Friday, 30 March 2018

நிலாவின் வானவில்

சொன்ன இடத்தில்
ஏறிக்கொண்டாள்.

'எங்கேயாவது
பரந்த வெளியில்
மலைகளையும்
பெளர்ணமியையும்
பார்க்க வேண்டும்,
உன்னோடு'

நகரைத் தாண்டிய
நால் வழிச் சாலையில்
அந்தப் பாலத்தின்
மத்தியில் வாகனத்தை
நிறுத்தி இறங்கினோம்.

நான்கைந்து அடுக்குகளாய்
நீண்டிருந்த அந்த
மலைத் தொடரின்
ஒவ்வொரு மலையும்
கருமையின் வெவ்வேறு
சாயல்களில் காட்சி தர,
அமைதியாய்
அதன் முகடுகளில்
முழுநிலவு ஆர்ப்பரிக்காது
எழும்பி வந்தது.

விழி விரியப் பார்த்தாள்.
விழி வெளிப் படலம்
பனித்திருக்கப் பார்த்தாள்.
இருள் கவியும் வரை
பார்த்தாள்.

திரும்பினோம்.
வாகனம் வழுக்கி
முன் செல்ல
சாலையில் மற்ற எல்லாமே
விரைந்து பின் சென்றன.
எண்ணங்களைப் போல.

மனதில் உதித்த
வார்த்தைகளை
உதடுகள் உச்சரிக்காமல்
இதயம் தடுத்திருந்தது.

'எப்படி இருக்கிறாய்?'
என்று கேட்க நினைத்து
'எப்படி இருக்கிறது வாழ்க்கை?'
என்று கேட்டு வைத்தேன்.

'இருக்கேன்' என்ற
அவளின் குரல்
உண்மையில்
இரு வரிக் குறள்.

சிந்தனை
வயப்பட்டிருந்தாள்.
மத்யமக் களை
படிந்திருந்தாள்.

'நிலா அழகு
இல்லையா? என்ற
என்னிடம்
'பெளர்ணமிக்கு
வானவில் இருந்தால்?'
என்றாள்.

'உண்மையில்
அது வானவில்லா என்ன?
மழைவில் தானே!'
என்றேன் நான்.

'அது சரி,
உன் கவிதை தான்
நினைவுக்கு வருகிறது'
என்றதோடு நில்லாது
'ராத்திரியில் பெய்யும்
மழைக்கு ஏது வானவில்?'
என்று அதை 
முணுமுணுத்தாள்.

உணவகத்தில்
பழச்சாறு அருந்திய
பொழுதிலும்
உள்ளத்து இரைச்சலை
மெளனம் சிந்தி
மொழிபெயர்த்தாள்.

பாதி வழியில்
சாலை வளைவில்
கண்ணாடிக்கு எதிரே
நிலா நின்று
அழகு காட்டிய போது
வாகனத்தை
நிறுத்த முயன்றேன்.

'நேரம் இல்லை'
என்ற அவளது சொல்லில்
ஒரு தாயின் த்வனி
இருந்தது.

சொன்ன இடத்தில்
இறங்கிக் கொண்டாள்.

மரங்களுக்கு நடுவிலும்
மேகங்களுக்கு இடையிலும்
விட்டு விட்டு கண்ணாமூச்சி
ஆடியபடி தொடர்ந்து
வந்து கொண்டிருந்த
அந்த நிலா
நகர எல்லைக்குள்
நான் நுழைந்தவுடன்
கான்கிரீட் குவியல்களுக்குப்
பின்னால் சிக்கி
மறைந்து போனது.

கூடுகள்
என்னை
எதிர்கொண்டன.

Tuesday, 20 March 2018

மொழி சுமந்த சொல்

தொலைபேசினேன்.

மறுமுனையில்
'ஹலோ' கேட்டவுடன் இணைப்பைத்
துண்டித்தேன்.

ஏன் என்று
கேட்டால் என்னிடம்
ஒரு பதில் இருக்கிறது.

