொண்டு
நகர்ந்து சென்ற
அந்த நதி
ஓரிடத்தில் என்னைக்
கரை சேர்த்தது.

கரையில் என்னை
இறக்கி விட்டு நதியில்
பயணத்தைத்
தன் போக்கில்
அந்தப் படகு
தொடர்ந்தது.

படகைப் போலவே
திரையில்
அவனை விட்டு
அவள் விடை
பெற்றிருந்தாள்.

கண்ணை விட்டுப்
புள்ளியாக
திரையிலிருந்து
அந்தக் காட்சிகள்
மறைந்த பிறகு
நான்
மனம் விழித்தேன்.

எனக்குள்
அந்த ராம்-ஐ
அழுத்தமாக
உணர்ந்தேன்.
அந்த ஜானுவைத்
தொழுதேன்.

இந்நேரம்
அந்தப் படகுக்குச்
சுமை கொஞ்சம்
குறைந்திருக்கும்.

இனி மேல்
அந்த நதிக்கு
அவன்  ஒரு சுமையே
இல்லை.

ஆனால் என்ன,
வீடு திரும்பிய
அவன் நெஞ்சில்
ஒட்டு மொத்த
நதியின் பிரவாகமும்,
பயணித்து வந்த
அந்தப் படகின்
பாரமும் முழுதும்
புகுந்து
கொண்டிருக்கும்.

Saturday, 13 October 2018

விழிகளின் விளி

வலுவாக வலி
பகரும் கணவாய்.

உள்ளத்தின்
வார்த்தைகளற்ற
மெளன மொழி பெயர்ப்பு.

உள்ளச்சிறைக்கு
இமைகளின்
தாழ்.

சினங்கொண்ட சிந்தையின்
எரிதழல்.

சாந்த உள்ளத்தின்
கருணைத் தேக்கம்.

இருதயத்தின்
புறவாயில்.

Monday, 8 October 2018

அசை

ஒவ்வொரு
'ஹலோ'விற்குப்
பின்னாலும்
ஒரு 'குட் பை'
உண்டாம்.

நண்பனின்
ஆட்டோகிராப்
வாசகம்அப்படி
இல்லை என்கிறது.

நண்பியின்
திருமண அழைப்போ
அதை
'ஆமாம்' என்கிறது.

தோழியின் உறவோ
திசையின்றித்
திணறி நிற்கிறது.

மனைவி வழமை போல
'வேலையைப் பாருங்கள்'
என்கிறார்.

செல்ல மகள்
புதிது புதிதாய்
வினாக்கள் கேட்கிறார்.

மருத்துவ அறிக்கை
உடம்புக்கு ஓய்வு
குறைவென்கிறது.

வங்கி இருப்போ
உடல் உழைப்பு
குறைவென்கிறது.

உள்ளே ஒலிக்கும்
வயலின் இசையை
அவன்
ஓசைப்படாமல் ஒளித்து
வைத்துக் கொள்கிறான்,
ஒரு பாவத்தைப் போல.

Thursday, 13 September 2018

நல்வழி

கடவுளரில் க்ருஷ்ணனைப் போல கணபதிக்கும் செல்லம் ஜாஸ்தி.

அவன் அருளோடுதான் எல்லாக் காரியங்களும் துவக்கப்- படுகின்றன.

நல்வழி என்ற தமிழ் நீதி நூலின் கடவுள் வாழ்த்துப் பாடலான

"பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை
நாலும் கலந்துனக்கு நான் தருவேன் - கோலஞ்செய்
துங்கக்கரிமுகத்துத்தூமணியே நீ எனக்கு சங்கத்தமிழ் மூன்றும் தா"

என்ற பாடல் தமிழ் உலகில்  மிகவும் பிரசித்தி பெற்றது.

(கோலம் = அழகு, துங்க = பெருமை மிகுந்த, கரிமுகம் = யானை முகம், தூமணி = தூய மணி, தமிழ் மூன்று = இயல் தமிழ், இசைத் தமிழ், நாடகத் தமிழ்)

பெருமை மிகுந்த யானை முகத்தைக் கொண்ட விநாயகக் கடவுளே! நான் உனக்கு இனிய பாலையும் தெளிந்த தேனையும் வெல்லப் பாகினையும் பருப்பு வகைகளையும் கலந்து படைக்கின்றேன். நீ எனக்கு இயல், இசை, நாடகம் என்னும் மூன்று தமிழையும் தருவாயாக!

