Friday, 16 March 2018

நலமாய் வாழ்ந்திரு

நான் பிறந்த
சில வருடங்கள்
கழித்து தான்
நீ பிறந்தாய்.

ஆனாலும்
நீ பிறந்த பிறகே
என் வாழ்வின்
முதல் பூ பூத்தது.

அதிகம் நாம்
சந்தித்ததில்லை.
உனது
குறைந்த பேச்சும்
செறிந்த
பார்வைகளும்
வார்த்தைகளால்
விளக்க முடியாத
விஸ்வரூபம்.

அந்த ஹலோ கூட
நீ சொல்லும்போது
அன்பைச் சுமந்து
வருகிறது.

உன் பெயரோடு
நானும்
உன்னைப்
பின் தொடரும்
வாய்ப்பை நாம்
இழக்க நேர்ந்தது.

அதுவும் உன்
நன்மைக்காக
என்று நான்
உணர்ந்தபின்
இவ்வுலகில்
உன் சந்தோஷம்
தவிர வேறு எதையும்
நான் ஒரு
பொருட்டாகக்
கருதுவதில்லை.

உன் பெயருக்குப்
பின்னால் புதிய
பட்டங்கள்
சேரும் போது
என் மனம்
மகிழ்ச்சியில்
கனக்கிறது.

நீ உவகையில்
முறுவலிக்கும்
போதெல்லாம்
என் மனம் அந்த
'ஏதோ ஒரு பாடலை'
ஓசையின்றி
முணுமுணுக்கிறது.

உன் முகம் வாடிச்
சுருங்கும்
போதெல்லாம்
என் உடல் கொஞ்சம்
எடை இழக்கிறது.

ஒன்று சத்தியம்.

நீ எங்கிருந்தாலும்
சரி,
எப்படி இருந்தாலும்
சரி,
உன்னோடு கோர்த்துக்
கொள்ள முடியாது
போனாலும்
என் இரு கரங்களும்
உனக்காக என்றும்
பிரார்த்தித்துக்
கொண்டே இருக்கும்.

நீ நலமாக
வாழ்ந்திரு.
புதிய சிகரங்களைச்
சேர்.

மகிழ்வான வாழ்வில்
தினந்தோறும்
உனக்குப்
பிறந்த நாள்.
அது எந்நாளும்
எனக்குச்
சிறந்த நாள்.

No comments:

Post a Comment