இன்று
கவிதை தினம்.

Sunday, 18 March 2018

பின்னங்கள்...

அவன் அவளை
எதிர்பாராமல்
அந்த உணவகத்தில்
பார்த்தான்.

உடன் இருந்தவன்
கணவனாக
இருக்க வேண்டும்.
அந்தக் குழந்தை
அவர்களுடையதாக
இருக்கவேண்டும்.

கொஞ்சம்
பூசினாற் போல
இருந்தாள்.
பழைய வடிவும்
வனப்பும் அவளிடம்
இருந்து கொஞ்சமாய்
விடை பெற்றிருந்தன.

திடீரென்று அவள்
கணவன் அவளை
வசை மாரி
பொழிந்தான்.

காதல்
மொழிகளையே
கேட்டுப் பழகியிருந்த
செவிகளில்
அவை நெருப்புத்
துண்டுகளாகத்
தெறித்து
விழுந்திருக்கும்.

இதற்குத் தானா நீ...
என்று அவன்
நினைத்த போது
இவள் வந்தாள்.

'அறிவிருக்கா
உனக்கு?'
என்று லட்சார்ச்சனை
துவங்கினாள்.

பையன் கேட்டான்.
'அப்பா பின்னம்- னா
என்னப்பா?'

மனைவிகள் குழந்தைகளின் அம்மாக்கள்

முருகன் டிராவல்ஸ்
நேபாள் யாத்திரையில்
கூட வந்த
அவருக்கு அறுபதும்
அவர் மனைவிக்கு
55ம் இருக்கும்.

ஒரு கணவன் சதா
கத்திக்கொண்டும்
ஒரு மனைவி சதா
கேட்டுக்கொண்டும்
இருக்க முடியுமா
என்றால்
அங்கே அதுதான் நடந்தது.

அவருக்கு
உமிழ்நீருக்குப் பதிலாக
வாய் முழுக்கத்
திராவகம் போலும்.

எதைச் செய்தாலும் குறை.
என்ன பேசினாலும் குற்றம்.
நெற்றிக் கண்
இல்லாத குறை.

தான் மட்டுமே
யோக்கியம் எனவும்
தன் மனைவி
சர்வ முட்டாள் எனவும்
தீர்மானமாய் நம்பும்
ஆண்.

கல்லோ, புல்லோ
எதுவானாலும்
வாய்த்த கணவனே உலகம்
என்று உழலும் பெண்.

எந்தப் பாவி மகன்
இருவருக்கும்
ஜோடிப் பொருத்தம்
பார்த்தானோ?

அந்த கணவன் பிறவி
எனக்கு இரண்யன்
போலத் தோன்றியது.

அவமானத்தை
விழுங்கி
பெண் நீலகண்டனாகி
செயற்கையாகச்
சிரிப்பை ஏந்தியிருந்த
அவருக்காக
எல்லாரும் கடவுளைச் சபித்தோம்.

யாத்திரை முடியப் போகிற
கடைசி நேரங்களில்
தாளாது போனது மனம்.

அருகில் மெல்லச் சென்று
தாழ்ந்த குரலில் கேட்டேன்.
'இந்த நரகத்தைச் சகிக்க
என்ன தான் காரணம்?'

வறண்டிருந்த கண்களால்
என்னைப் பார்த்தார்.
'மொத்தம் ஆறு' என்றார்.
'என்னது?' என்று
நெற்றி சுருக்கிக் கேட்டேன்.

புடவைத் தலைப்பால்
கண்ணைத் துடைத்துக்
கொண்டார்.
ஜன்னல் கம்பியில்
பார்வையைப்
புதைத்துக் கொண்டார்.

பின்பு சொன்னார்.

'குழந்தைகள்'.

Friday, 16 March 2018

நலமாய் வாழ்ந்திரு

நான் பிறந்த
சில வருடங்கள்
கழித்து தான்
நீ பிறந்தாய்.