என்பதாகவே இப்பாடல் அர்த்தம் கொள்ளப்படுகிறது.

ஆனால் கொஞ்சம் ஆழ்ந்து யோசித்தால் அந்த அர்த்தத்தில் ஒரு ஐயம் எழலாம்.

மனித முயற்சிக்கு கடவுளின் அருள் என்பதே இறை வழிபாட்டின் ஆதார அச்சு.  மனிதன் முயற்சி ஏதும் செய்யாமல் இறையருளை மட்டும் நம்பி எதிலும் வெற்றி காண முடியாது.

இதை  மகாபாரதத்தின் பல கட்டங்களில் கண்ணன் அழகாக உணர்த்தியிருப்பான். கைகளை விடுத்துத் தொழும் வரை பரந்தாமன் பாஞ்சாலிக்குக் கை கொடுக்கவில்லை.

கணிதத் தேர்வுக்கு பயிற்சி செய்யாமல் பிள்ளையாருக்கு 108 தேங்காய்களை உடைப்பதாக வேண்டிக் கொண்டால் காரியம் நடக்குமா?

ஒளவையார் என்ன, நம்மைப் போல மிகச் சாதாரணமானவரா, கடவுளிடம் அப்படிப் பேரம் பேச?அவர் நான்கு பொருட்களைத் தருவதாகக் கூறி, மாறாகத்
தமக்கு மூன்று தமிழையும் அருளும்படி விக்னேஷ்வரனைக் கேட்கிறார் என்பதாக அப்பாடல் பொருள் கொள்வது சரியா?

இறைவனுக்கு உகந்தவற்றைப் படையலிட்டு அவனை வணங்கி, நமது வேணடுதலை வைப்பது ஐதீகம்.

ஐயமில்லை.

பாலையும், தேனையும், பாகையும், பருப்பையும் கலந்து நான் உனக்கு தருவேன் என்று ஒளவை  கூறுவதாக இப்பாடல் அமைந்துள்ளது.

கணநாதா, நீ எனக்கு முத்தமிழைக் கொடுத்தால் உனக்கு  நான் இவையெல்லாம் தருவேன் என்றுதான் கூறுவதாகப் பொருள் தருகிறது இப்பாடல். மாறாக  இவற்றை உனக்குத் தந்துவிட்டேன் என்றோ அல்லது இதோ இவற்றை உனக்கு படைத்திருக்கிறேன் என்றோ அல்ல.

இங்குதான் நம் ஐயம் சற்று வலுப்பெறுகிறது.

நான் படித்த கோபிச்செட்டிப் பாளையம் வைர விழா மேனிலைப் பள்ளியில் ஒரு நாள் இலக்கிய மன்ற விழாவிற்கு
திருமுருக. கிருபானந்த வாரியார் அவர்கள் வந்திருந்தார்கள்.
அவர் இப்பாடலுக்குச் சொன்ன விளக்கம் சாலச் சிறந்ததாக எனக்குத் தோன்றுகிறது.

இயல், இசை, நாடகம் என்ற மூன்று தமிழ்ச் செல்வத்தையும் தனக்கு அந்த முழு முதற்கடவுள் அருள வேண்டுகிறார் ஔவையார்.
அந்தப் பாடலை இப்படி வரி மாற்றிப் படித்துப் பார்ப்போம்.

"கோலஞ்செய் துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீ எனக்கு சங்கத் தமிழ் மூன்றும் தா; 
பாலும் தெளி தேனும் பாகும் பருப்புமிவை நாலும் கலந்துனக்கு நான் தருவேன்."

ஒளவை விநாயகனுக்கு ஒரு சாமான்ய மனிதனைப் போல அந்த இனிய நான்கு பொருட்களைக் கலந்து படையல் ஏதும் படைக்க வில்லை; படையல் படைப்பதாக உறுதியளித்து அவனிடம் பேரம் பேசவும் இல்லை.

