கண்ணீர் என்பது உள்ளத்தில் ஊற்றெடுக்கும் துயரத்தின் மொழிபெயர்ப்பு. அதோடு தன்னிரக்கமும் தனிமையும் சேர்ந்து விட்டால் அதனுடைய வீரியமும் வீச்சும் மிகும்.
1990ல் சென்னை திருவல்லிக்கேணியில் ஒரு விடுதி வாசியாக நான் வாழ்ந்த காலம். என் அறைக்கு எதிரே இருந்த ஓர் அறையில் சென்னை வானொலி நிலையத்தில் பணிபுரிந்து வந்த மலையாளிகள் இருவர் தங்கியிருந்தனர்.
ஒரு ஞாயிறு அன்று மாலையில் அவர்களைத் தேடி ஒருவர் வந்தார்.
சோகத்தில் முழுகி வளர்ந்தவராகவே பேசினார். துயரத்திற்கு வடிகாலாக சில மடக்குகளை உள்ளே தள்ளியிருந்தார். ஆனாலும் தெளிவாகவே பேசினார்.
தான் சங்கீத ஞானம் உள்ளவன் என்றார். நாங்கள் அவரை சோதித்துக் களியாக்கும் நோக்கத்தில் இருக்க, திடீரென்று ஒரு சவால் விடுத்தார். ஒருவர் ஒரு situation சொல்லவேண்டும். அதற்கு அவர் ஒரு மெட்டுப் போடுவார். நான் அந்த மெட்டுக்குப் பாடல் எழுதவேண்டும். அதை மற்றொருவர் பாட வேண்டும்.
அது தான் போட்டி.
ஒரு நண்பர் அந்த அன்பரின் துன்பத்தையே situation ஆக விவரிக்க அவர் தொடைகளைத் தட்டியபடி பெருங்குரல் எழுப்பி ஒரு மெட்டுப் போட்டார். மற்றொரு நண்பர் அந்த மெட்டை 'ஹம்மிங்' செய்து பார்க்க அது இனிமையாகவே இருந்தது...
அதற்கு நான் பாடல் எழுத எடுத்துக்கொண்ட நேரம் 20 மணித்துளிகள்.
கவிதையாகவா எழுதப்பட்டது? வெறும் பாடல்தானே!
நள்ளிரவு தாண்டியும் அவர் அதைத் திரும்பத் திரும்ப பாடிக்கொண்டே இருந்தார்....
அதன் பிறகு அவர் அங்கு வரவில்லை.
சில காலம் கழித்து மன அழுத்தம் தாங்காது அவர் தற்கொலை செய்து கொண்டாரென்று தெரியவந்தது....
நினைக்கும் போதெல்லாம் விழிகளில் மெலிதாக ஈரம் படரும்..
-----
தன் உயிரை மாய்த்துக் கொள்ள நினைப்பவர்களுக்கு ஒரே ஒரு கேள்வி:
தூக்கு, விஷம். தீ, ரயில் என்று சாவதற்கு இந்தப் பரந்த உலகில் எத்தனையோ வழிகள் இருக்கும் போது வாழ்வதற்கு உங்களுக்கு ஒரு வழி கூடவா இல்லை?
-----
இதோ அந்தப் பாடல்...
-----
பி.கு.:
இது வாசிக்க மட்டுமே.
கட்டுமரப் பூக்கள்
-------
நானொரு கட்டுமரம் தான்.
கட்டுப்பட்ட பட்ட மரம் தான்.
தண்ணீரிலே தினந்தோறும் மிதந்தாலும்,
மற்றவரின் சுமைகளையே சுமந்தாலும்,
கட்டு மரம் துளிர்ப்பதேது செல்லம்மா!
பூவாய்ச் சிரிப்பதெங்கே சொல்லம்மா!
பிறந்ததும் துடிப்புடன் நான் கண் திறந்தேன்.
உலகமும் தன் கண்களை ஏனோ மூடியது.
இருளே எனக்கு நாளும் வெளிச்சமானது.
முகாரிகளே மோகனமாய் மாறிவிட்டது.
ஏமாற்றிவிட்டது.
உதயமானபோது வாழ்வு அஸ்தமித்தது.
ஜனனமான போது ஜீவன் மரித்துப் போனது.
பார்க்கும் முகத்தில் எல்லாம் நானும் பாசம் தேடினேன்.
அணுகும் மனிதரிடத்தில் நாளும் அன்பை நாடினேன்.
அடிபட்டுத் திரும்பினேன்.
விடியல் பார்த்து சிரிக்க மனது ஆசைப்பட்டது.
கிழக்கு மட்டும் எனக்கு நித்தம் கிட்ட மறுத்தது.
கேள்விகளே மனதுக்குள்ளே நிலைத்துவிட்டன.
பதில்கள் மட்டும் வெளியுலகில் உலவுகின்றன.
என்னைக் காணவில்லையே!
No comments:
Post a Comment