ஆனாலும்
நீ பிறந்த பிறகே
என் வாழ்வின்
முதல் பூ பூத்தது.

அதிகம் நாம்
சந்தித்ததில்லை.
உனது
குறைந்த பேச்சும்
செறிந்த
பார்வைகளும்
வார்த்தைகளால்
விளக்க முடியாத
விஸ்வரூபம்.

அந்த ஹலோ கூட
நீ சொல்லும்போது
அன்பைச் சுமந்து
வருகிறது.

உன் பெயரோடு
நானும்
உன்னைப்
பின் தொடரும்
வாய்ப்பை நாம்
இழக்க நேர்ந்தது.

அதுவும் உன்
நன்மைக்காக
என்று நான்
உணர்ந்தபின்
இவ்வுலகில்
உன் சந்தோஷம்
தவிர வேறு எதையும்
நான் ஒரு
பொருட்டாகக்
கருதுவதில்லை.

உன் பெயருக்குப்
பின்னால் புதிய
பட்டங்கள்
சேரும் போது
என் மனம்
மகிழ்ச்சியில்
கனக்கிறது.

நீ உவகையில்
முறுவலிக்கும்
போதெல்லாம்
என் மனம் அந்த
'ஏதோ ஒரு பாடலை'
ஓசையின்றி
முணுமுணுக்கிறது.

உன் முகம் வாடிச்
சுருங்கும்
போதெல்லாம்
என் உடல் கொஞ்சம்
எடை இழக்கிறது.

ஒன்று சத்தியம்.

நீ எங்கிருந்தாலும்
சரி,
எப்படி இருந்தாலும்
சரி,
உன்னோடு கோர்த்துக்
கொள்ள முடியாது
போனாலும்
என் இரு கரங்களும்
உனக்காக என்றும்
பிரார்த்தித்துக்
கொண்டே இருக்கும்.

நீ நலமாக
வாழ்ந்திரு.
புதிய சிகரங்களைச்
சேர்.

மகிழ்வான வாழ்வில்
தினந்தோறும்
உனக்குப்
பிறந்த நாள்.
அது எந்நாளும்
எனக்குச்
சிறந்த நாள்.

Wednesday, 7 March 2018

பெண்ணே...

பெண் இன்றி நிலைக்காது வாழ்வு.
பெண்ணின்றி சிறக்காது அன்பு.
பெண்ணின்றி சுரக்காது மனிதம்.
பெண்ணின்றி சிறக்காது அகிலம்.

பெண்
மகிழ்ச்சியைக் கூட்டுகிறாள்.
துயரங்களைக் கழிக்கிறாள்.
திட்டங்களை வகுக்கிறாள்.
சேமிப்பைப் பெருக்குகிறாள்.

அதனால் தான்
நாம் பின்னங்கள் ஆகாமல்
முழுமையாய் இருக்கிறோம்.

பெண்களே,
ஒரு கையில் பூங்கொத்து
கொடுத்துவிட்டு
மறுகையில் விண்ணப்பம்
ஒன்றை அளிக்கிறேன்.

உங்கள் மகள்களுக்கு
சுதந்திரத்தின் எல்லைகளை
அறிமுகப்படுத்துங்கள்.
சிறகு விரித்து அவர்கள்
விண்ணளாவட்டும்.

இது ஒரு பெண்ணைப் பெற்ற
தகப்பனின் கனவு.

உங்கள் மகன்களுக்கு
சக பெண்களை
மதிக்கக் கற்றுக் கொடுங்கள்.

இது ஒரு பெண்ணைப் பெற்ற தகப்பனின் தவிப்பு.

ஏன் இந்தக் கோரிக்கை
ஆணுக்கு இல்லை?

ஒரு ஆண் மகனை
பாசத்தால் வசப்படுத்தி
அன்பினால் வழி நடத்த
பெண்ணால் மட்டுமே
இயலும்.