தன்னை முத்தமிழ் வித்தகனாக்கு என்று அவனிடம் வேண்டுகிறார்.

எதற்கு இந்த முத்தமிழ் அறிவு வேட்கை?

பொருள் தேடவா?

இல்லவேயில்லை.

பருப்போடு, பால், தேன், பாகு ஆகியவற்றைக் கலந்தால் கிடைக்கும் சுவையான  உணவினைப் போல
முத்தமிழால் தாம் பலப்பல பாடல்கள் இயற்றி தமிழ்ச் சேவை புரிவதற்காகவே அந்த தமிழ் வேட்கை ஒளவைக்கு!
அதற்குத்தான் ஒளவையார் அப்படியொரு வேண்டுதலை வைத்தார் என்றார் வாரியார்.

சரிதானே!

தமிழை முறைப்படி அறிவதே அறிவு!

விநாயகன் அருள் அவனியை நிறைக்கட்டும்!

Sunday, 2 September 2018

செம்புலப் பெயனீர்

குறுந்தொகையில் உள்ள நாற்பதாவது பாடல் மிகவும் பிரபலமானது.

கவிஞர்கள், மேடைப் பேச்சாளர்கள், இலக்கியவாதிகள் என்று பரவலாக அதைப் பலரும் மேற்கோள் காட்டி வருகின்றனர்.

இன்றளவும்.

அப்படி என்ன சிறப்பு அப்பாடலில் உள்ளது? என்று கேட்பதற்கு முன் அப்பாடலை ஒரு தடவை படித்து விடுவோம்.

"யாயு ஞாயும் யார் ஆகியரோ, எந்தையு நுந்தையும்
எம்முறைக் கேளிர்
யானு நீயும் எவ்வழி அறிதும்
செம்புலப் பெயனீர் போல
அன்புடை நெஞ்சம்
தாங்கலந் தனவே"

( குறுந்தொகை 40,
செம்புலப் பெயனீரார்.)

எனது தாய் யார் என்றும், உனது தாய் யார் என்றும் நாம் அறிந்து கொள்ள வில்லை.
உனது தந்தைக்கும் எனது தந்தைக்கும் என்ன உறவு முறை என்பதும் நமக்குத் தெரியாது.
நாம் ஒருவரை ஒருவர் இதற்கு முன்பு அறிந்ததில்லை.
செம்மண் பூமியில் கலந்த மழைத் தண்ணீர் போல அன்புகொண்ட நம் நெஞ்சங்கள் ஒன்றாயின.

இதுவே இப்பாடலின் பொருள்.

ஆனால் ' செம்புலப் பெயனீர்' என்ற வார்த்தைகளின் பொதுவான அர்த்தத்தில் எனக்கு நீண்ட நாளாக ஓர் ஐயம் இருந்து வந்தது.

செம்புலம் என்பது செம்மண் பூமியைக் குறிக்கும் என்று எல்லோராரும் கருதினாலும் என் நண்பர்கள் குழாமிற்கும் எனக்கும் அதில் என்னவோ அவ்வளவு திருப்தியில்லை.

'சரித்தான் போடா, நீ என்ன பெரிய அப்பா டக்கரா?' என்று என்னை நானே திட்டிக் கொண்டு அந்நினைவை விட்டு அகன்றாலும் செம்மண்ணில் மழை நீர் கலந்தால் உருவாகும் செந்நிற நீர் பின்னர் தெளிந்து விடாதா? என்ற வினா தொக்கி நிற்கிறது.

அப்படி என்றால் இந்த ஒப்புமை காதல் நெஞ்சங்களுக்கு எவ்வாறு பொருந்தும்? என்பதும் என்னைக் குடைந்து கொண்டே இருந்தது.

மனதின் ஒரு மூலையில் அந்த சந்தேகத்தை  ஊறப்போட்டு வைத்திருந்தேன்.

சமீபத்தில் திரு. ஜெயமோகன் எழுதிய 'சங்கச் சித்திரங்கள்' என்ற நூலைப் படித்த போது அவர் ஒரு எளிமையான அர்த்தத்தை அந்த வார்த்தைக்கு தந்திருந்தார்.

தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாத அய்யரையும் பிங்கல நிகண்டு- வையும் மேற்கோள் காட்டி "செம்புலம்" என்ற வார்த்தைக்கு 'பாலை நிலம்' என்ற பொருள் உண்டு என்பதால் வறண்டிருக்கும்  பாலை நிலத்தில்  வீழ்ந்த மழை நீரைப் போல காதல் வயப்பட்ட மனங்கள் ஒன்று சேர்ந்துவிடும் என்று தான் செம்புலப் பெயனீரார் அந்தப் பாடலை எழுதியிருக்க வேண்டும் என்கிறார் அவர்.

எனக்கு பாலை நிலம் + மழைநீர்= ஒன்றாதல் என்ற பொருள் காதல் நெஞ்சங்கள் ஒன்றிணைவதற்கு ஏற்ற ஒப்புமையெனத் தோன்றுகிறது.

எது சரி?

செம்புலம் = செம்மண் பூமியா?
அல்லது         பாலை நிலமா?

Friday, 31 August 2018

பாசுரம்-பரவசம் - 13

கடவுளை நம்புபவரும் நம்பாதவரும் கடவுளைப் பற்றி விவாதித்தால் உத்தரவாதமாக இதைக் கேட்கலாம்;-

"நீங்கள் கடவுளைப் பார்த்ததுண்டா?"

"நீ காற்றைப் பார்த்ததுண்டா?"

" அது விஞ்ஞானம்"

" இது மெய்ஞானம்"

"உங்களால் கடவுளை உணர முடியுமா?"

"நீ மின்சாரத்தை எப்படி உணருகிறாயோ, அதே போலத் தான் நான் கடவுளை உணர்கிறேன்".

காலங்காலமாகத் தொடர்ந்து வரும் சர்ச்சை இது.

கடவுள் இல்லை என்று நான் சொல்லவில்லை, ஆனால், கடவுள் இருந்தால் நன்றாக இருக்குமே என்று தான் சொல்கினேன்! என்று ஒரு மாதிரி 'மய்யமாகச்' சொல்லிவைப்பது சமீபத்திய நியோ-நாத்திகம்.

இந்தக் கேள்விகளை ஆழ்வார்கள் எப்படி எதிர்கொண்டனர் என்பது ஒரு சுவாரசியமான தேடல்.

நிறையப் பாசுரங்களில் இத்தேடலுக்கு பதில் தென்படுகிறது.

முதலாழ்வரில் ஒருவரான பேயாழ்வாரைக் கேட்போம்.

"இனி, அவன் மாயன்
என உரைப்ப ரேலும்
இனி, அவன் காண்பறிய னேலும்-
இனியவன்
கள்ளத்தால் மண்கொண்டு
விண்கடந்த பைங்கழலான் உள்ளத்தின் உள்ளே உளன்!"

(83 - மூன்றாம் திருவந்தாதி)

திருமாலனைப் பற்றி யார் வேண்டுமானாலும் எதை
வேண்டுமானாலும்  எப்படி வேண்டுமானாலும் சொல்லட்டும்;
காண முடியாதவன், காணக் கிடைக்காதவன் என்றும், மாயன் என்றும் கூடச் சொல்லிக் கொள்ளட்டும். அவன் என் உள்ளத்தின் உள்ளே உறைந்திருக்கிறான்.
அது போதும் எனக்கு'
என்கிறார் ஆழ்வார்!

மிக எளிமையான ஆனால் ஆழமான கருத்து இது.

உயிர் என்பது என்ன? மூச்சுக் காற்று தானே! சுவாசத்தைப் பார்க்க முடியாது தான்.  அதற்காக அது இல்லை என்றாகிவிடுமா? அதை உணர முடியுமல்லவா! மின்சாரத்தைப் பார்க்க முடியாது. ஆனால் தொட்டால் அந்த மகத்தான சக்தியை உணர முடிகிறதே! பரந்த இவ்வுலகில் நம்மால் பார்க்க முடியாத பொருட்கள், உயிர்கள் எத்தனையோ உள்ளன. அவற்றை நம்மால் கேட்கவோ, உணரவோ, பார்க்கவோ, துய்க்கவோ  முடியாது  என்பதாலேயே அவற்றை இல்லவே இல்லை என்று சொல்ல முடியுமா?
காற்றும் மின்சாரமும் பார்க்க முடியாதவை. வடிவம் அற்றவை. ஆயினும் அவற்றின் பலன்களின் வாயிலாக உணரத்தக்கவை.
இறைவனும் அப்படியே. 'கடந்து உள் உறைபவனே கடவுள்' என்பதே ஆழ்வாரின் பதில்.