எல்லாப் பெண்களையும்
ஆண்கள்
சகோதரியாகக்
கருதக் கூட வேண்டாம்.
அவர்களை மனிதியாக
மதிக்க மட்டுவாவது
கற்றுக் கொடுப்பது நலம்.

இது
இதுகாறும் நாம்
செய்யத்தவறிய ஆனால்
என்றென்றும்
செயத்தக்க செயல்.

தினம் தினம்...

பெண்கள் தினம் என்பது பிறந்த நாள் போலவோ அல்லது நீத்தார் நினைவு நாள் போலவோ வருடத்தில் ஒரு நாள் மட்டும் அனுஷ்டிக்கப்படும் நாள் அல்ல.

வருடம் முழுவதும், ஏன் தன் வாழ்நாள் முழுவதும், ஒவ்வொரு ஆணும் பெண்களுக்கான மரியாதையையும், அவளது உரிமைகளையும், அவளது கண்ணியத்தையும் மதித்தும், காத்தும், ஆராதிக்கக் கடமைப்பட்டவன் என்பதை
ஆண்கள் மறந்து விடாமல் இருக்கவும் இந்த நாள் தேவைப்படுகிறது.

சக பெண்ணை மதித்து அவள் முன்னேறக் கைகொடுத்து
தம்மைப் போல மற்ற பெண்களும் முன்னேற வழிகாட்ட வேண்டிய தார்மீகக் கடமை ஒவ்வொரு பெண்ணுக்கும் உள்ளது என்பதை பெண்களுக்கு வலியுறுத்தவும் இந்த நாள் தேவைப்படுகிறது.

என் கருத்தில் woman's lib (பெண் விடுதலை, பெண் உரிமை) ஆகியவற்றை விட women empowerment என்ற சொல்லே நனிசிறந்தது என்பேன்.

அதன் பொருள்  என்ன?

முண்டாசுக் கவிஞனை விட women empowerment என்பதை வேறு யாரும் தெளிவாகச் வரையறுத்துவிட முடியாது.

பாரதி சொன்னான்;

'பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்
பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்.
எட்டும் அறிவினில் ஆணுக்கு பெண்ணிங்கே
இளைப்பில்லை, காண் என்று கும்மியடி'

இந்தக் கருத்தை வலியுறுத்தவும் அதை சாதித்துக் காட்டவும் சக மனிதர்களுக்கு இன்னும் நாம் நினைவூட்ட வேண்டியிருக்கிறது என்பதும் ஒரு சமூக அவலமே.

அதைக் களையவே இந்த நாள்.

If we must celebrate a day for women, let us celebrate freedom from stereotypes, from expectations, from idolisation, from sacrifice.

Stop congratulating women for being the secret behind a successful man...
Start saluting them for being successful. 

Stop saying the mother is sacred for all the sacrifices she makes...
Try to reduce those sacrifices.

Stop justifying her necessity to multi task. Give her a chance not to.

Stop making her look at herself through a conveniently male viewpoint.

Stop praising her roles as mother, wife, daughter, sister.

Celebrate her as an individual, a person, independent of relationships.

Celebrate the essence of womanhood, each day, every day!

பாரதி கண்ட சக்தியாக
வாழ்ந்து காட்டுங்கள் தோழியரே!

ஆண்களின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கட்டும்!

வாழ்த்துகள்.

Tuesday, 6 March 2018

முயல் , ஆமை

அத்தனை பெரிய வீட்டுக்கு
வாயிற்சுவர் சிறியது.

அத்தனை பெரிய சுவருக்கு
நிலைக் கதவு சிறியது.

அத்தனை அகலக் கதவுக்கு
பூட்டு சிறியது.

அத்தனை பெரிய பூட்டுக்கு
சாவி சிறியது.

பெரிய வீட்டுக்கு
சின்னதொரு
சாவியால் வழி தர
முடியும் என்றால்
மிகப் பெரிய
சோதனைகளுக்கு
தீர்வு தர
சிறியதொரு மூளையால்
முடியாதா?