இறைவன் நிற்பதும், நடப்பதும், கிடப்பதும் நம் நெஞ்சுளே என்கிறார்கள் நம் ஆழ்வார்கள்.

தெய்வம் என்றால் அது தெய்வம்; சிலை என்றால் வெறும் சிலைதான்
என்றார் கண்ணதாசன்!

உளன் எனில் உண்டு அவன் உருவுகள்.

இலன் எனில் உண்டு அவன் அருவுகள்.

Thursday, 30 August 2018

பாசுரம் - பரவசம் - 12

நாமம் என்றால் ஒருவரின் பெயர்.
பெயர்சூட்டு விழாவை நாமகரணம் என்பர்.

அண்ணா நாமம் வாழ்க என்று எம்ஜியார் சொன்னது அறிஞர் அண்ணா அவர்களின் பெயரை.

ஆங்கிலர் மனிதனுக்கு வைக்கும் பெயர்கள் அஃறிணையாக இருக்கும்.  உ-ம் Blackstone.
தமிழில் பெயர்த்தால் அது மண்ணாங்கட்டி.

தமிழிலும் வித்தியாசமான நாமகரணங்கள் உண்டு.

ஹைகோர்ட் மகாராஜா, உள்ளேன் ஐயா, கும்புடறேன் சாமி என்ற பெயர்களையும் நாம் தற்போது கேள்விப்படுகிறோம்.

நம் தேசத்தில் பெரும்பாலும் கடவுளின் பெயரையே குழந்தைகட்குச் சூட்டுகிறாம்.

ஏன் தெய்வத்தின் பெயர்?  என்ற கேள்விக்கு பெரியாழ்வார் திருமொழியில் ஒரு பதில் உள்ளது.

'மண்ணில் பிறந்து மண்ணாகும்,
மானிடப் போரிட்டு அங்கு
எண்ணமொன் றின்றியிருக்கும்
ஏழை மனிதர்காள்!
கண்ணுக் கினிய கருமுகில்
வண்ணன் நாமமே!
நண்ணுமின் நாரணன் தம் அன்னை நரகம்புகாள்!

(4-6-7 பெரியாழ்வார் திருமொழி)

நாம் பிறப்பதும், தவழ்வதும், நடப்பதும், வாழ்வதும், மடிவதும் பின்பு புதைவதும் இந்த மண்ணிலே. மண்ணோடு மண்ணாய்ப் போகின்ற மனிதரின் பெயரை பிள்ளைகளுக்கு இடுவதா? அவர்கள் மறைந்தால் அப்பெயர்களும் மறைந்துவிடும்.

இறைவனின் இனிய பெயர்களைச் சூட்டினால் பெயரும் நிலைக்கும், நாம் மரித்தபின் நரகமும் போக மாட்டோம் என்கிறார் பெரியாழ்வார்!

நாம் சளைத்தவர்களா என்ன?

தாத்தாவிற்கு/ பாட்டிக்கு அவர்களது பெற்றோர்கள் இறைவனது திருநாமத்தைச் சூட்டினார்கள் அல்லவா?

அந்த மனிதர்களுக்கு சூட்டப்பட்ட இறைவனின் நாமத்தை நம் குழந்தைகட்கு நாம் இட்டால்
இறைவன் நாமமும் ஆயிற்று. பெயர் சொல்லும் பெயரன்/ பெயரத்தியும் ஆயிற்று!

எப்படி?

வளர்ந்ததும் தனது பெயரை அரசிதழில் வெளியிட்டு தனது பெயரை மாற்றிக்கொள்பவர் பலர். வசதி, சுருக்கம், மதமாற்றம் ஆகியவையே அதற்கு முக்கிய காரணம்.