சாவியின் அளவைப் பாராதே.
அதன் திறனைப் பார்.

ஊசியின் துளியளவு
காதுகளைக் கடந்து
செல்லும்
மெலிதான நூல் தானே
ஆடைகளைத் தைக்கிறது!

அத்தனே ஏன்,
நீயே
ஒரு சிறு துளி
உயிரணுவில் இருந்து
பிறந்தவன் தானே.

உன் உயிரை நீயே
மாய்த்துக் கொள்ளும்
வழிகளை
கை கொண்டு
எண்ணிப் பார்த்தால்
விரல்கள் மீதி இருக்கும்.

ஆனால்
வானத்தின் கீழே
வாழ்வதற்கு உள்ள
எண்ணற்ற வழிகளி்ல்
ஒன்று கூடவா
உனக்கென இல்லை?

முடியும் என்றால்
பயிற்சி செய்.
முடியாத போது
முயற்சி செய்.

ஒன்றை மட்டும்
மனதில் நிறுத்து.

முயல் ஜெயிக்கும்.
ஆமை கூட ஜெயிக்கலாம்.
ஆனால் முயலாமை?

Monday, 5 March 2018

காதலைச் சொல்

எப்படிச் சொல்வாய்
என்று கேட்கிறாய்.

மண்டியிட்டு
மலர்க்கொத்து
கொடுத்தா?

கவிதையாகக்
கடிதம் எழுதியா?

மெளனமாகப்
பார்வையினால்
மட்டுமா?

அவ்வாறு காதலைச்
சொன்னவர்கள்
என்னை மன்னிப்பாராக.

கடிதங்களில் உள்ளவை
நான் பேசாத வரை
உயிரற்ற எழுத்துக்கள்
மட்டுமே.

மலர்க் கொத்துக்கள்
எல்லாம்
உன் ஸ்பரிசம்
படாத வரை
மக்கிய குப்பைகள்
மட்டுமே.

வெற்றுப் பார்வைகளால்
என் அன்பை
மொழிபெயர்த்து விட
முடியுமோ என்ன?

இல்லவே இல்லை.

என் மொழியும்
அது விதைக்கும்
எண்ணங்களும்
தனித்தவை.

எனக்காக நீ
தனித்தும் தவித்தும்
காத்திருக்கும்
ஒரு பொன்
பொழுதில்,
உன்னருகில் வந்து,
காற்றுப் புகாத
இடைவெளி விட்டு,
உன் சில்லிட்ட
மென் விரல்களைக்
கோர்த்தபடி,
இடையோடு
உன்னைச் சேர்த்து
ஒரு கை இடை தாங்க
மறு கரமோ
பிடரியில் பயணித்து
சார்த்தியிருக்கும்
உன் விழிகளைத்
தாங்கிய உன்
தலையை உயர்த்தி
செவி மடல்களை
வருடியபடி
உன் செவிகளில்
நமக்கான அந்தக்
கவிதையை
மெலிதான குரலில்
என் அன்பெல்லாம்
வழித்துத் திரட்டி
நான்
சொல்லச் சொல்ல
பஞ்சினும் மெலிதான
உன்னிரு
நெஞ்சகங்களைத்
தாண்டி உன் இதயம்
உரக்கத் துடிக்கும்
ஓசையே
திரிபுடத் தாளமாக,
உன் இதழ்கள்
துடித்து, நடுங்கி
அடங்க உந்தன்
செவ்விதழ்களை
என் உதடுகள்
கொண்டு நான்
பற்றியிழுத்து
ஆழமாய் ஒரு
முத்தம் பதிக்கும் போது
என்னையும் முந்தி
உன் இருதயம்
என் காதில்
உந்தன் காதலை
அழுந்தச் சொல்லும்
அந்தத்  தருணத்தில்
நானும் என் காதலை
செவ்வனே சொல்லி முடித்திருப்பேன்.

காதலைச் சொல்லும்
வழி முத்தமே.
இல்லை இல்லை..
முத்தங்களே.....

Saturday, 3 March 2018

இரண்டாவது இதயம்

மருத்துவர் வேறு
என்ன சொல்லியிருந்தாலும்
நான் இவ்வளவு
கலங்கியிருக்க மாட்டேன்.

என் கால்களுக்கு
கொஞ்சம் ஓய்வு
கொடுக்கச் சொல்லிவிட்டார்.

கால்களை
இரண்டாவது இதயம்
என்கின்றார்.

என் செய்வேன்!
மூளையைவிட
நான் அதிகம்
பயன்படுத்துவது
என் கால்களை
அல்லவா!

இருதயத்தைவிட
நான் அதிகம் மதிப்பது
பாதங்களை அல்லவா!

எடுத்து வைக்கும்
ஒவ்வொரு அடியும்
மூளையைச் செதுக்கும்
உளிகளின் தெறி
அல்லவா!

என் பார்வையின்
வீச்சு அதிகமாவது
பாதங்கள்
தரையை அளாவும்
போது தானே.

என் நுரையீரல்
அதிகம் காற்றை
நிறைப்பது
பயணங்களின்
போது தானே.

பாதையின் தூரம்
அதிகமாகும்
தருணமெல்லாம்
என் மனதின்
கொள்ளளவு விரியாதா?

பயணத்தின்
எல்லைகளை என் கால்கள்
விஸ்தரிக்கையில்
என் உலகம் தானாகவே
விசாலமடைகிறதே.

கால்களுக்கு ஓய்வு
என்பது என் சிந்தனைக்கு
வேகத்தடையன்றோ?

அது கற்பனைக்
குதிரைகளுக்கு
நான் இடும்
கடிவாளம் அன்றோ?

எச்சரிக்கைகளை மீறி
நூறடி கடந்தேன்.
என் பாதங்கள்
மூளையிடம் கெஞ்சின.
என் மனமோ
இரக்கம் இன்றி
கோரிக்கையை
ஏற்க மறுத்துவிட்டது.

இப்படியாக
மனதிற்கும்
மூளைக்குமான
முரண்பாடுகளில்
நகர்கிறது நாட்கள்.

ஆனாலும்
வானத்தை வாசிக்கவும்,
காற்றோடு களிக்கவும்,
நிலாவோடு உலாவவும்,
நட்சத்திரங்களோடு நடக்கவும்,
அந்திவானைச் சந்திக்கவும்
அனு தினமும்
நடந்தாக வேண்டும் எனக்கு.

கால்களே,
சற்று இளைப்பாறுங்கள்.

ஒரு சிறிய
மருத்துவ இடைவேளைக்குப்
பிறகு லாடங்கள்
மாட்டிக்கொண்டாவது
நாம் தொடர்வோம்.

Friday, 2 March 2018

மகிழ்ச்சி

ஒரு
சந்தேகம் எழுந்தது.
என்
உறக்கம் தொலைந்தது.

சந்தோஷம் என்றால்
என்ன?

மனைவியைக்
கேட்டேன்.
கவலையற்று இருப்பதே
மகிழ்ச்சி என்றாள்.

நண்பனைக் கேட்டேன்.
பிடித்ததைச் செய்தல்
மகிழ்ச்சி என்றான்.

மகளைக் கேட்டேன்.
நலமான வாழ்வே
சந்தோஷம் என்றாள்.

தோழியைக் கேட்டேன்.
நாம் நாமாகவே இருத்தல்
மகிழ்ச்சியாம் என்றாள்.

காதலரைக் கேட்டேன்.
உள்ளங்கவர் கள்வரை
கடிமணம் புரிவது
என்றும் ஆனந்தம்
என்றார்.

பெரியவர்களைக் கேட்டேன்.
முதியோர் இல்லம்
புகாதிருத்தல் செளக்கியம்
என்றார்.

இளைஞரைக் கேட்டேன்.
மகிழ்ச்சி என்பது
வீடு, வேலை, பணம்
என்றார்.