என் அண்ணனுக்கு என் தாத்தா தனது பெயருக்குப் பதிலாக பெருமாள்+நேரு+ ரமணர் நினைவாக 'வெங்கட்ட ரமணானந்தன்' என்று பெயரிட்டார். என் சகோ-வை (அதாங்க ப்ரோ)
முழுப் பெயரைச் சொல்லிக் கூப்பிடுவதற்குள் அவர் அடுத்த தெருவிற்கே போய்விடக் கூடிய அபாயம்  இருந்ததால் அவர் வெங்கட் என்று தன் பெயரைப் பின்னாளில் சுருக்கிக் கொண்டார்.

மகனுக்கு மாமனாரின் பெயரை வைத்துவிட்டு 'அடேய், ராகவா' என்று விளித்து வசைபாட முடியாது என்பதால் எனக்கு 'சுந்தர்' என்று இலவச இணைப்பாக வீட்டுப் பெயர் ஒன்றையும் வைத்தது போல் மற்றொரு பெயர் சூட்டும் வழக்கமும் இங்கு பலருக்கு உண்டு.

ஸ்ரீரங்கத்தில் முப்பெயர் வைக்கும் வழக்கம் இன்றும் உண்டு.
உ-ம் தீபக் @ நாராயணன் @ சுதர்சன். ஆனால்  அழைப்பதென்னவோ வேறுமாதிரி. அது வேறு விஷயம்!

மொத்தத்தில் முன்னோர் பெயரும் கடவுள் பெயலும் ஒன்றாக இருந்தால் ஆழ்வார் வாக்கு நிலைக்கும்.

இல்லையென்றால்?

சொர்கம், நரகத்தை விடுங்கள்.

பெரியவர்களின் பெயர்கள் நிலைக்காது.

பி.கு:

பின்னாளில் நாமும் அவர்களாவோம்!

வார்த்தை சூழ் வாழ்க்கை


'ஹாப்பி பர்த்டே'-களுக்கு
இடையில் தவழ்ந்து வரும்
வாழ்க்கை பின்னர்
ஒரு மையலான 'ஹாய்'-ல் சிக்கி
பின்பு கசப்பான ஒரு 'குட்-பை'யில்
சிதறுண்டுவிடுகிறது.

பிறிதொரு பொழுதில்
ஒரு கங்ராட்ஸ்-ல்
தடம் மாறும் வாழ்க்கை
ஹாப்பி வெட்டிங் டே-யில் நழுவி பழையபடி ஹாப்பி பர்த்டேயில்
தஞ்சம் அடைகிறது.

நடை தளர்ந்து
விஷ் யு ஸ்பீடி ரெகவரி- யில் தடுமாறும் அந்த வாழ்க்கை
இறுதியாக ஆர்ஐபி-யில்
புதைந்துவிடுகிறது.

இதற்கு நடுவில்,
வார்த்தைகளால் சூழ்ந்த
இந்த உலகில்,
அவனுக்கான அவனது நாளை
மனிதன்
எப்போது வாழப்போகின்றான்?

Wednesday, 29 August 2018

ஆற்றுவது ஆற்றாமை பேதமை

வெள்ளிவீதியார்.

சங்க காலப் புலவர்களில் தனித்தவர்.

காரணம், ஒரு தலைவி தனது வேட்கையை வெளிப்படையாகச் சொல்வதாக அவர்  இயற்றிய பாடல்கள்.

அந்த உணர்ச்சியை ஆற்றாமை என்றழைப்பர்.

அவர் இயற்றிய பாடல்கள் மொத்தம் 13 மட்டுமே.

அகநானூற்றில் இரண்டு, குறுந்தொகையில் எட்டு,
நற்றிணையில் மூன்று.

சமகாலத்தில் அவ்வையாரும்
( ஒன்றுக்கும் மேற்பட்ட புலவர்கள் அதே பெயரில் இருந்தனர்),
பிற்காலத்தில் ஆண்டாளும் (தெலுங்கில்) முத்துப்பழனியும் இந்தப் பொருளைப் பற்றிப் பாடியுள்ளனர்.

வெள்ளிவீதியாரின் பசலை குறித்த பாடல் ஒன்று மிகப் பிரசித்தம்.

பசலை என்பது காதலுற்ற தலைவனைப் பிரிந்திருக்கும் பிரிவுத்துயரால் தவைவிக்கு ஏற்படும் நோய்.

குறுந்தொகை 27ம் பாடல் வெள்ளி
வீதியார் எழுதிய ஆற்றாமை பற்றிய சிறப்பான பாடல்.

"கன்றும் உண்ணாது, கலத்தினும் படாது, நல்ஆன் தீம்பால் நிலத்துஉக் காஅங்கு, எனக்கும் ஆகாது, என்னைக்கும் உதவாது,
பசலை உணீஇயர் வேண்டும் திதலை அல்குல்என் மாமைக் கவினே".

இப்பாடலை என் சுவாசக் காற்றே என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற இனிமையான பாடலான 'தீண்டாய், மெய் தீண்டாய்' என்ற பாடலில் ஏ.ஆர்.ரஹ்மான் அழகுறப் பயன்படுத்தியுள்ளார்.

பசுவின் பால் அதன் கன்றுக்குட்டியால் அருந்தப் படாமலும், பாத்திரத்தில் கறக்கப்படாமலும், தரையில் வீணாவதைப் போல தலைவியின் அழகானது அவளுக்கும் பயனின்றி, தலைவனுக்கும் இன்பமளிக்காது பசலை நோய்க்கு இரையாகி விடுகிறதே என்ற ஏக்கமே அதன் பொருள்.

பிரிவுத்துயரைவிடக் கொடுமை யானதாக வீணாகும் இளமையையும் எழிலையும் குறிப்பது இப்பாடலின் மெய்ப்பொருள்.

ஒரே ஆற்றாமைப் பாடலை வெவ்வேறு மாந்தர் பாடுவதாகப் பொருள் தரக்கூடிய மற்றொரு பாடலும் (குறுந்தொகை-44)
வெள்ளிவீதியாரின் புலமைக்குச் சான்று.

"காலே பரிதப் பினவே; 
கண்ணே நோக்கி நோக்கி வாள்இழந் தனவே;
அகல்இரு விசும்பின் மீனினும் பலரே மன்ற, இவ் உலகத்துப் பிறரே".

இப்பாடலின் திணை; பாலை

துறை:  செவிலித்தாய் கூற்றுத் துறை.

வெள்ளிவீதியார் தன்னிலைப் பாடலாக காதற் பொங்கி இப்பாடலைப் பாடியதாகவும், இது செவிலியின் கூற்றல்ல என்றும் சில உரையாசிரியர்கள் கருதுகின்றனர்.

'என் மகளையும் அவளைக் கவர்ந்து சென்ற தலைவனையும் தேடி அளாவிய என் கால்கள் களைத்து விட்டன. துழாவிப் பார்த்த என் கண்கள் அயர்ந்துவிட்டன. இந்தப் பரந்த உலகில் வானத்து வின்மீனைப் போல எண்ணற்று உள்ளதில் நான் எப்படி அவர்களைத் தேடுவேன்?' என்று ஒரு செவிலித் தாய் அரற்றுவதாக இப்பாடல் அமைந்துள்ளது.

இதையே காதலனைப் பிரிந்த காதலி அந்த ஆற்றாமையில் பாடுவதாகவும் இப்பாடலைப் பொருள் கொள்ள முடியும்.

கண்கள் ஒளி குறைந்து போனதாலும், களைப்பாலும்
காணும் ஆடவர் பலரையும் தன் தலைவனே என ஐயப்பட்டு மனக்கவலையால் தலைவி தளர்ந்துவிட்டதாகவும் இப்பாடலைக் கருதுவர் உண்டு.

எவ்வகையில் நோக்கினும் மரபுமீறி ஆற்றாமை என்ற தவிப்பை மண்சட்டியில் கசியும் தண்ணீரைப் போல அல்லாமல், கலத்திலிருந்து பொங்கி வழியும் பாலைப் போல வெளிப்படையாக எழுதியதால்  வெள்ளிவீதியார் தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு ஒரு தலையாய முன்னோடி!