குழந்தைகளைக் கேட்டேன்.
பலூன், ஐஸ்கிரீம், சாக்கலெட்
தவிர
பள்ளிக்கு விடுமுறையும்
செம ஜாலி என்றனர்.

ஆனாலும்
எந்தப் பதிலிலும்
உடன்பாடில்லை
எனக்கு.

அதிகாலையில்
இலக்கின்றி நடைபோட்டுக்
கிளம்பினேன்.
எங்கெங்கோ சென்றேன்.
அலைந்து திரிந்தேன்.

பறவைகளைச்
சந்தித்தேன்.
விலங்குகளைக்
கவனித்தேன்.
அருவியில் குளித்தேன்.
வெயிலில் ஓடினேன்.
தொடுவானம் தேடினேன்.
இயற்கையை ரசித்தேன்.
சுனை நீரைப் பருகினேன்.
பழம் கொத்தித் தின்றேன்.

வானத்தை விழிகளாலும்
பூமியைக் கால்களாலும் அளந்தேன்.

ஆனாலும்
மகிழ்ச்சி என்றால்
என்னவென்று
கிஞ்சித்தும் புரியவில்லை.

இருள் வந்தது.
பயம் வந்தது.
வலி வந்தது.
களைத்திருந்தேன்.
வீடு திரும்பினேன்.

வயிறாரப் புசித்தேன்.
கால்நீட்டி அமர்ந்தேன்.
மனம்விட்டுப் பேசினேன்.
நிம்மதியாகத் தூங்கினேன்.

என்னவோ தெரியவில்லை,
சந்தோஷமாய்
இருந்தது.

கூட வரும் நிலா

ரயில் பயணத்தில்
மரங்களும் கட்டிடங்களும்
பின்னே சென்று
மறைந்து விட,
கூடவே வரும்
நிலாவைப் போல
நீ.

சந்தித்தோர் எல்லோரும்
ஒரு கட்டத்தில்
விடைபெற்று நின்று போக,
உன் நினைவுகள் மட்டும்
எப்போதும் என்னுடன்.

தொடுத்து வைத்த
பவழ மல்லிகைகள்
படங்களில்
ஏறிய பின்னும்
கைகளில் தொடரும்
வாசனையாக
உன் ஞாபகம்.

என்னையறியாது
நெஞ்சில் நிறைந்த
அந்தப் பாடலை
என் உதடுகள்
உச்சரிக்கும்போது
கண்ணில் மின்னும்
மின்னலாய்
உன் பிம்பம்.

மரித்த பின்
என் ஆன்மா
எப்படி உன் நினைவுகளைச்
சுமக்கும் என்பதறியாது
சாகாமல் இருக்கிறது
என் ஜீவன்.

Thursday, 1 March 2018

இப்படிக்கு நான்

அது
என்னுடைய
நெடுநாள் தோழன்.

சொல்லப்போனால்
அது மட்டுமே.

அது
என்னுடன் தான்
பிறந்திருந்தது.
ஆதலால் அது
என்னைத் தனித்திருக்க
அனுமதிக்காது.

அதற்கு இருட்டு
என்றால் பயம்.
இருளில் அது
என்னுள் ஓடி
ஒளிந்து கொள்ளும்.

எனவே
எனக்கும் இருள்
என்றால் பிடிப்பதில்லை.
நாங்கள் சேர்ந்தே
வெளிச்சம் தேடி
அலைகிறோம்.

அது என்னோடு
விளையாடும்.
என்னைப் பழிக்கும்.
பேசும். பாடும்.
நடிக்கும். புலம்பும்.
ஏமாறும். கதறும்.

ஆனால்,
எல்லாமே
மெளனமாக.
ஓர்
ஊமையாக.

எங்கேயோ, எதுவோ....

எதுவோ....
-----------

இல்லாத ஒன்றை
எப்போதும்
சுமந்து செல்கிறேன்.

கனக்கிறது மனம்.

அதைத் தூர எறிய
ஒரு வெளி வேண்டி
எங்கெங்கோ
அலைகிறேன்.

லேசாகிறது மனம்.

சில நொடிகளில்
முழுமையாகி
மறுகணமே
பின்னமாகிறேன்.

ஆனாலும்
என்னிலிருந்து விலகி
நானே என்னை
வேடிக்கை பார்க்கிறேன்.

இருந்தும் இல்லாமல்
இருக்கிறது
என் மனமாகிய நான்.

சலனம்

இந்தக் கதையைப் படித்த உடன் உங்களுக்கு என்ன தோன்றியது?

கதைக்குள் ஒரு கதையாக நான் இதைப் படித்தேன்.
------------------

ஒரு சிற்றூர். அழகானது.

அங்கே ஒரு ஏரி.  அதுவும் அழகானது.

அவ்வூரில் ஒரு இளைஞன். அவனும் அழகானவன். மிகவும்.

தன் எழில்மிகு தோற்றத்தின் மீது அவனுக்குத் தணியாத மோகம் உண்டு.

அனுதினமும் அவன் அந்த ஏரிக்கரையில் மண்டியிட்டு அமர்ந்து சலனமற்ற அதன் தண்ணீரில் தன் வடிவைப் பார்த்து ரசித்து வந்தான்.

ஒரு நாள் அவ்வாறு தன் அழகைத் தானே ரசித்துக் கொண்டிருக்கும் போது ஏரியில் தவறி விழுந்து, முழுகி இறந்துவிட்டான்.

அங்கு உலா வந்த வன தேவதை அது வரை ருசியான குடிநீராக இருந்த அந்த ஏரி திடீரென கரித்துக்கொட்டும் உப்புத் தண்ணீராக மாறிவிட்டதை அறிந்தாள்.

ஏரியிடம் கேட்டாள்;
' ஏன் அழுது கொண்டே இருக்கிறாய்? உன் கண்ணீரினால் உன் உதிரம் கரிக்கிறதே...'

ஏரி விசும்பியபடி சொன்னது:

'அந்த இளைஞனின் மரணம் என்னைத் தீவிரமாகப் பாதிக்கிறதே...நான் அழாமல் என்ன செய்ய?'

வன தேவதை சொன்னாள்:

'அட, பரவாயில்லையே, காட்டில் உள்ள நாங்கள் ரசிக்காத அவனது வனப்பை நீ மட்டும் நயந்தும் வியந்தும் ரசித்திருக்கிறாயே.... உன் துக்கம் அர்த்தமுள்ளது தான்'

' என்னது, அவன் அவ்வளவு அழகாகவா இருந்தான்?' என்று ஆச்சரியப்பட்டுக் கேட்டது ஏரி.

'அவன் அழகைப் பற்றி உன்னைவிட வேறு யார் அறிவார்?
தினந்தோறும் உன் கரைகளில் அமர்ந்து உன்னில் பார்த்துத் தானே அவன் தன் அழகை ரசித்து வந்தான்!' என்றாள் வன தேவதை.

ஏரி ஒரு நீண்ட மெளனத்தில் ஆழ்ந்தது. பின் சொன்னது:

'அவனுக்காகத் தான் அழுதேன். உண்மைதான்... ஆனால் ஒருநாளும் நான் அவனது அழகைப் பார்த்து ரசித்தது இல்லை'

வன மகள் அதிர்ச்சி அடைந்தாள். ஏரியைக் கேட்டாள்:

'அவனிடம் வேறு என்ன தான் பார்த்தாய்?

ஏரி சொன்னது;

'ஒவ்வொரு முறையும் அவன் என் கரை மீது மண்டியிட்டு அமர்ந்து என்னைப் பார்த்த போதொல்லாம்
அவனது கண்களில் வழியே பிரதிபலித்த என் அழகையல்லவா அல்லவா நான் ரசித்தேன்?'

அந்த ஏரியில் இப்போது எந்தச் சலனமும் இல்லை.